வெள்ளி, 27 ஜூன், 2025

கிட்டப்பார்வையைத் தடுக்க முடியுமா?

    கிட்டப்பார்வையைத் தடுக்க முடியுமா?

 

இன்று குழந்தைகளை வளர்ப்பதில் பெரிய பிரச்சினை ஒன்று இருக்கிறது. அதை வளர்ப்புச் சிக்கல் என்றுகூட சொல்லலாம். செல்போன் கொடுக்காமல் வளர்ப்பதுதான் அது. பிள்ளைகள் சத்தம் போடாமல், தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று அவர்கள் கையில் கொடுக்கிறார்கள். குழந்தைகளைப் பொறுத்த வரையில் அது ஒரு விளையாட்டுப் பொருள் அவ்வளவுதான். அதாவது அவர்கள் மொழியில் அது ‘டாய்ஸ்’.

செல்போன் கொடுத்தால் என்ன? கையில் வைத்துக் கொள்ளட்டும். விளையாடிவிட்டு போகட்டும் என்று விட்டுவிட முடியாது. காரணம் பிறந்த மூன்று நான்கு மாதங்களில் செல்போனைக் கையில் எடுக்கும் குழந்தை தொடர்ந்து அதற்கு பழகும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. பெற்றோர் குழந்தையின் கண்ணுக்கு முன்பாகவே வெவ்வேறு காரணங்களுக்காக செல்போனைக் கையில் எடுக்கும்போதெல்லாம் அதை குழந்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள். சொல்லித்தராமலேயே அதைக் கையாளவும் பிள்ளைகள் தெரிந்துகொள்கிறார்கள்.



கொஞ்ச நாளைக்கு பெற்றோரின் செல்போனைக் கையில் எடுக்கும் பிள்ளைகளுக்கு நாளடைவில் தனியாகவே ஒரு செல்போன் கிடைத்துவிடுகிறது. பெற்றோர் பிள்ளைகளை செல்போனுக்கு அடிமையாக்குவது இப்படித்தான். அடிமையாக்கிவிட்டு பின்னாளில் பிள்ளையின் கையில் இருந்து செல்போனை வாங்க முடியவில்லை என்று வருந்தவும் செய்வார்கள்.


 

செல்போனால் கண்ணுக்கு என்ன பாதிப்பு ?

 

அது மருத்துவமனை ஒன்றின் வரவேற்பறை. காத்திருந்தவர்களில் எழுவரில் மூவர் சிறுவயதினர். மூவரும் கண்ணாடி அணிந்திருந்தார்கள். மூவருமே செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவும் கண்ணுக்கு மிக அருகில் வைத்து. கண்ணாடி பவர் கொஞ்சம் அதிகம்தான். -6, -7 இருக்கும். மூவரின் வயதுமே எட்டுக்குள்தான். தங்களுக்கு இருக்கும் கிட்டப்பார்வை குறித்தோ அதனால் பின்னாளில் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்தோ எந்தவித கவலையுமின்றி  அந்த குழந்தைகள் செல்போனே கதி என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரயிலில் பயணம் செய்யும்போது குறிப்பாக பகலில் பயணிகளை அதிகமான அளவில் ஒரு சேர பார்க்கலாம். பயணம் செய்யும் குழந்தைகளை கவனித்தால் பெரும்பாலோர் கண்ணில் கண்ணாடி இருக்கும். வழக்கம்போல் கையில் செல்போன் இருக்கும்.. 

பார்க்கும் குழந்தைகளின் கண்களில் எல்லாம் கண்ணாடியா என்றுகூட நினைக்கத் தோன்றும். முந்தைய தலைமுறையில் இப்படி இல்லையே. பின் ஏன் இந்த திடீர் அதிகரிப்பு?

செல்போன் இல்லாத முந்தைய தலைமுறைகளில் பிள்ளைகளின் வாழ்க்கை வீட்டில் விளையாட்டுவீட்டுக்கு வெளியேயும் ஓடியாடி விளையாட்டுபின் படிப்பு என்றிருந்தது. விடுமுறை நாட்களில் முழுவதும் விளையாட்டுதான். அன்றைய தலைமுறை இப்படியென்றால் இன்றைய பிள்ளைகளின் வாழ்க்கை டாப்லெட் பிசிசெல்போன் போன்ற மின்னணு சாதனங்களுடன் ஒரு அறைக்குள் சுருங்கிவிட்டது. இன்று போல் அன்று குழந்தைகளிடையே கண்ணாடியை அதிகமாக பார்க்கவும் முடியாது. ஒன்றிரண்டு குழந்தைகள் போட்டிருப்பார்கள். அவ்வளவுதான்.

ஆனால் இன்றைய நிலைமை வேறு. கடுமையான கல்விச்சுமை அவர்களுக்கு. இந்த கடுமையான போட்டி சூழலில் பிள்ளைகள் எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. பள்ளிக்கு போய் வந்த பின்னரும் மாலையில் தனி டியூசன் வகுப்புகள். கூடவே இசை, நாட்டியம், வயலின் போன்ற பன்முகத்திறன்களுக்கான வகுப்புகள். 

சரி. இதையெல்லாம் முடித்து இரவு வீட்டுக்கு திரும்பிய பிறகாவது தூங்கப்போகலாமா என்றால் முடியாது. அதன்பின் பள்ளியில் தந்த வீட்டுப்பாடம், டியூசன் ஆசிரியர் தந்த வீட்டுப்பாடம், மறுநாள் தேர்வுக்கான தயாரிப்பு என்று பிள்ளைகள் எப்போதும் அறைக்குள்ளேயேதான்  இருக்க வேண்டி இருக்கிறது. இதனால் வெளிப்புறச்சூழலில் அவர்கள் நேரம் செலவிடுவதே இல்லாமல் போய்விட்டது.

 

வெளிப்புறச்சூழலால் என்ன பயன் ?

 

பிள்ளைகள் வெளிப்புறச்சூழலில் இருக்கும்போது சூரிய ஒளிக்கதிர்கள் கண்ணின் விழித்திரையில் டோபமைன் என்ற வேதிப்பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது. இது விழிக்கோளம் நீட்சி அடைவதைத் தடுக்கிறது. இதன் மூலம் கிட்டப்பார்வை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் சூரிய ஒளிமூலம் வைட்டமின் ‘டி' யும் உடலுக்கு கிடைக்கிறது. இதுவும் கிட்டப்பார்வையைத் தடுப்பதில் உதவுகிறது.  

 

செல்போனால் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

 

செல்போனின் திரை மிகச் சிறியது. அதில் உள்ள எழுத்துருக்களின் அளவும் (font size) சிறியது. வழக்கமாக பேப்பர் அல்லது புத்தகத்தை ஒரு அடி தொலைவில் வைத்துதான் பார்ப்போம். ஆனால் செல்போனை கண்ணுக்கு அருகில் வைத்துதான் பார்க்கிறோம்.

கண்ணுக்கு மிக அருகில் வைத்து பார்க்கும்போது நம்முடைய இரண்டு கண்களும் ஒருங்கிணைந்து மூக்குப் பக்கம் திரும்புவதைப் பார்க்கலாம். தொடர்ந்து செல்போனைப் பார்க்கும்போது இரண்டு கண்களின் இணைந்த இயக்கமும் கண்ணின் ஈடுசெய்யும் திறனின் தேவையும் மேலும் அதிகரிக்கிறது. கிட்டப்பார்வை ஏற்படுவதற்கு இதுவும் காரணமாக இருக்கிறது. 

 

சரி, கிட்டப்பார்வையைத் தடுக்க முடியுமா?

 

பிள்ளைகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டுக்கு வெளியே விளையாடச் சொல்ல வேண்டும். ஏற்கனவே கண்ணாடி போட்டிருப்பவர்களும் வெளிப்புறச்சூழலில் இருப்பதன் மூலம் கண்ணாடி லென்சு பவர் அதிகரிப்பது தடுக்கப்படும்.



செல்போன் பார்ப்பதில் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடு தற்போது இந்தியாவில்  இல்லை. பிறந்த ஓராண்டு வரை பிள்ளைகளுக்கு செல்போனை கையில் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அழுகையில்லாமல் சமத்தாக சாப்பிடுகிறான், கையில் செல்போனைக் கொடுத்துவிட்டால் பிரச்சினையில்லாமல் இருக்கலாம் என்று செல்போனைக் கொடுத்து நாம்தான் பழக்கப்படுத்துகிறோம் என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். நிலாவைக் காண்பித்து உணவினை மீண்டும் ஊட்ட ஆரம்பிக்கலாம்.



செல்போனை குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே பார்ப்பது - அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரம் என்று வளர்ந்த பிள்ளைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். சற்று கடினமானதுதான். பெற்றோர் முதலில் முன்னுதாரணமாக இருப்பது அவசியம். தேவையில்லாமல் ஏதாவது வந்திருக்கிறதா என்று செல்போனை எடுத்து அடிக்கடி பார்ப்பதை பெற்றோர் தவிர்க்கலாம். பிள்ளைகள் நம்மைப் பார்த்துத்தான் கற்றுக் கொள்கிறார்கள். வாரம் ஒருநாள் வீட்டில் அனைவரும் செல்போனுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது. 

தொடர்ந்து செல்போனை நீண்ட நேரம் பார்க்கும்போது 20:20 என்ற சூத்திரத்தை நினைவில் கொள்ள வேண்டும்.  இதன் நோக்கம் தொடர்ந்து செல்போனை நீண்டநேரம் பார்க்கும்போது கண்ணுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பது. அதாவது தூரத்தில் பார்ப்பதற்கும் கண்ணுக்கு அருகில் பார்ப்பதற்கும் இடையே ஒரு சமநிலையை பராமரிப்பதன் மூலம் கிட்டப்பார்வை ஏற்படுவதைத் தடுப்பது.

எனவே 20:20 ஐ நினைவில் வைத்துக் கொண்டு 20 நிமிடத்துக்கு ஒரு முறை கண்களை செல்போனில் இருந்து விலக்கி தொலைவில் இருக்கும் பொருளை சில விநாடிகள் ( நினைவில் வைக்க ஏதுவாக 20 விநாடிகள்)- பார்த்து விட்டு – கண்களை தாமாக சில தடவைகள் இமைத்துவிட்டு பின் மீண்டும் செல்போனைப் பார்க்கலாம். 

வீட்டில் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக பிள்ளைகள் படிக்கும் அறையில். இரவில் அதிக நேரம் விழித்திருக்காமல் குறிப்பிட்ட நேரம் முறையாக தூங்குவதும் கிட்டப்பார்வை ஏற்படுவதைத் தடுக்கும்.

***

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் (ஓய்வு)

மதுரை.

 

 

புதன், 28 மே, 2025

சமையல்/அன்பு

‘சமையல் செய்து அன்பை பரிமாறு.’ இதைக் கேட்ட சமையல்கலையில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியை ஒருவர் ‘அபாரம்' என்றார்கள். ஒரு வகையில் அவர்கள் எனக்கு உறவு. அவர்களின் வீட்டில் சாப்பிட மிகவும் பிரியப்படுவேன். எந்த உணவை எடுத்தாலும் தனித்துவமான ருசி இருக்கும். எப்படி இந்த சுவை என்று வியப்பேன். அப்படிப்பட்ட கைதேர்ந்த அவர்கள் அந்த வரியைக் கேட்டதும் இதுவரையில் நான் இப்படி சிந்தித்தது இல்லை என்று வியந்தார்கள். வியப்பு என்னவென்றால் அவர்களும் அன்பைப் பரிமாறுபவர்கள்தான்.

அன்பைப் பரிமாறுதல் என்றால்?

பொதுவாக வீட்டில் பிள்ளைகள் சரியாக சாப்பிடுவதில்லை என்று பெண்கள் அங்கலாய்ப்பார்கள். வேலைக்குப் போகும் பெண்களாய் இருந்தால் கேட்கவே வேண்டாம். அவசர அவசரமாய் கிளம்பி பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்து பள்ளிக்கும் டிபனில் கட்டிக் கொடுத்து தனக்கும் எடுத்துக் கொண்டு இயந்திரமாய் செயல்படுகிற காலம் இது.

அனைத்துமே இயந்திரகதிதான். காலையில் சமையலறை ஒரே களேபகரமாகத்தான் இருக்கும். கடுகு டப்பா எங்கஉப்பு எங்க காணோம்இங்கதானே வச்சேன் எண்ணெய் பாட்டில். காணோமே. எங்க போச்சு. இருக்கிற எடத்தில் எதுவுமே இல்லை. அய்யோ நேரமாச்சே. பிள்ளைக்கு ஸ்கூல் பஸ் வந்துடுமே. அப்புறம் நான் எப்ப வேலைக்கு போறது. இந்த மாதிரி சத்தங்களிலும்அங்கலாய்ப்புக்களிலும் தயாராகும் உணவு எப்படி இருக்கும்பிள்ளைகள் நன்றாக விரும்பி முழுமையாக சாப்பிடுவார்களா?

இதை இப்படி சொன்னால் எளிதில் புரியும்.

வீட்டிற்கு நமக்கு பிரியமான மாமாவோமச்சானோ அல்லது அம்மாவோஅக்காவோ வந்தால் சமையலைப் பார்த்து பார்த்து செய்வோம் இல்லையாநாம் அதிகம் நேசிக்கும் நமக்கு வேண்டப்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூடுதல் கவனம் காட்டுவதில்லையாஒவ்வொன்றாக கவனமாக பிரியமுடன் பிரியமானவர்களுக்காக செய்யும்போது அவர்களும் திருப்தியாய் சாப்பிட்டுவிட்டு இன்றைக்கு சாப்பாடு ரொம்ப பிரமாதம்’ என்று சொல்வதில்லையா?

நாம் காட்டினோமே அன்பு. பிரமாதம் என்று சொல்லவைத்ததற்கு காரணம் அதுதான். பார்த்து பார்த்து செய்தது அல்லவா அந்த சமையல்.

சமையல் என்பது வெறும் உணவு அல்ல. அது அன்பு.

 

திங்கள், 5 மே, 2025

மேகமலை

 

மேகமலை. ஏற்றமும் இறக்கமும்





 

 

பெரிய மனதோடு வரவேற்கும் சின்னமனூர்.  மனைவியுடன் பணி செய்யும் ஆசிரியரின் மகளின் திருமணத்திற்காக ஆசிரியர்கள் 20 பேராய் வேனில் பயணம். திருமணம் முடிந்து குச்சனூர் சென்று வந்த பின் நேரம் இருந்ததால் பக்கத்தில் இருக்கும் மேகமலைக்கு செல்லலாமே என்று திடீர் திட்டம். கையில்தான் வேன் இருக்கிறதே.

அதுவரை மெளனமாய் இருந்த வானம் மெதுவாய் கலவரமானது.  சாரலாய், மிதமாய், வலுவாயும் பயம் காட்டியது மழை. இந்த மழையில் மேலே செல்வதா என்று கொஞ்சம் சிந்தனை. இந்த மேகமலைக்காக, திருமணத்துக்கு கணவருடன் காரில் வந்த ஆசிரியர் ஒருவர், கணவர் அவசர வேலை காரணமாக செல்ல வேண்டி இருந்ததால் திருமணம் முடிந்தவுடன் அவரை அனுப்பிவிட்டு வேனில் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். மேகமலையை பார்க்காமல் எப்படி திரும்புவது? மேகமலை செல்ல முடிவானது.

முடிவானதும் வழக்கம்போல் அப்பகுதி நண்பர்களிடமும் வனத்துறை அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்து முன்னேற்பாடுகளை செய்துகொண்டேன். ஒரு பாதுகாப்புக்காக. பொதுவான என் வழக்கம் இது.

மேகமலை அருமையான இடம். மலை ஏறும்போதே கீழே 6 மணிக்குள் இறங்கிவிட வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி அனுப்பினார்கள். நாங்கள் மேலே ஏறும்போதே 3 மணி ஆகிவிட்டது. மழை வேறு.

இந்த பயணத்தை ஒருங்கிணைத்தது தலைமை ஆசிரியரும் ஆசிரியர் ஒருவரும் தான். மணமகளின் தாயார் ஆசிரியர் நல்ல நண்பர். உடன் உப்புக்குச் சப்பாணியாய் தான் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு செல்கிறேன். வேறு எந்த பொறுப்பும் எனக்கில்லை.

ஆனால் அத்துணைபேரையும் பத்திரமாய் அழைத்து சென்று திரும்ப கீழே இறங்கி வீடு திரும்ப வேண்டும் என்ற பயங்கலந்த நினைப்போடுதான் பயணித்துக் கொண்டிருந்தேன். பயணங்கள்  தந்த  அனுபவங்களினால் எப்போதுமே அதீத கூடுதல் கவனம். வனத்துறை சொன்ன நேரத்துக்கு பிரச்சினை செய்யாமல் கீழே இறங்க வேண்டும் என்ற பொறுப்பும்.

மேகமலை. கண்ணுக்கு எட்டிய வரை பச்சைப்பட்டு தான். குளிர்ச்சி மனதுக்கும் தான். மேகமலை ஒரே ஒரு இடம் மட்டும் என்பதால் கொஞ்சம் நிதானம். கொஞ்சம் மகிழ்ச்சி. கொஞ்சம் ரசனை. அவ்வளவுதான் மற்றபடி வளைத்து வளைத்து ரம்யமான புகைப்படங்கள்  எடுக்க ஏற்ற அற்புதமான இடம். புகைப்படங்களைப் பார்த்தாலே நளினம் நடனமாடுவது தெரியும். அமைதியான சூழல். இந்தப் பயணத்தில் என் பங்களிப்பு என்று எதுவும் தனியாக கிடையாது. ஆசிரியர்கள் அனைவரும் அன்று மாணவர்களாய் மகிழ்ந்தார்கள்.

பொதுவாக இதுபோன்ற பயணங்களில் திரும்பும்போது கலந்துகொண்டவர்களிடம் பயணம் குறித்து பேசச் சொல்வது வழக்கம். அன்றும் ஆசிரியர்களிடம் மேகமலை அனுபவங்களை சொல்லச் சொன்னேன். நேரமும் போக வேண்டுமே. மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்கள் ஆசிரியர்கள். இது போன்ற சுற்றுலா இதுவரை சென்றதில்லை என்றார் ஒரு ஆசிரியர். இன்னொரு ஆசிரியர் அருமை என்று சிலாகித்தார்.

இந்த சுற்றுலா சிறப்புற என்னுடைய மூத்த அனுபவமும் ஒரு காரணம் என்பது தலைமை ஆசிரியரின் கருத்து.  

முழுமையாக நிதானமாய் ரசித்ததாயும். சரியாக திட்டமிட்டு ஒருங்கிணைத்தாகவும் பயணம் சிறப்புற  தலைமை ஆசிரியருடன் எனக்கும் சேர்த்து நன்றி தெரிவிக்க மறக்கவில்லை. வேகப்படுத்தாமல் முழுமையாக ரசிக்க உதவியதாய் இன்னுமொரு ஆசிரியர். பாராட்டும்போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அது எல்லாம் நொடி நேரத்துக்குத்தான்.

அதுவரை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த என் தர்மபத்தினி,      ‘...க்கும். நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. பொதுவா அவரும் பொதுவா அப்படித்தான். விரட்டு விரட்டுன்னு விரட்டுவார். பார்த்தது போதும் வா. நேரமாச்சு நேரமாச்சு, கிளம்புங்க கிளம்புங்கன்னு விரட்டிக்கிட்டே தான் இருப்பார்.’ என்று பொறுக்கமாட்டாமல் மெதுவாக பொங்கினார்.

வேன் திரும்பிக் கொண்டிருந்தது. மேகமலையில் இருந்து முழுமையாக இன்னும் கீழே இறங்கவில்லை. ஆனால் என் தர்மபத்தினிதான் என்னை ஒரேயடியாக இறக்கிவிட்டுவிட்டாரே!.

 

 

ஞாயிறு, 16 மார்ச், 2025

நாம் எங்கிருக்கிறோம்?

 

நாம் எங்கிருக்கிறோம்?

 

அந்தப் பச்சிளங்குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்?

நடந்தது. மத்தியபிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில். சென்ற வியாழன் அன்று. அந்தக் குழந்தைக்கு உடல்நலக்குறைவு. ஆறுமாத பச்சிளங்குழந்தை. உடல்நலக்குறைவு சரியாக மருத்துவமனைக்குத்தான் பொதுவாக செல்வோம். ஆனால் அந்தக் குழந்தையின் அம்மா செய்தது என்ன தெரியுமா?

குழந்தையைத் தூக்கிகொண்டு மந்திரவாதியிடம்  சென்றிருக்கிறார். அந்த தாந்திரீக மந்திரவாதி அமானுஸ்ய சடங்குகள் செய்வதில் வல்லவராம். அப்படி நினைத்துத்தான் அந்த அம்மா குழந்தையைத் தூக்கிக் கொண்டு போயிருக்கிறார்.

அவரும் படம் காண்பித்திருக்கிறார். வினோதமான அந்த சடங்கு ?

கீழே நெருப்பு. யாகம் போலிருக்கிறது. குழந்தையை தூக்கிப் பிடித்து தலைகீழாக நெருப்புக்கு பக்கத்தில் காண்பித்திருக்கிறார் அந்த மந்திரவாதி.

  

அவ்வளவுதான். குழந்தையின் இரு கண்களின் கருவிழியும் பொசுங்கிப் போய்விட்டதாம். இனி அந்தக் குழந்தையின் பார்வை? எதிர்காலம் ?  

குழந்தை தற்போது சிவ்புரி மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில்.

லேசாக கைவிரலில் நெருப்புபட்டாலே வலி தாங்க முடியாது. உயிரை எடுக்கும்.

ஆனால் அந்த பச்சிளங்குழந்தை?? நினைத்துப் பாருங்கள்.

ஒன்றும் சொல்வதற்கில்லை.

நாம் எங்கிருக்கிறோம்?

( செய்தி இன்றைய 16-03-2025 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது. )


 

 

 

 

 

திங்கள், 10 மார்ச், 2025

கண்ணில் பிரசர் வருமா?

                     கண்ணில் பிரசர் வருமா?                     

                உலக கண்நீர் அழுத்த உயர்வு வாரம்

                          ( மார்ச்சு 10 – 16 )

மு.வீராசாமி

மதுரை

---

கருப்பையாவுக்கு அடிக்கடி தலைவலி.  கிராமத்து சுகாதார நிலையத்தில்  அடிக்கடி போய் மாத்திரை வாங்கி சாப்பிட்டும் பயனில்லை.  ‘மருத்துவமனைக்கு வந்து கண்ணைப்  சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள் என்ற நர்ஸம்மாவின் அறிவுரையை காதில் வாங்கிக் கொள்ளவுமில்லை.  

கொஞ்ச நாளாக பார்வையில் லேசாக தடுமாற்றம் வேறு. இரு சக்கர வாகனம் ஓட்டிச் செல்கையில் பக்கத்தில் வருபவர்களும் சரியாகத் தெரியவில்லை. நர்ஸம்மாவிடம் சொன்னதில் உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டார்.

மருத்துவமனையில் சோதித்துவிட்டு கண்ணில் பிரசர் அதிகரித்துவிட்டதாக  சொல்லிவிட்டார்கள். ( கிளாக்கோமா ) கண் பிரசரால் கண்ணில் 40 விழுக்காடு பார்வை இழப்பு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது என்றும் வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் இருக்கிற பார்வையைத்தான் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று கண்மருத்துவர் சொன்னதைக் கேட்டு கருப்பையா பயந்து போய்விட்டார்.

 

கிளாக்கோமாவில் என்ன பிரச்சினை?

 

பி.பி. நமக்குத் தெரிந்ததுதான். இதைப் படிக்கும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் பாதிப்பேருக்கு இருக்கவும் கூடும். இரத்த அழுத்தம் 120/80 மி.மீ பாதரச அழுத்தம் என்றால் பிரச்சினை இல்லை. கூடினால் பிரஷர். பி.பி.கூடிருச்சு என்கிறார்கள்.  இதைப் போல் கண்ணிலும் ஒரு அழுத்தம் பராமரிக்கப்படுகிறது. 10-20 க்குள் இருந்தால் நல்லது.


 

உடம்பில் பிரஷர் அதிகமானால் எப்படி பி.பி. என்கிறோமோ அதேபோல் கண்ணில் அழுத்தம் உயர்ந்தால் அதுதான் கிளாக்கோமா. கண்நீர் அழுத்த உயர்வு.

கிளாக்கோமா வருவதற்கு முன், தகவல் சொல்லிவிட்டு  வருவது கிடையாது. பொதுவாக எந்த விதமான அறிகுறிகளும் தெரியாது. அதுபாட்டுக்கு அமைதியா வந்து தாக்கும். வந்ததே தெரியாது. அமுக்குணித் திருடன் என்று சொல்லலாம். நன்றாக கால் ஊன்றிய பிறகு அதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டபிறகே கண்ணில் ஏதோ பிரச்சினையாக இருக்கிறது போலிருக்கிறதே என்று லேசாக உணரமுடியும். அதுவரையில் தெரியாது.

சரி அதனாலென்ன? என்றால் பிரச்சினயே அதுதான். அதை  விரிவாக தெரிந்து கொள்வதற்கு நாம் செடியைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கிறது. செடி நன்றாக வளர அதற்கு நீர் தேவை. நீர் ஊற்றாமல் விட்டுவிட்டால் செடி நாளடைவில் பட்டுப்போய்விடும் அல்லவா. பட்டுப் போன பின் லிட்டர் லிட்டராக நீர் ஊற்றினாலும் பழையபடி துளிர்க்க வைக்க முடியுமா?

கிளாக்கோமாவிலும் அப்படித்தான். கண்ணில் அழுத்தம் அதிகரித்தது கண்டறியப்படாமல் தொடக்க நிலையில் சிகிச்சை செய்ய வில்லை என்றால் அழுத்த அதிகரிப்பினால் பார்வை நரம்புகள் பாதித்துவிடும். இதனால் பார்வையும் கடுமையாக பாதித்துவிடும். ஒருமுறை பாதித்தால் பாதித்ததுதான். ரிப்பேர் எல்லாம் செய்ய முடியாது.

பட்டுப்போன செடியை மீண்டும் துளிர்க்க வைக்க முடியுமா? அதைப் போன்றுதான் பாதித்த பார்வை நரம்புகளை மீண்டும் சரி செய்ய முடியாது. மேற்கொண்டு சிகிச்சை செய்து அழுத்தத்தை கட்டுப்படுத்தி இருக்கின்ற பார்வையை காப்பாற்றலாம்.

 

பார்வையை பாதுகாப்பது எளிதா?

 

மருத்துவமனையில் 40 வயதிற்கு மேல் எப்படி இரத்த அழுத்த சோதனை செய்து கொள்கிறோமா அதைப்போன்று கண்மருத்துவமனையில் கண்ணில் அழுத்த சோதனையினையும் ( Eye Pressure Test ) பார்த்துக் கொள்ள வேண்டும். யாரும் வந்து பாருங்கள் என்று சொல்ல மாட்டார்கள். நாமாகத்தான் போய் பார்த்துக் கொள்ள வேண்டும். 40 வயதில் இதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. ஒரு வேளை இருந்தால் தொடக்க நிலையிலேயே சரியான சிகிச்சை செய்து கட்டுக்குள் வைக்கலாம்.


 

மருத்துவமனையில் கண்ணில் மருந்துபோட்டு சிலிட் லேம்ப் சோதனை, ஆப்தால்மாஸ்கோப் சோதனை செய்து கண்ணை உள்நோக்கி சோதித்து கிளாக்கோமா பாதிப்புக்கான வெளிப்பாடுகள் இருக்கிறதா என்று மருத்துவர் பார்ப்பார்.

40 வயதில் ஒருவருக்கு வெள்ளெழுத்துக் கண்ணாடியை மாற்ற வேண்டி இருந்தால் மருத்துவமனைக்கு சென்றால்தான் இந்த சோதனைகளை எல்லாம் பார்த்துக் கொள்ள முடியும். நேரடியாக கண்ணாடிக் கடைக்குச் சென்று வாங்கினால் இந்த சோதனைகளை எல்லாம் பார்க்க முடியாது. ஒருவேளை கிளாக்கோமா இருந்தால் தொடக்க நிலையில் கண்டறியும் வாய்ப்பு கிடைக்காமல் போகும்.

கிளாக்கோமாவை தொடக்கநிலையில் கண்டறியாமல் போனால் நாளாக நாளாக பக்கப்பார்வை வெகுவாக குறையும். பொதுவாக நாம் ஒரு பொருளைப்பார்க்கும்போது இரண்டு கண்ணின் இரு புறமும் (சைடு பார்வை) இருக்கிற பொருட்களை ஒரு அளவு வரை நம்மால் பார்க்க முடியும்.

நடந்தோ இரு சக்கர வாகனத்திலோ செல்கிறோம். பக்கத்தில் யார் வருகிறார்கள்-போகிறார்கள் என்பது ஓரளவுக்குத் தெரியும். இலையில் சாப்பிடுகிறோம். முழு இலையிலும் இருக்கும் உணவு பதார்த்தங்களை முழுமையாக பார்க்க முடியும்.

ஆனால் கடுமையாக பாதிக்கப்பட்டால் பக்கப்பார்வை குறையும். பக்கத்தில் யார் வருகிறார்கள் என்பதோ இலையில் இருக்கும் பதார்த்தங்கள் முழுமையாகவோ தெரியாது. குழாய் வழியாக பார்ப்பதுபோல் கூட பார்வை அளவு வெகுவாக குறைந்து விடலாம்.

 

இப்போது புரிந்திருக்கும்.

 

யாரெல்லாம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளலாம்.

Ø  குடும்பத்தில் யாருக்கேனும் கிளாக்கோமா இருந்தால்

Ø  உடலில் இருக்கும் வேறு ஏதேனும் நோய்க்கு தொடர்ந்து ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டிருந்தாலும்

Ø  வெள்ளெழுத்துக் கண்ணாடியை அடிக்கடி மாற்ற வேண்டி இருந்தாலும்

Ø  விளக்கினைச் சுற்றி கலர் கலராய் தெரிந்தாலும்

Ø  அடிக்கடி ஏற்படும் நாள்பட்ட தலைவலி

Ø  பக்கப் பார்வையில் தடுமாற்றம் இருந்தாலும்

உடனே கண்மருத்துவரிடம் சென்று கண்ணில் அழுத்தம் அதிகரித்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக மருத்துவமனைக்கு செல்லும்போதே பார்வை பாதிப்போடு செல்லும் நிலையில் தான் கிளாக்கோமா இருக்கிறது. பார்வையைக் காக்க கிளாக்கோமாவுக்கு தேவையெல்லாம் தொடக்க நிலை கண்டுபிடிப்பு. நல்ல கண்சொட்டு மருந்துகள் இருக்கின்றன. தேவைப்பட்டால் லேசர் மருத்துவமும், அறுவை சிகிச்சையும் செய்வார்கள்.

தொடக்கநிலை – கண்டுபிடிப்பு-சிகிச்சை-கவனிப்பு பார்வையை நிச்சயமாக பாதுகாக்கும்.