திங்கள், 25 ஆகஸ்ட், 2025

தேசிய கண்தான இருவார விழா

                       

 தேசிய கண்தான இருவார விழா

                      ஆகஸ்ட் 25 – செப்டம்பர் 8 

குழந்தைகளுக்கு பாதுகாப்பாக விளையாட வழிகாட்டுவோம்.

அந்த அலறல் சத்தம் மருத்துவமனை முழுவதும் கேட்டதுபையனின் அலறல் சத்தத்தைக்கேட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர்கள் ஒன்றும் புரியாமலேயே போய்க் கொண்டிருந்தார்கள்.

“ஏண்டா இப்படிப் பண்ணித் தொலைஞ்சு என் உசிரை வாங்குற. ஒரு மாசமாஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா உன்னைக்கூட்டிக்கிட்டு அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். எப்ப கண்ணு கிடைக்கும்னு தெரியலையாம். கிடைச்சாத்தான் ஆப்ரேசன் பண்ண முடியும்னு டாக்டர் சொல்றாருஒரு மாசமா வேலைக்கும் சரியா போகலைகஞ்சிக்கு வேற நான் என்ன செய்வேன்னு தெரியலையே” என்று சொல்லி அந்த அம்மா தன் சிறு பிள்ளையை தலைகால் தெரியாமல் அடித்துக் கொண்டிருந்தார். 

பிரச்சினை இதுதான். நகரத்தின் மையப்பகுதி பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மணிகண்டன் காலை இடைவேளையின்போது ஓரமாகத்தான் சென்று கொண்டிருந்தான். பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பெருக்குமாறு குச்சியை எறிந்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக பிள்ளைகள் வேகமாக எறிந்த குச்சி அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த மணிகண்டனின் கண்ணில் பட்டு காயத்தை ஏற்படுத்திவிட்டது.

மருத்துவமனையில் டாக்டர் சோதித்துவிட்டு கருவிழி கடுமையாக பாதித்துவிட்டதாகவும் ( Corneal Blindness ) காயத்தை மட்டுமே நலப்படுத்தமுடியும் என்றும் பார்வை கிடைக்காது என்றும் சொல்லிவிட்டார். கருவிழி புண் நலமான பிறகு கருவிழி மாற்று அறுவைசிகிச்சை ( Corneal Transplantation ) செய்தால் பார்வை கிடைக்க வாய்ப்பு உண்டு என்று சொன்னது அந்த அம்மாவுக்கு சரியாக புரியவில்லை. 

கையில் சிறு சிராய்ப்பு ஏற்பட்டால்கூட வலிக்கும். கண்ணில் காயம் ஏற்பட்டபோது மணிகண்டனுக்கு ஏற்பட்ட வலியை நினைத்துப்பாருங்கள். விழிப்புணர்வும் வழிகாட்டலும் இருந்திருந்தால் இந்த காயமும் பார்வையிழப்பும் ஏற்பட்டிருக்காது அல்லவா!



கருவிழி பார்வையிழப்பைத் தடுக்கலாம்.

கருவிழி பார்வையிழப்பில் பெருமளவில் குழந்தைகளிடையே ஏற்படுவதாகத்தான் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் பெற்றோர் மேற்பார்வை இல்லாமல் வீட்டுக்கு வெளியே விளையாடும்போதுதான் ஏற்படுகிறது.

பள்ளி மாணவர்களிடையே சரியான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் கருவிழி பார்வையிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். 

பிள்ளைகள் பள்ளியில் குச்சி, பென்சில், பேனா போன்றவற்றை ஒருவர் மேல் ஒருவர் தூக்கி எறிந்து விளையாடும்போது கண்ணில் காயம் ஏற்படுவதால்  பார்வை இழப்பின் ஆபத்தை அவர்களுக்கு புரியுமாறு சொல்லி அப்படி விளையாடுவதைத் தவிர்க்கச் செய்ய வேண்டும். 

இதேபோல் பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே மணலில் விளையாடும்போது மணலை ஒருவர் மீது ஒருவர் தூவும்போது கண்ணில் பட்டு காயம் ஏற்படலாம்.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பிள்ளைகள் பட்டாசு மத்தாப்பு, வெடிகளை பெரியவர்கள் மேற்பார்வையிலேயே வெடிக்கச் செய்ய வேண்டும்.

கருவிழி பார்வையிழப்பு ஏற்படாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் இனிமேல் கருவிழிபார்வையிழப்பு ஏற்படாமல் தடுத்து கண்தான தேவையைக் கணிசமாக குறைக்க முடியும். 

கண்ணில் தூசி விழுந்தால் பொதுவாக அனைவருமே உடனே கண்ணைத் தேய்க்கத்தான் செய்கிறார்கள். அப்படித் தூசி விழும்போது கண்களை நன்றாக தேய்ப்பதன் மூலம் கண்ணின் கருவிழி பாதித்து பார்வை பிரச்சினை ஏற்படுவதும் உண்டு. எனவே பிள்ளைகளிடம் கண்ணில் தூசி விழுந்தால் கண்ணைத் தேய்க்கக்கூடாது என்றும் குழாய் நீரால் கண்ணைக் கழுவ வேண்டும் என்று சொல்லித்தர வேண்டும்.

இதுபோன்ற கண்பாதுகாப்பு நலச் செய்திகளை தொடக்கத்தில் இருந்தே பிள்ளைகளுக்கு சொல்லி வருவதன் மூலம் கண்ணில் காயம் ஏற்படாமல் தடுத்து பார்வையைக் காக்க முடியும். கண்தானத்தின் தேவையையும் குறைக்க முடியும்.

 

மு.வீராசாமி                                                      

கண்மருத்துவ உதவியாளர் (ஓய்வு) &

முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்                                   

தேசிய கண்மருத்துவ சங்கம் மதுரை.

.