உலக சர்க்கரைநோய் நாள் 2025
‘சர்க்கரைநோய் வராமல் தடுக்க முடியுமா?’
‘சர்க்கரைநோய் வராமல் தடுக்க முடியுமா?’
பொதுமக்களுக்கான மருத்துவம் தொடர்பான அந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒருவரின் கேள்விதான் இது.
மருத்துவரிடம் இருந்து உடனே பதில் வந்தது. ‘ஏன் முடியாது. முடியுமே!. வாயைக் கட்டுப்படுத்தினால் போதும்’. தடுப்பூசிபோல ஏதாவது சொல்வார் என்று எதிர்ப்பார்த்திருந்த கேள்வி கேட்டவர், இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. வாயடைத்துப்போனார்.
இந்த உரையாடல்களைப் பாருங்கள்.
‘சர்க்கரைதான் 300க்கு மேல இருக்குதுல்ல. அப்புறம் எதுக்கு இனிப்பைத் தொடணும், கஷ்டப்படணும். வாயைக் கட்டுப்படுத்த சொன்னா கேட்கிறீங்களா, கொஞ்சம்கூட அறிவே இல்லை’,
‘இந்தப்பக்கம் திரும்பறதுக்குள்ள காபியில சர்க்கரையைப் போட்டாச்சா, அப்புறம் எப்படி சர்க்கரை குறையும்’,
‘சர்க்கரை குறைஞ்சு நல்லா இருக்கணும்னு எப்பத்தான் நினைப்பீங்க?’, ‘டாக்டர்தான் காலையில் கட்டாயம் வாக்கிங் போகச் சொல்றார்ல. போகாட்டி எப்படித்தான் குறையும்?’ கொஞ்சமாவது அக்கறை இருக்கா?
சர்க்கரைநோய் இருப்பவர்களின் வீடுகளில் நடைபெறும் காட்சிகள்தான் இவை. அதுவும் சர்க்கரை கடுமையாக உயர்ந்து பக்க விளைவுகளோடு துயரப்படும்போது வீட்டில் நிம்மதியே இருக்காது. தினம் தினம் சர்க்கரைப் போராட்டம்தான்.
வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும்போது அவருக்குத் தனியாக சாப்பாடு செய்ய வேண்டும். அவர்களால் இனிப்புக்களை சாப்பிட முடியாதபோது மற்றவர்களாலும் சரியாக சாப்பிட முடியாது. வீட்டில் இருக்கும் மற்றவர்களின் பிரச்சினை இது.
சர்க்கரைநோய் என்றாலே வீடுகளில் பிரச்சினைதான்.
உறவினர் வீடுகள், ஹோட்டல்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்லும்போது டீ, காபியில் அரைச்சர்க்கரை அல்லது சர்க்கரை இல்லாமல் கொடுக்கச் சொல்லும்போது, வருமே அவர்களுக்கு கோபம். ‘ஒருநாள் சாப்பிட்டா, ஒண்ணும் ஆகாது, சும்மா கொடுங்க, வாழ்றதே சாப்பிடறதுக்குத்தானே, எப்ப பார்த்தாலும் சர்க்கரை சர்க்கரைன்னுட்டு’’ கோபமாக வார்த்தைகள் இப்படித்தான் வந்துவிழும்.
திருமணம் போன்ற விருந்துகளில் பரிமாறப்படும் இனிப்புக்களை ‘மனச்சாட்சி’ இல்லாமல் எடுத்து எடுத்து சாப்பிடும்போதும், ஒன்றுக்கு இரண்டாக ஐஸ்கிரீமை உள்ளே தள்ளும்போதும் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. ‘ஒன்றும் செய்யாது. இப்ப என்ன ஆச்சு? ஒரு மாத்திரையை கூடுதலாக எடுத்துக் கொண்டால் போதும், அது சமநிலையாகிவிடும்’ என்பது அவர்களது நினைப்பு. ஆனால் இதனால் பாதிக்கப்படுவது அவர்கள்தான். சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது கண், சிறுநீரகம், இதயம், பாதம் என உடல் உறுப்புக்கள் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகும் என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். ஏன் தேவையில்லாமல் துயரப்பட வேண்டும்?
சர்க்கரைநோய் வராமல் காக்க முடியுமா?
சர்க்கரையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். இனிமேல் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறவர்களும் புதிதாக இதில் சேர இருக்கிறார்கள். அதாவது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள். ( pre-diabetes நிலையில் இருப்பவர்கள் ). இவர்களை சர்க்கரை நோய் வராமல் காக்க முடியும்.
முன்னெச்சரிக்கையாக சரியான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டால் சர்க்கரைநோயால் இவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையும் ஏற்படாது.
இவர்களுக்கான நல்ல செய்தியைத்தான் சென்னை சர்க்கரைநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.வி.மோகன் தற்போது தெரிவித்திருக்கிறார். அதுவும் நாம் சாப்பிடும் ‘பிஸ்தாபருப்பு’ மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். பிஸ்தாவில் அப்படி என்ன இருக்கிறது? இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் எப்படி உதவுகிறது? பார்க்கலாம்.
பழமையும் மதிப்பும் மிக்க பிஸ்தா
கி.மு. 6750 காலகட்டத்திலேயே ‘பிஸ்தா’ உண்ணப்பட்டு வந்ததாக தொல்பொருள் ஆய்வில் கண்டறிந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. அத்தகைய பழமை வாய்ந்த பிஸ்தாவைப் பற்றிய முக்கியமான ஆய்வினை ‘சென்னை சர்க்கரைநோய் ஆய்வு நிறுவனம்’, ‘அமெரிக்க பிஸ்தா உற்பத்தியாளர்களுடன்’ இணைந்து நடத்தி இருக்கிறது. இந்த ஆய்வில்தான் பிஸ்தாவை நாள்தோறும் சாப்பிடுவதன் மூலம் உடலின் வளர்சிதைமாற்றம் மேம்பட்டு சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு இது நல்ல செய்திதான்.
புரதம், நார்ச்சத்து, ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலம் (MUFA) ஆகியவை பிஸ்தாவில் அதிகமாக இருக்கின்றன. இதனால் பிஸ்தாவுக்கு பசியை அடங்கச் செய்யும் தன்மை அதிகம் என்று டாக்டர் மோகன் தெரிவிக்கிறார்.
30 கிராம் பிஸ்தாவினை உணவுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்வதன் மூலம் வயிறு நிறைந்துவிடுகிறதாம். இது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளின் தேவையையும் குறைக்க உதவுகிறதாம்.
புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளால் வயிற்றினை நிரப்புவதன் மூலம் உணவுக்குப் பின்னர் தேவையில்லாமல் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. இது கார்ப்போஹைட்ரேட் வாயிலாக பெறக்கூடிய அதிகப்படியான கலோரிகளை குறைக்கிறது.
இந்த அணுகுமுறையால் இரத்த சர்க்கரை நன்றாக கட்டுப்படுவதாகவும், மூன்று மாதத்திற்கான சர்க்கரையின் சராசரி அளவு ( HbA1c ) கணிசமாக குறைவதாகவும் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை
சர்க்கரைக்கு முந்தைய நிலை சரிசெய்யக்கூடியது. ஆனால் சரியான நேரத்தில் செயல்படுவது அவசியம். இல்லையென்றால் சர்க்கரைநோய்க்கு முழுமையாக வழிவகுத்துவிடும்.
இளைஞர்கள் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் நிறைந்த நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். இவை உடல்பருமனுக்கும், சர்க்கரைநோய்க்கும் வழிவகுக்கும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அல்லது தெரிந்தும் என்ன ஆகப்போகிறது என்று அது குறித்து கண்டுகொள்வதில்லை.
அவர்கள் விரும்பிச் சாப்பிடும் சக்கை உணவுகளில் கொழுப்புக்கள், உப்பு, சர்க்கரை ஆகியவை அதிகம். ஊட்டச்சத்து குறைந்த, கலோரி மிகுந்து காணப்படும் இத்தகைய உணவுகளைத் தவிர்த்து பிஸ்தாபருப்பு போன்றவற்றை சாப்பிடலாம்.
அதிகம் பதப்படுத்தப்படாத பிஸ்தா பருப்பினை சாப்பிட்டுக் கொண்டு சிறிய வாழ்க்கைமுறை மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சர்க்கரை நோயினை பக்கத்தில் வரவிடாமல் நலமாக வாழலாம் என்று டாக்டர் மோகன் வலியுறுத்துகிறார். வாழ்நாள் முழுவதும் சர்க்கரைநோய் பற்றிய கவலையும் இனி தேவையில்லை.
சர்க்கரைநோயாளிகள், கட்டுப்பாட்டில் இருக்க விரும்பினாலும் சுற்றி இருப்பவர்கள் விடுவதில்லை. காபியில் சர்க்கரை போட்டாச்சே, ஒரு நாளைக்கு குடித்தால் ஒன்றும் செய்யாது. சும்மா குடிங்க என்று சொல்பவர்கள் இனிமேல் அவர்களின் சர்க்கரையின் மீது அக்கறை காட்டுங்கள்.
குழந்தைகள் நலத்திலும் அக்கறை காட்டுவோம்
குழந்தைகள் தினமான இன்று அவர்களின் உடல்நலத்திலும் கவனம் செலுத்துங்கள். கண்ட கண்ட சக்கை உணவுகளாலும், நொறுக்குத்தீனியாலும், மின்னணு சாதனங்களில் மூழ்கியும், உடல் உழைப்பு இல்லாமலும் இந்த தலைமுறை வளர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் இவர்களுக்கு இளவயதிலேயே சர்க்கரைநோய் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்லி வருவதால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளை ஓடியாடி விளையாடச் சொல்லுங்கள். அவர்களை நம் பாரம்பரிய உணவுமுறைகளுக்கு பழக்கப்படுத்துங்கள். வளர்ந்து கொண்டிருக்கிற இத்தலைமுறையினரை சர்க்கரைநோயின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பது நம் கையில்தான் இருக்கிறது.
வாழ்க்கைமுறை மாற்றம், உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடுடன் சுற்றத்தாரின் அக்கறையும் சேரும்போது குடும்பங்களில் நிச்சயமாக ஆரோக்கியமான சூழல் ஏற்படும். இதன்மூலம் ‘உலக சர்க்கரைநோய் நாளின்’ இந்த ஆண்டு கருப்பொருளான ‘நீரிழிவு மற்றும் நலவாழ்வின்’ நோக்கம் நிறைவேறட்டும்.
மு.வீராசாமி
மேனாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்
தேசிய கண்மருத்துவ சங்கம்
மதுரை


