மறைந்திருந்து தாக்கும் மர்மம்.
உலக கண்நீர் அழுத்த உயர்வு வாரம் ( மார்ச்சு 8 - 14 )
நிறைவுநாள் கட்டுரை
விலை உயர்ந்த கண்ணாடி அவருடையது. கண்ணாடிக்கடையில் நவீன கணினித் தொழிற்நுட்பத்தில் முகத்திற்கேற்ற பிரேமை வாங்கியதில் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி.
வெள்ளெழுத்துப் பிரச்சினைக்கான கண்ணாடி அது. அவருடைய நண்பரின் கண்ணாடியை வாங்கி போட்டு பார்த்ததில் நன்றாக தெரிந்ததால் அவருடைய ஆலோசனையின்பேரில் நேரடியாகக் கண்ணாடிக்கடையில் வாங்கினார். நண்பர் கைதேர்ந்த கண்மருத்துவர்போல் அவருடைய வயதுக்குரிய லென்சுபவரைச் சொல்லி வாங்கச் சொன்னார்.
கண் மருத்துவமனைக்கு சென்றால் கண்ணில் மருந்துபோட்டு உட்காரவைத்துவிடுவார்கள். தேவையில்லாத சோதனைகள் செய்து அலைக்கழிப்பார்கள். ஒருமுழுநாள் முழுவதும் வீணாகிவிடும் என்ற கவலை இருந்தது. ஆனால் இப்போது பிரச்சினையே இல்லை. மருத்துவமனைக்கே போகாமல் எளிதில் கண்ணாடியை வாங்கியதில் திருப்தி அவருக்கு.
ஒருமுறை அவர் வேலை பார்த்த ஐ.டி. நிறுவனத்தில், பணியாளர்களுக்காக நடைபெற்ற கண்சிகிச்சை முகாமில் வழக்கமான சோதனையின்போது அவருடைய கண்நீர் அழுத்தம், இயல்பான அளவைவிட சற்று அதிகரித்திருந்தது தெரிந்தது.
மேற்கொண்டு விரிவான சோதனைகளுக்காக மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். மருத்துவமனையில் அவருடைய கண்ணில்,அழுத்தம் உயர்ந்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அதோடு கண்ணில் பார்வை நரம்புகளில் ( Optic Nerve ) கணிசமான பாதிப்பும் இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். இதன் காரணமாக பார்வையும் சிறிதளவு பாதிக்கப்படிருந்தது.
இதற்கு முன்பு, கண்ணாடி சோதனை செய்த மருத்துவமனையில் உங்களுக்கு அழுத்தம் இருப்பது பற்றி சொல்லவில்லையா? என்று மருத்துவர் கேட்டார். மருத்துவமனைக்கு சென்று சோதித்து கண்ணாடி போட்டிருந்தால்தானே அவரால் பதில் சொல்ல முடியும்?
அதென்ன கண்நீர் அழுத்தம் ?
நம் உடம்பில் இருக்கும் இரத்த அழுத்தம் ( Blood Pressure ) நமக்குத் தெரிந்ததுதான். இரத்த அழுத்தம் 120/80 மி,மீ / பாதரச அழுத்தம் என்றால் பிரச்சினை இல்லை. கூடினால் பி.பி.கூடிருச்சு என்கிறார்கள். அதாவது உயர் இரத்த அழுத்தம் . இதைப் போல் கண்ணிலும் ஒரு அழுத்தம் பராமரிக்கப்படுகிறது. 10 - 20 க்குள் இருந்தால் அது இயல்பான அழுத்தம்.
உடம்பில் பிரஷர் அதிகமானால் எப்படி பி.பி. என்கிறோமோ அதேபோல் கண்ணில் அழுத்தம் உயர்ந்தால் அதுதான் கண்நீர் அழுத்த உயர்வு ( கிளாக்கோமா ).
இந்தக் கண்நீர் அழுத்த உயர்வில், மற்ற நோய்களைப் போல் எந்தவித அறிகுறிகளும் வெளிப்படுவது கிடையாது. அதனால் தொடக்க நிலையில் கண்டறிவதற்கான வாய்ப்பு குறைவுதான். நோய்த்தாக்கி அழுத்த உயர்வால் பக்கவிளைவுகள் ஏற்பட்ட பிறகே பாதிக்கப்பட்டவர் பிரச்சினையை உணரத் தொடங்குவார். அதற்குள் பார்வை கணிசமாக பாதிக்கப்பட்டிருக்கும்.
உடம்பில் இரத்த அழுத்தம் உயர்ந்திருப்பதே தெரியாமல் இன்னும் சிலர் இருக்கும்போது கண்ணில் இருக்கும் அழுத்தம் பற்றி தெரிந்திருப்பதற்கான வாய்ப்பு குறைவுதான்.
வருமுன் காப்போம்
வழக்கமாக எப்படி 40 வயதை நெருங்கும்போது உடலில் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவினை சோதித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோமோ அதைப்போன்று இந்த வயதில் கண்ணில் பிரச்சினை இருந்தாலும், இல்லாவிட்டாலும் கண்மருத்துவமனைக்குச் சென்று பார்வையினையும், அழுத்தத்தினையும் கட்டாயம் சோதித்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவமனையில் பார்வைபரிசோதனை, கண்நீர் அழுத்த சோதனையுடன் கண்ணில் மருந்து போட்டு பார்வை நரம்பு பரிசோதனையையும் செய்து கண்நீர் அழுத்த உயர்வுக்கான வெளிப்பாடுகள் இருக்கிறதா என்று கண்மருத்துவர் பார்ப்பார்.
