புதன், 25 மார்ச், 2026

கண்ணுக்கு முன்னால் பூச்சி பறக்கிறதா?

      கண்ணுக்கு முன்னால் பூச்சி பறக்கிறதா?

          

                

 

முதல்நாள் இரவு வரை இராசேந்திரனுக்கு, பார்வை நன்றாகத்தான் இருந்தது. மறுநாள் காலை குளித்துவிட்டு பால்கனிக்கு வந்து வானத்தைப் பார்த்தபோது, கண் அதிக ஒளியுடன் கூசுவதுபோல் இருந்தது. பிரகாசமாகவும் தெரிந்தது. அத்துடன் கண்ணுக்கு முன்னால் பூச்சி பறப்பதுபோல் ( Floaters )  இருந்தது. கண்ணை அசைத்தால் அதுவும் வேகவேகமாக அசைவதுபோல் தெரிந்தது. உண்மையிலேயே பூச்சிதானா என்று பார்த்தார். ஆனால் பூச்சியைக் காணவில்லை. கண்ணைத் தேய்த்துப்பார்த்தும் பார்த்தார். பயனில்லை. அப்படியேதான் இருந்தது.

கண்ணாடி போட்டிருந்ததால் கண்ணாடிபோட்டும் பார்த்தார். கண்ணாடியில்லாமலும் பார்த்தார். பூச்சி பறப்பது அப்படியேதான் இருந்தது.

இத்தனைக்கும் குடிப்பழக்கமோ, புகைப்பிடிக்கும் பழக்கமோகூட கிடையாது. முந்தினநாள் இரவு நன்றாகத்தான் தூங்கி எழுந்தார். கண்ணை நன்றாக கழுவி விட்டும் பார்த்தார். பூச்சி பறப்பதில் மாற்றம் இல்லை.

சென்ற மாதம் பார்த்த இரத்த அழுத்தம்சர்க்கரைநோய்க்கான சோதனை எல்லாம் இயல்புக்குள்தான் இருந்தன. உடலில் வேறு எந்த பிரச்சினையும் கிடையாது. கொஞ்சம் பயந்து போனார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மருத்துவமனையில்கண்மருத்துவர் விரிவாக சோதித்துவிட்டு பயப்படத்தேவை இல்லை என்று சொல்லிவிட்டார். வயதாகும்போது ஏற்படும் பொதுவான பிரச்சினைதான் என்றாலும், அது ஏன் ஏற்படுகிறது? பயப்படத் தேவையில்லையாஎப்போது கவனம் தேவைஎன்பது பற்றி பார்க்கலாம்.

 

அது என்ன பூச்சி பறப்பது?

 

கண்ணில் இரண்டு வகையான திரவங்கள் இருப்பதை நாம் பள்ளியில் படித்திருக்கிறோம். கண்ணில்விழிலென்சுக்கு முன்புறம் இருக்கும் முன்கண்திரவம் ( Aqueous humour) மற்றும் பின்புறம் இருக்கும் பின்கண்திரவம் ( Vitreous humour )இதில் முன்கண்திரவம் திரவ வடிவில் இருக்கும். 

இந்த பின்கண்திரவம் (விட்ரியெஸ்)மூக்குச் சளி போல ஜெல்லி வடிவில் இருக்கும். கண்ணின் விழிக்கோளத்தை நிரப்பி கண்ணைக் கோளவடிவில் நிலைநிறுத்த உதவுகிறது. நாம் தெளிவாகப் பார்ப்பதற்கு, தன் வழியே செல்லும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கு செல்வதை உறுதி செய்கிறது. அதோடு கண்ணில் அடிபடும்போது அதிர்ச்சி தாங்கியாகவும் ( Shock Absorber ) செயல்படுகிறது.

ஜெல்லி மாதிரி இருக்கும் இந்த விட்ரியெஸ் கண்ணாடி போன்று தெளிவானது. இது 99 விழுக்காடு நீராலும் மீதி கொலாஜன் நார்களாலும் ஆனது. இளவயதில் அடர்த்தியாக இருக்கும் இந்த விட்ரியெஸ் ஜெல்லிவயதாகும்போது நீர்த்துப்போய் கொலாஜன் நார்கள் ஒன்று சேர்ந்து சுருங்கி மெல்லிய இழைகளாகவோ, சிறு துகள்களாகவோ மாறலாம். இவைதான் விழித்திரையில் நிழல்களாக விழும். வெளியில் நாம் பார்க்கும்போது பார்வையில் பூச்சி மிதப்பதுபோல் தெரியும்.

                                        

 

                     

கண்ணுக்கு முன்னால் வெளிறிய சாம்பல் அல்லது கருப்பு நிறப்புள்ளிகளாகவோ வெளிப்படையான (Transparent) இழைகள் போன்றோ தெரியலாம். சதுரங்கள் போன்றோவளையங்களாகவோ உருவமற்ற மேகங்கள் போன்றோ பார்ப்பதற்கு இருக்கும். பொதுவாக வெளிச்சமான பரப்பில் வானவெளியில் பார்க்கும்போது இந்த மிதவைகள் தெளிவாகத் தெரியும். கண்ணை அசைத்தால் மிதவைகளும் வேகமாக அசையும். 

 

யாருக்கு ஏற்படலாம்?

·       வயதாவதால்

·       உயர் கிட்டப்பார்வைகுறைபாடு ( High Myopia ) உள்ளவர்களுக்கு

·       கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு

·       சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு

·       கண்ணில் காயம் ஏற்படும்போது

 

எப்போது கவனம் தேவை?:

 

பொதுவாக வயதாகும்போது ஏற்படக்கூடியதுதான். பயப்படத் தேவையில்லை. ஆனால் பூச்சி பறப்பதில் புள்ளிகள் திடீரென ஒரேயடியாக அதிகரித்தால் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். சிலசமயங்களில் விட்ரியெஸ் ஜெல்லி சுருங்கும்போது பின்புறத்தில் விட்ரியெஸ் விழித்திரையில் இருந்து, பிரிந்து விடுபடலாம். (Post Vitreous Detachment) பல சமயங்களில் இதனால் பிரச்சினை எதுவும் இருக்காது. 

இந்த மிதவையுடன் கண்ணில் மின்னல் போன்று ஒளி தெரிந்தால் அதிக கவனமாக இருக்க வேண்டும். விட்ரியெஸ் பின்புறத்தில் இருந்து பிரியும்போது விழித்திரையினை இழுத்து அதனால்  விழித்திரை அதன் அடுக்கிலிருந்து பிரியலாம்  (Retinal Detachment) இதுபோன்ற நிலை சற்று சிக்கலானது. பார்வையை கடுமையாக பாதிக்கக்கூடியது. அறுவைசிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். இது ஒரு சிக்கலான சிகிச்சையும்கூட. 

பக்கப்பார்வையில் நிழல்போன்று தெரிந்தாலும்பார்வையில் திரைபோன்று பார்வை மறைத்தாலும்பூச்சி பறப்பது அதிகரித்தாலும்மின்னல் போன்று வெளிச்சம் தெரிந்தாலும் உடனே கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

பொதுவாக கண்ணில் ஏற்படும் எந்த ஒரு சிறு மாற்றத்தினையும் அலட்சியம் செய்யாமல் அறிகுறிகள் தெரிந்தவுடன் தொடக்க நிலையிலேயே கண்மருத்துவரிடம் சென்று சோதித்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் பார்வைபிரச்சினை அதிகமாகாமல் தடுத்து பார்வையைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

                                  ---X---

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு )

மதுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக