
உலக பார்வை நாள் ( world Sight Day ) 2026 – சிறப்புக் கட்டுரை.
மு.வீராசாமி
கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு )
மதுரை
---
பார்வையைத் திறப்போம்
கண்ணில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணம் அறியாமையும், அலட்சியமும்தான். பல நேரங்களில் முன்னெச்சரிக்கையாக கவனமாக இருக்கும்போது பல பிரச்சினைகளைத் தடுத்து விடலாம். அல்லது நோய் ஏற்பட்டவுடன் தொடக்க நிலையிலேயே முறையான சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் நலப்படுத்தியும் விடலாம். ஆனால் இதை செய்யாதபோதுதான் பிரச்சினையே. பக்கவிளைவுகள் ஏற்பட்டு பார்வையையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதுபற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகத்தான் IAPB-International Agency for Prevention of Blindness என்ற ‘பார்வையிழப்பைத் தடுப்பதற்கான உலகளாவிய அமைப்பு’, ‘உலக சுகாதார நிறுவனம்’ மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமையினை உலக பார்வை நாளாக ( World Sight Day ) கடைப்பிடிக்கின்றன.
கண்பாதுகாப்பு தொடர்பான விளக்கம் தேவைப்படுகிற அல்லது விடைதெரியாத அய்யங்களுக்குரிய சரியான அணுகுமுறையினை சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
அய்யம் 1 :
சார், எங்க தாத்தா பாட்டி எல்லாம் கண்ணாடி இல்லாமத்தான் கடைசிகாலம் வரையிலும் படிச்சாங்க. நீங்க என்னன்னா, படிப்பதற்கு கண்ணாடி போடச் சொல்றீங்களே?
வெள்ளெழுத்துக்கு கண்ணாடி போட்டுப் பழகியாச்சுன்னா, அப்புறம் ஆயுசுக்கு கண்ணாடி போட்டாத்தான் நல்லாத் தெரியுமாம், கண்ணாடியைக் கழட்டியாச்சுன்னா தெரியாதுன்னு என் நண்பர் சொல்கிறாரே
கண்ணாடி அணிந்தால் நன்றாகத் தெரிகிறது. கண்ணாடியைக் கழற்றிவிட்டால் சரியாகத் தெரிவதில்லையே.
விளக்கம் :
அந்தக் காலகட்டத்தில் மருத்துவ வசதி அவ்வளவாக இல்லை. இருந்தாலும் வயதானவர்களை நாம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் கிடையாது.
மேலும் வயதானவர்களுக்கு கண்ணில் புரை ( cataract ) ஆரம்ப நிலையில் இருக்கலாம். அப்படி இருக்கும்போது அவர்களால் கண்ணாடி இல்லாமலேயே பேப்பரை நன்றாகப் படிக்க முடியும்.
40 வயதில் ஒருவருக்கு தலைமுடி எப்படி நரைக்கிறதோ அதைப்போன்று, இந்த வயதில் கண்ணில் ஏற்படும் ஒருகுறைபாடுதான் வெள்ளெழுத்து. யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.
நரைமுடியை சாயம் பூசி கருப்பாக மாற்றுகிறோம். சாயம் பூசாவிட்டால் நரைமுடியாகவே வெள்ளையாகத்தான் இருக்கப்போகிறது.
அதைப்போன்று தெளிவாக வசதியாக படிக்க வேண்டுமென்றால் கண்ணாடி போட வேண்டும். கண்ணாடிபோடாவிட்டல் வசதியாக தெளிவாக படிக்க முடியாது. மேலும் கண்ணாடியில்லாமல் படிக்க முயலும்போது கண் விரைவில் களைப்படைந்து சோர்வாகி கண்ணில் அசெளகரியம், பார்வையில் மங்கல், கண்வலி, தலைவலி போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
கண்ணைச் சுருக்கிப் படிப்பது எல்லாம் ஒரு அளவுக்குத்தான் பயன் தரும். கண்ணாடிதான் சிறந்தது.
அய்யம் 2 :
கண்புரையை சொட்டு மருந்தில் கரைக்கிறார்களாமே, நந்தியாவட்டைச்சாறு, மூலிகைச்சாறு போட்டால் சரியாகிவிடும் என்று சொல்கிறார்களே.
விளக்கம் :
கண்புரையை சொட்டுமருந்தால் கரைக்க முடியாது. அறுவைசிகிச்சைமூலம் கண்ணில் லென்சு பொருத்திக் கொண்டு நன்றாகப் பார்க்கலாம். இப்போதெல்லாம் இந்த அறுவை வெளிநோயாளியாகவே செய்யப்படுகிறது. ( OP Procedure ) மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. கண்ட கண்ட மருந்தை கண்ணில் ஊற்றி தேவையில்லாத பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்க வேண்டாமே. கண்புரை அறுவையில் அதிநவீன வசதிகள் இன்று வந்துவிட்டன.
அய்யம் 3 :
பார்வைகுறைவுக்கு அந்த ஊரில் கண்ணாடி இல்லாமல் ஏதோ செய்கிறார்களாமே. 15 நாள், ஒருமாதம்போல் தங்கி பயிற்சி எடுத்துக் கொண்டால் கண்ணாடி போடத் தேவையில்லையாமே.
விளக்கம் :
பொதுவாக கண்பயிற்சிகள் கண்களின் தசைகளுக்கு நல்லதுதான். ஆனால் பார்வையை மேம்படுத்துமா என்றால் அதற்கு பதில் ‘இல்லை’ என்பதுதான்.
இதை பலரும் புரிந்துகொள்ளத் தயங்குகிறார்கள். கிட்டப்பார்வை-தூரப்பார்வை போன்ற பார்வைகுறைபாடு கண்ணின் உருவ அமைப்பில் ஏற்படும் பிரச்சினையால் ஏற்படுவது. கண்ணின் கருவிழிக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள தொலைவு குறைந்தாலோ அதிகரித்தாலோ பார்வைகுறைவு ஏற்படுகிறது. இதற்கு மைனஸ் – லென்சு அல்லது பிளஸ் +லென்சு கொண்டு பிம்பத்தை விழித்திரையில் விழச்செய்து பார்வைகுறைபாடு சரிசெய்யப்படுகிறது.
கண்பயிற்சியால் எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. சொன்னவர் விபரமானவர்தானே- அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று யார் சொல்வதையும் கேட்காமல், மருத்துவரின் ஆலோசனைபடி நடப்பதே சிறந்தது.
அய்யம் 4 :
கண்ணில் அழுத்தம் இருக்குன்னு ( Eye Pressure- Glaucoma ) சொன்னாங்க. ஒருமாதம் போல சொட்டுமருந்து போட்டுவிட்டு நிறுத்திவிடலாம்தானே. மருந்து விலை அதிகமாக இருக்கிறதே. ஒரு பாட்டில் 15 நாட்களுக்குகூட வருவதில்லை, கட்டுப்படியாகவில்லையே.
விளக்கம் :
கண்நீர் அழுத்தம் அது ஏற்படுவதைப் பொறுத்து சொட்டுமருந்து, லேசர் சிகிச்சை அல்லது அறுவைசிகிச்சை மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
சொட்டுமருந்து போடச் சொல்லியிருந்தால் அதை வாழ்நாள் முழுவதுமோ அல்லது மருத்துவர் சொல்கிற வரையிலுமோ கண்டிப்பாக போட வேண்டியிருக்கும். ஒருமாதத்தில் எல்லாம் நிறுத்தவே கூடாது. அப்படி நிறுத்தினால் அழுத்தம் அதிகரித்து பார்வைநரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பார்வையும் பாதிக்கப்பட்டுவிடும். ஒருமுறை பார்வைநரம்புகள் பாதித்துவிட்டால் பாதித்தது பாதித்ததுதான். அதனால் ஏற்பட்ட பார்வையிழப்பினை மீண்டும் சரி செய்ய முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அய்யம் 5 :
மாறுகண் அதிர்ஷ்டம்ன்னு சொல்றாங்களே. ஆனால் நீங்க என்னடான்னா கண்ணாடி, பயிற்சி இல்லைன்னா ஆப்ரேசன்னு சொல்றீங்களே!