இதன் மூலம் ஒருவேளை அழுத்த உயர்வு இருந்தால், தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மருத்துவம் செய்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
கண்நீர் அழுத்தம் உயரும் முன் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல் கண்ணுக்குள் கண்ணாமூச்சிக் காட்டும். இதனால்தான் இதை ‘சத்தமில்லாமல் பார்வையைப் பறிக்கும் திருடன்’ என்று சொல்கிறார்கள். நன்றாக கால் ஊன்றிய பிறகு அதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்ட பிறகே கண்ணில் ஏதோ பிரச்சினையாக இருக்கிறது போலிருக்கிறதே என்று லேசாக உணரமுடியும். அதுவரையில் தெரியாது.
அதை விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு நாம் செடியைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கிறது. செடி நன்றாக வளர அதற்கு நீர் தேவை. நீர் ஊற்றாமல் விட்டுவிட்டால், செடி நாளடைவில் பட்டுப்போய்விடும். அதன் பின் லிட்டர் லிட்டராக நீர் ஊற்றினாலும் பழையபடி துளிர்க்க வைக்க முடியாதல்லவா!
அதைப்போன்றுதான் கண்நீர் அழுத்த உயர்வும். கண்ணில் அழுத்தம் அதிகரித்தது, கண்டறியப்படாமல் - தொடக்கநிலையில் சிகிச்சை செய்துகொள்ளவில்லை என்றால் அழுத்த உயர்வால் பார்வை நரம்புகள் பாதித்துவிடும். இதனால் பார்வையும் கடுமையாக பாதித்துவிடும். ஒருமுறை பாதித்தால் பாதித்ததுதான். இது ஒரு நிரந்தரமான பார்வையிழப்பு. மீண்டும் அதை சரி செய்ய முடியாது. எப்படிப் பட்டுப்போன செடியை மீண்டும் துளிர்க்க வைக்க முடியாதோ, அதைப் போன்று பாதித்த பார்வைநரம்புகளை சரிசெய்யவும் முடியாது. மேற்கொண்டு சிகிச்சை செய்து அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இருக்கின்ற பார்வையை மட்டுமே காப்பாற்றலாம்.
அந்த ஐ.டி பணியாளர் போல கண்ணாடிக்கடைக்கு நேரிடையாகச் சென்று கண்ணாடி வாங்கினால் கண்ணில் அழுத்த சோதனை செய்வதற்குரிய வாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கண்மருத்துவமனைக்கு சென்றால்தான் இந்த சோதனைகளை எல்லாம் பார்த்துக் கொள்ள முடியும். ஒருவேளை அழுத்த உயர்வு இருந்தால் தொடக்க நிலையில் கண்டுபிடித்து பார்வையைக் காக்க வாய்ப்பு கிடைக்கும்.
விழித்துக்கொள்வோம்
உரிய நேரத்தில் சிகிச்சை செய்துகொள்ளாதபோது அழுத்தம் உயர்ந்து, நாளடைவில் பார்வை பாதித்து, பக்கப்பார்வையும் வெகுவாக குறையும். பொதுவாக நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது கண்ணின் இரு புறமும் ( சைடு பார்வை ) இருக்கிற பொருட்களை ஒரு அளவு வரை நம்மால் பார்க்க முடியும். நடந்தோ இரு சக்கர வாகனத்திலோ செல்கிறோம். பக்கத்தில் யார் வருகிறார்கள்-போகிறார்கள் என்பது ஓரளவுக்குத் தெரியும். இலையில் சாப்பிடுகிறோம். முழு இலையிலும் இருக்கும் உணவு பொருட்களைப் முழுமையாகப் பார்க்க முடியும்.
ஆனால் கடுமையான பாதிப்பில் பக்கப்பார்வை குறையும். பக்கத்தில் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதோ, இலையில் இருக்கும் உணவுப்பொருட்கள் முழுமையாகவோ தெரியாது. சில சமயங்களில் குழாய் வழியாக பார்ப்பதுபோல் கூட பார்வை வெகுவாக குறைந்து விடலாம்.
பொதுவாக மருத்துவமனைக்கு செல்லும்போதே பார்வை பாதிப்போடு செல்லும் நிலையில் தான் கண்நீர் அழுத்த உயர்வு இருக்கிறது. பார்வையைக் காக்க தேவையெல்லாம் தொடக்க நிலை கண்டுபிடிப்பு. அழுத்தத்தைக் கட்டுப்படுத்த கண்சொட்டு மருந்துகள் இருக்கின்றன. தேவைப்பட்டால் லேசர் மருத்துவமும், அறுவை சிகிச்சையும் செய்வார்கள். தொடர் சிகிச்சையும், தொடர் கவனிப்பும் பார்வையை நிச்சயமாக பாதுகாக்கும். பயப்படத்தேவையில்லை.
கண்நீர் அழுத்த உயர்வினைப் பொறுத்தவரையில் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சொட்டுமருந்தினை வாழ்நாள் முழுவதும் கண்ணில் போட வேண்டி இருக்கும். இது கொஞ்சம் கஷ்டமான வேலை என்பதால் பலரும் பாதியிலேயே சிகிச்சையை நிறுத்திவிடுகிறார்கள். இதனால் பாதிப்பு அதிகமாகி கடுமையான பார்வை பாதிப்பிற்கு வழிவகுத்து விடுகிறது.
எனவே எக்காரணம் கொண்டும் சிகிச்சையை நிறுத்தக்கூடாது. கண்நீர் அழுத்த உயர்வினால் ஏற்படும் பார்வை பாதிப்பு என்பது, ஈடு செய்ய முடியாத நிரந்தர பாதிப்பு என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சையை, மருத்துவர் அறிவுரைப்படி தொடர வேண்டும்.
-------
மு.வீராசாமி
கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு)
மதுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக