வெள்ளி, 13 டிசம்பர், 2024

நீங்கள் சாப்பிடும் உணவு அதிக AGE உள்ள உணவா?

 

நீங்கள் சாப்பிடும் உணவு அதிக AGE உள்ள உணவா?

 

அதிக கிளைகேசன் முடிவு பொருட்கள்  ( Advanced Glycation end products - AGE )  உள்ள உணவுகள் குறிப்பாக அதிக பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள் சர்க்கரைநோயினை ஏற்படுத்துவதாக அண்மைக்கால ஆய்வு தெரிவிக்கிறது. அது என்ன அதிக AGE  உள்ள உணவு?

நம்முடைய உணவு பெரும்பாலும் ஆவியில் வேகவைத்தல், அவித்தல் முறையில்  செய்யப்படுபவை ஆகும். இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை இந்த தலைமுறையினரிடம் சொல்லிப்பாருங்கள். ஏதோ கேட்கக்கூடாததை கேட்ட மாதிரி ஓட்டம் பிடிப்பார்கள்.

கலர் கலராய் கண்டதை தூவி கண்ட எண்ணெயில் தூக்கிப் போட்டு வறுத்து எடுக்கும் வாயில் நுழையாத பெயர் கொண்ட உணவுகளை சப்பு கொட்டி அல்லவா சாப்பிடுகிறார்கள். சுவைக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் நாவின் நரம்புகளைத் தூண்டச் செய்கின்றன. தொடர்ந்து சாப்பிட அழைக்கின்றன.

இப்படி அதிக வெப்பநிலையில் சமைக்கும்போதோ நீண்ட நேரம் வறுக்கும்போதோ சர்க்கரை மூலக்கூறுகள் கொழுப்பு அல்லது புரத மூலக்கூறுகளுடன் சேரும்போது உருவாகும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை கிளைகேசன் முடிவு பொருட்கள் ( Advanced Glycation End products AGEs ) என்கிறார்கள். அது நீரிழிவு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக அண்மை ஆய்வுகள் மூலம் தெரிய வருவதாக சென்னை நீரிழிவுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர்.வி.மோகன் தெரிவிக்கிறார்.  ( தி இந்து ஆங்கிலபதிப்பு ; 09-10-2024)


 

அதிக கிளைகேசன் பொருட்கள் உள்ள உணவுடன் ஒப்பிடும்போது குறைந்த கிளைகேசன் பொருட்கள் உள்ள உணவுகள் சர்க்கரை நோய் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகளை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கிளைகேசன் பொருட்கள் உள்ள உணவுகளான பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் இவற்றினை எடுத்துக்கொள்வதன் மூலம் அதிக எடை மற்றும் பருமனான நபர்கள் தங்கள் உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கலாம். இதன் மூலம் செல்கள், திசுக்கள் சேதமடைவதை தவிர்க்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதையும் தடுக்க முடியும்.

அண்மைக்காலங்களில் கிரீன் டீ உடலுக்கு நல்லது என்று  சொல்லி பலர் சாப்பிடுகிறார்கள். உண்மையிலேயே நல்லதுதான். கிரீன் டீ அதிக கிளைகேசன் பொருள் ( AGEs)  உருவாவதைத் தடுக்கிறது.

நீண்ட நேரம் சமைப்பதையும், அதிக வெப்பநிலையில் சமைப்பதையும் தவிர்த்து மிதமான வெப்பநிலையில் சமைப்பதன்மூலம் அதிக AGEs உருவாவதைத் தடுக்கமுடியும். வறுப்பதை குறைத்து மாறாக வேகவைத்து சாப்பிடலாம். உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்வோம். நன்றாக வறுத்து சாப்பிடுவதைக் காட்டிலும் வேகவைத்து தாளித்து சாப்பிடலாம்.

அதிக கொழுப்பு, சிகப்பு இறைச்சி, துரித உணவு உட்பட அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கோழி, மீன்களுக்கு மாறுவது ஆரோக்கியத்துக்கு திரும்புவதற்கு சமம் .

கோழி, மீன் சாப்பிடும்போது அதில் வினிகர், எலுமிச்சை சாறு சேர்ப்பதைப் பார்த்திருக்கிறோம். ஹோட்டல்களில் தட்டில் அதனுடன் எலுமிச்சை சேர்த்தே தான் தருவார்கள். பலரும் அப்படி சாப்பிடுகிறார்கள் என்று நாமும் அப்படி சாப்பிடுகிறோம். காரணம் எல்லாம் தெரியாது. எல்லோரும் சாப்பிடுகிறார்கள். நாமும் சாப்பிடுகிறோம்.  எலுமிச்சை வினிகர் சேர்ப்பதன் மூலம் அதிக கிளைகேசன் பொருள் உருவாகாமல் தடுக்கப்படுக்கிறது.

இனிப்பான உணவுகளையும், பேக்கரி உணவுகளையும், வறுத்த உணவுகளையும் தவிர்த்து குறைந்த கிளைகேசன் பொருள் உள்ள  பச்சைக் காய்கறிகள், பழங்கள், ஆவியில் வேகவைத்த உணவுகள் போன்ற ஆரோக்கியமான உணவு பழக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீரிழிவு ஏற்படும் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும்.

சாக்லேட்களையும், கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களையும் பர்கர் போன்ற துரித சக்கை உணவுகளையும் பின்னால் ஏற்படும் நீரிழிவு போன்ற பிரச்சினைகள் எதுவும் தெரியாமலேயே நம் பிள்ளைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி சாப்பிடுவதை அந்தஸ்து அல்லது அதுதான் இந்தக் கால வழக்கம். அதாவது நாகரீகம் என்று  இந்த தலைமுறையினர் நினைக்கிறார்கள். யார் அவர்களுக்கு சொல்லி புரியவைப்பது. குடும்ப சூழல், வேலை நிமித்தம், வீக்கெண்ட் ட்ரீட் என்று பல காரணங்களால் வீட்டில் சமைப்பது வெகுவாக குறைந்து கொண்டுதான் வருகிறது. போதாதற்கு குழம்பு, ரசம், காய், கூட்டு பொரியல் வகைகளை 20, 30 ரூபாய்க்கு பார்சல் போட்டு தருவதும் வசதியாக போய்விட்டது.

‘அப்பாதிரைப்படத்தில் சமுத்திரக்கனி சொல்வார். நல்ல உணவைச் சாப்பிட்டால் ஆஸ்பத்திரிக்கு போகத் தேவையில்லை என்று. ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால் நோயை விலை கொடுத்து வாங்காமல் இருக்கலாமே. உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது. சர்க்கரைநோய் வந்தபின் மெனக்கெடுவதைக் காட்டிலும் வருமுன் தடுப்பது எளிதுதான் என்பது புரிய வேண்டுமென்றால் மீண்டும் இந்தக் கட்டுரையினை தொடக்கத்தில் இருந்து படியுங்கள்.