விளக்கம் :
மாறுகண் அதிர்ஷ்டம் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சரியான நேரத்தில் முறையாக கவனிக்காவிடில் பார்வை கடுமையாக பாதித்துவிடும். நம்முடைய இரண்டு கண்களும் நேராக ஒருங்கிணைந்து வேலைசெய்தால்தான் இரண்டு கண்களின் ஒருங்கிணைந்த முப்பரிமாணப்பார்வை கிடைக்கும். ஒருகண் நேராகவும் இன்னொரு கண் விலகியும் இருந்தால் நேராக இருக்கும் கண்ணிலிருந்து வரும் பிம்பம் மட்டுமே மூளைக்குச் செல்லும். விலகி இருக்கும் கண்ணில் இருந்து வரும் பிம்பம் மூளைக்குச் செல்லாது. இதனால் அந்தக் கண் நாளடைவில் சோம்பேறிக்கண்ணாகிவிடும். அந்தக் கண் வெளியில் இருந்து பிறர் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதுபோல் தெரிந்தாலும் கண்ணில் பார்வை இருக்காது. சரி செய்யவும் முடியாது.
8 வயதிற்குள் முறையான சிகிச்சை செய்துகொண்டால் பார்வையைப் பாதுகாத்துக் கொள்ளலாம். தொடக்கநிலை கவனிப்பு அவசியம்.
அய்யம் 6 :
கண்கட்டி அடிக்கடி வருகிறது. ராமக்கட்டி உரசி போட்டால் சரியாகிவிடும்னு பக்கத்து வீட்டுக்காரர் சொல்றார்ரே. இது சரியா?
விளக்கம் :
சிறுவயதில் அடிக்கடி கண்கட்டி ஏற்படுவது பார்வைக்குறைவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். சோதித்து கண்ணாடி தேவையிருந்தால் அணிய வேண்டும்.
இதே கண்கட்டி 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிக்கடி ஏற்பட்டால் சர்க்கரைநோய் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக்கொள்வது நல்லது. ராமக்கட்டியில் சுண்ணாம்பு இருக்கிறது. கண்ணுக்குள் விழுந்தால் கருவிழி கடுமையாகப் பாதிக்கப்படும். கவனம்.
அய்யம் 7 :
இரு சக்கர வண்டியில் போய்விட்டுவந்த பிறகு கண் உறுத்துகிறது. கண்ணைக் கழுவிய பிறகும் உறுத்தல் அப்படியேதான் இருக்கிறது. மருந்துக்கடையில் சொட்டு மருந்து வாங்கிப் போடலாம் என்றால், ‘இல்லை டாக்டரைப் போய் பார்’ என்று நண்பர் சொல்கிறாரே.
விளக்கம் :
ஆம், நண்பர் சரியாகத்தான் சொல்கிறார். பொதுவாக கண்ணில் தூசிவிழுந்தவுடன், கண்ணில் உற்பத்தியாகும் அதிகப்படியான கண்ணீரால் தூசி, தானாகவே வெளியேறிவிடும். கண்ணைக் கழுவியபிறகும் உறுத்தல் அப்படியே இருந்தால் தூசி கருவிழியிலோ, மேல் இமையின் உட்புறத்திலோ ஒட்டிக் கொண்டிருக்கலாம். மருத்துவரால் மட்டுமே கண்ணுக்கு பாதிப்பின்றி தூசியை எடுக்க முடியும். நீங்களாகவே கடையில் சொட்டு மருந்து வாங்கி போடுவதால் தூசி அதுவாக வெளியேற வாய்ப்பில்லை.
மேலும் சில நேரங்களில் கொசுகூட கண்ணில் விழலாம். வண்டியில் வேகமாகப் போகும்போது அந்த வேகத்தில் கொசு கண்ணில்படும்போது அதன் கொடுக்கு கண்ணில் ஊடுருவ வாய்ப்பு இருக்கிறது. மருத்துவரால் மட்டுமே அதனை பக்குவமாக எடுக்க முடியும். கைவைத்தியம் வேண்டாமே.
அய்யம் 8 :
காரட் சாப்பிட்டால் நல்லது, கீரை சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று சொல்கிறார்கள். என் பையன் தினமும் சாப்பிடத்தான் செய்கிறான். ஆனால் டாக்டர், இப்போது கண்ணாடி போடச் சொல்கிறாரே ?
விளக்கம் :
காரட் ,கீரை, கருவேப்பிலை, கொத்துமல்லி, ஈரல், முட்டை எல்லாம் கண்ணுக்கும் உடலுக்கும் நல்லதுதான். அதில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருக்கிறது. இவை கண்ணில் வைட்டமின் ஏ சத்து குறைபாடு ( Vit A deficiency ) வராமல் காக்கும். ஆனால் கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவை கண்ணின் உருவ அமைப்பில் உள்ள பிரச்சினையால் ஏற்படுபவை. கண்ணாடி போடுவதன் மூலம் தெளிவாக பார்க்கலாம். கண்ணாடி தேவையில்லையெனில், காண்டாக்ட் லென்சு போட்டுக்கொள்ளலாம். அல்லது லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம்.
சத்தான உணவுக்கும் பார்வைகுறைபாடுக்கும் தொடர்பில்லை என்பது விளங்குகிறதுதானே.
அய்யம் 9:
சர்க்கரைநோய் இருக்கும்போது ஆறுமாதத்திற்கு ஒருமுறை கண்களை சோதித்துப் பார்க்கவேண்டும் என்று சொல்கிறார்களே? அவசியம்தானா?
விளக்கம்:
சர்க்கரைநோய்க்கு முறையாக சிகிச்சை செய்துகொள்ளாவிட்டால் - கட்டுப்படுத்தாவிட்டால் விழித்திரை கடுமையாகப் பாதித்துவிடும் ( சர்க்கரைநோய் விழித்திரைப் பாதிப்பு - Diabetic Retinopathy ). பாதிப்பினால் ஏற்பட்ட பார்வையிழப்பினை மீண்டும் சரிசெய்ய இயலாது. லேசர் சிகிச்சைமூலம் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் இருக்கிற பார்வையை மட்டுமே காப்பாற்ற முடியும்.
எனவே சர்க்கரைநோய்க்கு முறையாக சிகிச்சைசெய்துகொண்டு கட்டுப்படுத்துவது அவசியம். கண்களில் பிரச்சினை எதுவும் இல்லாவிட்டாலும், ஆறுமாதத்திற்கு ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று கண்களை சோதித்துப் பார்ப்பதும் அவசியம். பார்வையைப் பாதுக்காக்கவே இந்த சோதனை.
அய்யம் 10 :
அந்த ஊரில் கண்ணில் மூலிகைச்சாறு ஊற்றுகிறார்களாமே. கண்ணில் எந்த பிரச்சினை என்றாலும் சரியாகிவிடுகிறது என்கிறார்களே. ஊற்றிக்கொள்ளலாமா?
விளக்கம் :
கண்ட கண்ட மருந்தை கண்ணில் ஊற்றி கண்பார்வையை இழந்து விடாதீர்கள். இதற்கு மேல் சொல்லத் தேவையில்லை.
கண்ணில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சினைக்கும் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனை பெற்று முறையான மருத்துவம் செய்துகொள்வதே பார்வைக்கு பாதுகாப்பு. கைவைத்தியம் பார்த்துவிட்டு சரியாகாவிட்டால் மருத்துவரைப் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்போக்கும் வேண்டாம். வாழ்நாள் முழுவதற்கும் பார்வை தேவை என்பது எப்போதும் நினைவில் இருக்கட்டும்.
இனியாவது நம் பார்வைத் திறக்கட்டும்.