வினோத்துக்கு சர்க்கரைப் பிடிக்கும். ஆனால் விழித்திரைக்குப் பிடிக்காதே.
மருத்துவத்துறையைச் சார்ந்த நண்பர். அறிவார்ந்தவர்தான். அதுவும் மருந்தைக் கையாளுபவர்தான். சர்க்கரை மெல்ல எட்டிப்பார்க்கும்போதே அவரை எச்சரித்தேன். அவருக்கு இன்னொருவர் சொல்லத் தேவையில்லைதான். இருந்தாலும் நட்புகருதி என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
சிகிச்சையின் அவசியம், குறிப்பாக பார்வையிழந்துபோதலின் ஆபத்து குறித்தெல்லாம் சொல்லி இருந்தேன்.
இருந்தாலும் அவர் அலட்சியமாகவேத்தான் அப்போது கேட்டார்.
அண்மையில் அவரைப் பார்த்தபோது கண்கலங்கினார். ‘நீங்கள் சொன்னபோதே கேட்டிருக்க வேண்டும். இப்போது கண்ணில் இரத்தம் கசிந்து ஏகப்பட்ட பிரச்சினையாகிவிட்டது. பார்வை கடுமையாகப் பாதித்துவிட்டது. கண்ணில் ஊசிபோட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருக்கிறேன்’’’’.’’ கேட்பதற்கு பரிதாபமாக இருந்தது.
என்ன சவால்
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு இந்த ‘சர்க்கரைநோய் விழித்திரைப் பாதிப்பு’ என்ற ( Diabetic Retinopathy ) பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் தொடர் சிகிச்சை செய்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவே.
இன்றைய நாளில் ‘சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பினால்’ ஏற்படும் பார்வை பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. கண்மருத்துவமனையின் விழித்திரைப்பிரிவிற்கு சென்று அங்குள்ள கூட்டத்தைப் பார்த்தால் தெரியும், எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று.
பெரும்பாலும் இந்நோய் தாக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர், நோய் தமக்கு இருப்பது தெரியாமல், முறையாக சிகிச்சை செய்துகொள்ளாமல் விழித்திரையில் பாதிப்புக்குள்ளானவர்கள்தாம். இன்னொரு பகுதியினரோ நோய் இருப்பது தெரிந்தும் முறையாக சிகிச்சை செய்துகொள்ளாமல் பக்க விளைவுகளால் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்.
சர்க்கரைநோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள்:
சர்க்கரைக்கு முறையாக சிகிச்சை செய்துகொள்ளாதபோது கால்கள், நரம்புமண்டலம், மூளை, சிறுநீரகம், இதயம் இவற்றுடன் கண்களும் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
சர்க்கரைநோயினால் கண்களில் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது:
ஒரு பொருளைத் தெளிவாக பார்க்க வேண்டும் என்றால், நம்கண்ணில் உள்ள கருவிழி ( Cornea ), லென்சு, விழித்திரை, பார்வை நரம்பு அனைத்தும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சர்க்கரைநோய் விழித்திரை பாதிப்பில் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் இரத்தக்கசிவு ஏற்படுவதால் பார்வை வெகுவாக பாதிக்கப்படுகிறது.
சில சமயங்களில் விழித்திரையில் புதிய ரத்தக்குழாய்கள் தோன்றலாம். இந்த புதிய ரத்தக்குழாய்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு அதனால் விழித்திரை அதன் அடுக்கிலிருந்து பிரிவதன்மூலமும் ( Retinal Detachment ) பார்வையிழப்பு ஏற்படலாம்.
பாதிப்பை சரிசெய்ய முடியுமா?
விழித்திரைப் பாதிப்பை முற்றிலும் சரிசெய்ய முடியாது.
சிலருக்கு Anti vascular endothelial growth factor எனப்படும் இரத்தநாள உள் அடுக்கு வளர்ச்சி காரணியைத் தடுக்கும் மருந்துகள் கண்ணுக்குள் ஊசி மூலம் செலுத்த வேண்டி வரும். இந்த மருந்து கண்ணுக்குள் ஏற்படும் வீக்கத்தையும், புதிய இரத்தநுண்குழாய் வளர்ச்சியையும் தடுக்க உதவும்.
பாதிப்பைப் பொறுத்து லேசர் சிகிச்சையும் செய்ய வேண்டி வரும். இதன் மூலமும் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். விழித்திரை ரத்தக்குழாய்களில் ஏற்பட்ட கசிவு, லேசர் சிகிச்சையின் மூலம் சரி செய்யப்படும். சிலருக்கு பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து ‘விட்ரெக்டமி’ என்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். விழித்திரைப் பிரிந்திருந்தால் அதற்கும் அறுவை சிகிச்சைத் தேவைப்படும்.
சர்க்கரைநோய் உள்ள எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுமா?
சர்க்கரைநோய் உள்ளவர்கள் அனைவருக்குமே ‘சர்க்கரைநோய் விழித்திரை பாதிப்பு’ ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் சர்க்கரைநோய்க்கு முறையாக சிகிச்சை செய்துகொண்டு, கண்களையும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்துகொண்டு வருவதன்மூலம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.
கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் வேண்டாம்
சர்க்கரைநோய் விழித்திரை பாதிப்பைப் பொருத்தவரையில் வருமுன் காப்பதே சிறந்தது. நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, முறையான சிகிச்சை மூன்றும் அவசியம். விழித்திரைப் பாதிப்பின் ஆரம்ப நிலையில் எந்தவித அறிகுறிகளும் வெளிப்படாது என்பதால் ஆறுமாதத்திற்கு ஒருமுறை கண்களை கட்டாயம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் விழித்திரைப் பாதிப்பை பொருத்தவரையில் தொடக்கநிலையிலேயே கண்டறியவேண்டியதும், அதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை செய்ய வேண்டியதும் மிக மிக அவசியம்.
சர்க்கரைநோயுடன் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம், புகை பிடிக்கும் பழக்கம் ஆகியவை இருந்தால் சர்க்கரைநோய் விழித்திரைப் பாதிப்பு தீவிரமடைய வாய்ப்புண்டு. எனவே இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதுடன், புகையினையும், மதுவினையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோயுள்ளவர்களுக்கான புத்தாண்டு செய்தி என்னவென்றால் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்தால் தேவையில்லாமல் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். இந்த ஆண்டு மட்டுமல்ல வரும் ஆண்டும் உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாகவே இருக்கும்!
மு.வீராசாமி
முதல்நாள் 2025
மதுரை