வெள்ளி, 27 ஜூன், 2025

கிட்டப்பார்வையைத் தடுக்க முடியுமா?

    கிட்டப்பார்வையைத் தடுக்க முடியுமா?

 

இன்று குழந்தைகளை வளர்ப்பதில் பெரிய பிரச்சினை ஒன்று இருக்கிறது. அதை வளர்ப்புச் சிக்கல் என்றுகூட சொல்லலாம். செல்போன் கொடுக்காமல் வளர்ப்பதுதான் அது. பிள்ளைகள் சத்தம் போடாமல், தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று அவர்கள் கையில் கொடுக்கிறார்கள். குழந்தைகளைப் பொறுத்த வரையில் அது ஒரு விளையாட்டுப் பொருள் அவ்வளவுதான். அதாவது அவர்கள் மொழியில் அது ‘டாய்ஸ்’.

செல்போன் கொடுத்தால் என்ன? கையில் வைத்துக் கொள்ளட்டும். விளையாடிவிட்டு போகட்டும் என்று விட்டுவிட முடியாது. காரணம் பிறந்த மூன்று நான்கு மாதங்களில் செல்போனைக் கையில் எடுக்கும் குழந்தை தொடர்ந்து அதற்கு பழகும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. பெற்றோர் குழந்தையின் கண்ணுக்கு முன்பாகவே வெவ்வேறு காரணங்களுக்காக செல்போனைக் கையில் எடுக்கும்போதெல்லாம் அதை குழந்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள். சொல்லித்தராமலேயே அதைக் கையாளவும் பிள்ளைகள் தெரிந்துகொள்கிறார்கள்.



கொஞ்ச நாளைக்கு பெற்றோரின் செல்போனைக் கையில் எடுக்கும் பிள்ளைகளுக்கு நாளடைவில் தனியாகவே ஒரு செல்போன் கிடைத்துவிடுகிறது. பெற்றோர் பிள்ளைகளை செல்போனுக்கு அடிமையாக்குவது இப்படித்தான். அடிமையாக்கிவிட்டு பின்னாளில் பிள்ளையின் கையில் இருந்து செல்போனை வாங்க முடியவில்லை என்று வருந்தவும் செய்வார்கள்.


 

செல்போனால் கண்ணுக்கு என்ன பாதிப்பு ?

 

அது மருத்துவமனை ஒன்றின் வரவேற்பறை. காத்திருந்தவர்களில் எழுவரில் மூவர் சிறுவயதினர். மூவரும் கண்ணாடி அணிந்திருந்தார்கள். மூவருமே செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவும் கண்ணுக்கு மிக அருகில் வைத்து. கண்ணாடி பவர் கொஞ்சம் அதிகம்தான். -6, -7 இருக்கும். மூவரின் வயதுமே எட்டுக்குள்தான். தங்களுக்கு இருக்கும் கிட்டப்பார்வை குறித்தோ அதனால் பின்னாளில் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்தோ எந்தவித கவலையுமின்றி  அந்த குழந்தைகள் செல்போனே கதி என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரயிலில் பயணம் செய்யும்போது குறிப்பாக பகலில் பயணிகளை அதிகமான அளவில் ஒரு சேர பார்க்கலாம். பயணம் செய்யும் குழந்தைகளை கவனித்தால் பெரும்பாலோர் கண்ணில் கண்ணாடி இருக்கும். வழக்கம்போல் கையில் செல்போன் இருக்கும்.. 

பார்க்கும் குழந்தைகளின் கண்களில் எல்லாம் கண்ணாடியா என்றுகூட நினைக்கத் தோன்றும். முந்தைய தலைமுறையில் இப்படி இல்லையே. பின் ஏன் இந்த திடீர் அதிகரிப்பு?

செல்போன் இல்லாத முந்தைய தலைமுறைகளில் பிள்ளைகளின் வாழ்க்கை வீட்டில் விளையாட்டுவீட்டுக்கு வெளியேயும் ஓடியாடி விளையாட்டுபின் படிப்பு என்றிருந்தது. விடுமுறை நாட்களில் முழுவதும் விளையாட்டுதான். அன்றைய தலைமுறை இப்படியென்றால் இன்றைய பிள்ளைகளின் வாழ்க்கை டாப்லெட் பிசிசெல்போன் போன்ற மின்னணு சாதனங்களுடன் ஒரு அறைக்குள் சுருங்கிவிட்டது. இன்று போல் அன்று குழந்தைகளிடையே கண்ணாடியை அதிகமாக பார்க்கவும் முடியாது. ஒன்றிரண்டு குழந்தைகள் போட்டிருப்பார்கள். அவ்வளவுதான்.

ஆனால் இன்றைய நிலைமை வேறு. கடுமையான கல்விச்சுமை அவர்களுக்கு. இந்த கடுமையான போட்டி சூழலில் பிள்ளைகள் எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. பள்ளிக்கு போய் வந்த பின்னரும் மாலையில் தனி டியூசன் வகுப்புகள். கூடவே இசை, நாட்டியம், வயலின் போன்ற பன்முகத்திறன்களுக்கான வகுப்புகள். 

சரி. இதையெல்லாம் முடித்து இரவு வீட்டுக்கு திரும்பிய பிறகாவது தூங்கப்போகலாமா என்றால் முடியாது. அதன்பின் பள்ளியில் தந்த வீட்டுப்பாடம், டியூசன் ஆசிரியர் தந்த வீட்டுப்பாடம், மறுநாள் தேர்வுக்கான தயாரிப்பு என்று பிள்ளைகள் எப்போதும் அறைக்குள்ளேயேதான்  இருக்க வேண்டி இருக்கிறது. இதனால் வெளிப்புறச்சூழலில் அவர்கள் நேரம் செலவிடுவதே இல்லாமல் போய்விட்டது.

 

வெளிப்புறச்சூழலால் என்ன பயன் ?

 

பிள்ளைகள் வெளிப்புறச்சூழலில் இருக்கும்போது சூரிய ஒளிக்கதிர்கள் கண்ணின் விழித்திரையில் டோபமைன் என்ற வேதிப்பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது. இது விழிக்கோளம் நீட்சி அடைவதைத் தடுக்கிறது. இதன் மூலம் கிட்டப்பார்வை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் சூரிய ஒளிமூலம் வைட்டமின் ‘டி' யும் உடலுக்கு கிடைக்கிறது. இதுவும் கிட்டப்பார்வையைத் தடுப்பதில் உதவுகிறது.  

 

செல்போனால் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

 

செல்போனின் திரை மிகச் சிறியது. அதில் உள்ள எழுத்துருக்களின் அளவும் (font size) சிறியது. வழக்கமாக பேப்பர் அல்லது புத்தகத்தை ஒரு அடி தொலைவில் வைத்துதான் பார்ப்போம். ஆனால் செல்போனை கண்ணுக்கு அருகில் வைத்துதான் பார்க்கிறோம்.

கண்ணுக்கு மிக அருகில் வைத்து பார்க்கும்போது நம்முடைய இரண்டு கண்களும் ஒருங்கிணைந்து மூக்குப் பக்கம் திரும்புவதைப் பார்க்கலாம். தொடர்ந்து செல்போனைப் பார்க்கும்போது இரண்டு கண்களின் இணைந்த இயக்கமும் கண்ணின் ஈடுசெய்யும் திறனின் தேவையும் மேலும் அதிகரிக்கிறது. கிட்டப்பார்வை ஏற்படுவதற்கு இதுவும் காரணமாக இருக்கிறது. 

 

சரி, கிட்டப்பார்வையைத் தடுக்க முடியுமா?

 

பிள்ளைகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டுக்கு வெளியே விளையாடச் சொல்ல வேண்டும். ஏற்கனவே கண்ணாடி போட்டிருப்பவர்களும் வெளிப்புறச்சூழலில் இருப்பதன் மூலம் கண்ணாடி லென்சு பவர் அதிகரிப்பது தடுக்கப்படும்.



செல்போன் பார்ப்பதில் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடு தற்போது இந்தியாவில்  இல்லை. பிறந்த ஓராண்டு வரை பிள்ளைகளுக்கு செல்போனை கையில் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அழுகையில்லாமல் சமத்தாக சாப்பிடுகிறான், கையில் செல்போனைக் கொடுத்துவிட்டால் பிரச்சினையில்லாமல் இருக்கலாம் என்று செல்போனைக் கொடுத்து நாம்தான் பழக்கப்படுத்துகிறோம் என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். நிலாவைக் காண்பித்து உணவினை மீண்டும் ஊட்ட ஆரம்பிக்கலாம்.



செல்போனை குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே பார்ப்பது - அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரம் என்று வளர்ந்த பிள்ளைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். சற்று கடினமானதுதான். பெற்றோர் முதலில் முன்னுதாரணமாக இருப்பது அவசியம். தேவையில்லாமல் ஏதாவது வந்திருக்கிறதா என்று செல்போனை எடுத்து அடிக்கடி பார்ப்பதை பெற்றோர் தவிர்க்கலாம். பிள்ளைகள் நம்மைப் பார்த்துத்தான் கற்றுக் கொள்கிறார்கள். வாரம் ஒருநாள் வீட்டில் அனைவரும் செல்போனுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது. 

தொடர்ந்து செல்போனை நீண்ட நேரம் பார்க்கும்போது 20:20 என்ற சூத்திரத்தை நினைவில் கொள்ள வேண்டும்.  இதன் நோக்கம் தொடர்ந்து செல்போனை நீண்டநேரம் பார்க்கும்போது கண்ணுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பது. அதாவது தூரத்தில் பார்ப்பதற்கும் கண்ணுக்கு அருகில் பார்ப்பதற்கும் இடையே ஒரு சமநிலையை பராமரிப்பதன் மூலம் கிட்டப்பார்வை ஏற்படுவதைத் தடுப்பது.

எனவே 20:20 ஐ நினைவில் வைத்துக் கொண்டு 20 நிமிடத்துக்கு ஒரு முறை கண்களை செல்போனில் இருந்து விலக்கி தொலைவில் இருக்கும் பொருளை சில விநாடிகள் ( நினைவில் வைக்க ஏதுவாக 20 விநாடிகள்)- பார்த்து விட்டு – கண்களை தாமாக சில தடவைகள் இமைத்துவிட்டு பின் மீண்டும் செல்போனைப் பார்க்கலாம். 

வீட்டில் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக பிள்ளைகள் படிக்கும் அறையில். இரவில் அதிக நேரம் விழித்திருக்காமல் குறிப்பிட்ட நேரம் முறையாக தூங்குவதும் கிட்டப்பார்வை ஏற்படுவதைத் தடுக்கும்.

***

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் (ஓய்வு)

மதுரை.