புதன், 22 ஜூலை, 2026

தடை யாருக்கு?

தடை யாருக்கு?


 

பிரான்சில், ஏற்கனவே பள்ளி வளாகங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை இருக்கும் நிலையில் தற்போது 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி இன்றைய நாளிதழ்களில் சத்தமில்லாமல் இடம்பெற்றிருந்ததை ஒருசிலர் பார்த்திருக்கலாம். 

ஸ்வீடன், ஆஸ்திரேலியா, டென்மார்க், நெதர்லாந்து போன்றநாடுகளின் வரிசையில் இப்போது பிரான்சும் சேர்ந்திருக்கிறது. 

மனநலம், உடல்நலம், கல்வியில் கவனம் சிதறாமல் இருக்கவேண்டி, சமூக ஊடக பயன்பாட்டில் கட்டுப்பாடுகளும், இதுபோன்ற தடைகளும் தேவைப்படுகின்றன. 

பிரான்சில் விதித்துள்ள தடையினை பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர். மதுப்பழக்கத்தில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டி இருக்கிறதோ அதுபோன்று குழந்தைகளை காக்க வேண்டிய தேவை இருப்பதாக அவர்கள் கூறுகின்றனராம். 

இந்த செய்தியினை படித்தபோது அண்மையில் சென்னையில் இருந்து மதுரைக்கு பகல்நேர ரயிலில் வந்தபோது பார்த்த காட்சிகள்தான் நினைவிற்கு வந்துபோயின.

முன் இருக்கையில் இருந்த குழந்தைக்கு மூன்று வயதுதான். அம்மாவிடம் என்னமோ கேட்டது. அம்மாவின் மடியில் இன்னொரு கைக்குழந்தையும் தூக்கத்தில் இருந்தது. ஒரு குழந்தையையே இப்போதெல்லாம் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். இரண்டு குழந்தைகளைப் பொறுத்தவரையில் திண்டாட்டம்தான். அதுவும் ஓடும் ரயிலில்,  நீண்ட தூரப் பயணத்தில்.

அம்மா கையிலோ செல்போன். ஏதோ வாழ்க்கை, இன்றைக்கே முடிந்துவிடுவதுபோல் அந்த காணொலியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். கேள்வி கேட்ட குழந்தையை கோபமாக முறைத்துவிட்டு செல்லில் மீண்டும் கவனம் செலுத்தினார். 

அம்மா சொல்லும்மா’ . மீண்டும் கேட்டதற்கு, ‘சும்மா கொஞ்ச நேரம் இருக்கிறாயா’ என்று சத்தமாக அதட்டினார்.  கொஞ்ச நேரம் நிம்மதியா செல்லைப் பார்க்க விடுதுகளா?’ என்ற முனுமுனுப்பு வேறு. 

கொஞ்சநேரம் கூட ஆகவில்லை. பின்னால் இருந்து ‘வீல்’, ‘வீல்’ என்ற அழுகை சத்தம். என்னவென்று மெதுவாக கவனிக்கத் தொடங்கினேன்.

செல்லெல்லாம் தரமுடியாது. வேடிக்கை பார். இந்தா புத்தகம். பேசாம படம் பாரு. எல்லாரும் அமைதியா உட்கார்ந்திருக்காங்க. அழுது  ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த குழந்தையிடம்கோபமாக கத்திவிட்டு அம்மா, செல்லில் முழ்க ஆரம்பித்துவிட்டார். சரிதான்.

இதே அம்மாக்கள்தான் பிள்ளைகளின் அழுகையை நிறுத்த, சாப்பிட வைக்க என்று பிள்ளைகளிடம் செல்போனைக் காண்பிக்கிறார்கள். முதலில் செல்போனைக் கேட்டது குழந்தைகளா 

பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள்?

அதுசரி. கட்டுப்பாடு முதலில் தேவை யாருக்கு?