குழந்தையின் பார்வை - ஒரு பயணம் போவோமா!
குழந்தையின் பார்வை - ஒரு பயணம்
நீ சிரித்தால் சிரிப்பழகு. சிரிக்க வேண்டாம். குழந்தையைப் பார்த்தாலே அழகுதானே. சிரித்தால் கேட்க வேண்டுமா! குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அதன் செய்கைகளால் மனம் இலகுவாகிவிடும். தன்னுடைய சிரிப்பால் தன்னைச் சுற்றியுள்ள உலகையே மகிழ்விக்கிறதாம் குழந்தை என்கிறார் பாரதிதாசன்.
குழந்தை பிறந்த சில நாட்களிலேயே சில பெற்றோர் சொல்வார்கள். பிள்ளை என்னைப் பார்த்து சிரிக்குதுங்க. நல்லா பார்க்குதுங்க. கரெக்டா அடையாளம் கண்டுகொள்கிறது என்று. அப்படியெல்லாம் இல்லை. குழந்தைகள் பிறக்கும்போதே முழுமையான பார்வைத்திறனுடன் பிறப்பதில்லை. பிறந்தவுடன் பெரியவர்களைப் போன்றோ வளர்ச்சியடைந்த குழந்தையைப் போன்றோ குழந்தையால் பார்க்க முடியாவிட்டாலும் ஓராண்டிலேயே அதன் பார்வை பல மாற்றங்களைப் பெறுகிறது. அதே சமயம் ஒவ்வொரு குழந்தையும் ஒரே மாதிரி இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பிறந்தவுடன் சில வாரங்களுக்கு கண்ணின் பாப்பா ( Pupil ) சுருங்கி இருக்கும். பிறந்தவுடன் வெளிப்புறத்தில் காணப்படும் பிரகாசமான ஒளியை எதிர்கொள்வதைத்தடுக்க இது உதவும்.
பிறந்த குழந்தையால் அடுத்து பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை ஓரளவு பார்க்க முடியும். அவர்களது கவனம் 8 முதல் 10 அங்குலங்கள் அல்லது பெற்றோரின் முகத்துக்கான தூரம் வரை இருக்கும். மையப் பார்வையைப் பொறுத்தவரையில் வளர்ச்சி நிலையில் இருக்கும். ஓரிருவாரங்களில் விழித்திரை வளர்ச்சி அடையும். அதன் பின் கண்ணின் பாப்பா சற்று விரிவடையும். இப்போது குழந்தைக்கு ஒளி, இருட்டு, வடிவங்கள் ஓரளவு தெரியும்.
ஒரு மாதத்தில் குழந்தை பெற்றோர் மீது கவனம் செலுத்த முயற்சிக்கலாம். மூன்று அடி வரை பிரகாசமான நிறமுள்ள பொருட்களால் கவரப்படலாம்.
மாறுகண் தோற்றமா?
முதல் இரண்டு மாதங்களில் குழந்தையின் கண்கள் இரண்டிலும் ஒருங்கிணைப்பு இல்லாத மாதிரி தோன்றலாம். அதாவது பார்ப்பதற்கு மாறுகண் ( Squint ) போன்று காட்சியளிக்கலாம். இது சாதாரண ஒன்றுதான். நாளாக நாளாக சரியாகிவிடும். இதைப் பார்த்து சில சமயங்களில் பெற்றோர் கண் ஒரு மாதிரியாக இருக்கிறதே என்று பயப்படுவார்கள். பயம் எல்லாம தேவையில்லை. இருந்தாலும் ஒருவேளை தொடர்ந்து அப்படி இருந்தால் அதாவது கண் மூக்குபக்கமாகவோ காதுபக்கமாகவோ திரும்பி மாறுகண் மாதிரி இருந்தால் மருத்துவரிடம் சென்று காண்பித்து அய்யத்தைப் போக்கிக் கொள்வது நல்லது.
இரண்டு மாதத்தில் குழந்தையின் கண்களில் நல்ல ஒருங்கிணைப்பு ஏற்படுவதால் நகரும் பொருட்களின் மீது குழந்தையின் கவனம் ஈர்க்கும். மூன்று மாதத்தில் நகரும் பொருட்களின் மீது பார்வையைத் தொடரவும் முடியும்.
அடையாளம் காண்பது எப்போது?
ஐந்தாவது மாதத்தில், ஒரு பொருள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை குழந்தையால் அடையாளம் காண முடியும். மேலும் முப்பரிமாணத்திலும் ( 3 D ) பார்க்க முடியும். இதனால் அருகிலும் தொலைவிலும் இருப்பதை தெளிவாக பார்ப்பதில் நல்ல முன்னேற்றம் தெரியும். வளர்ந்தவர்களைப் போல் இல்லாவிட்டாலும் நிறங்களும் ஓரளவு நன்றாக தெரியும்.
அறைக்குள் இருக்கும்போது பெற்றோரின் முகத்தை அடையாளங்கண்டு சிரிக்கலாம். ஒரு பொருளின் ஒரு பகுதியைப் பார்த்தாலும் நினைவில் வைத்திருக்கலாம். பொதுவாக எட்டாவது மாதத்தில் குழந்தை தவழத்தொடங்கும். இது அவர்களின் கை, கண் ஒருங்கிணைப்பால் மேலும் மேம்படுகிறது.
ஒன்பதாவது மாதத்தில் பொருட்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை குழந்தையால் நன்றாகத் தீர்மானிக்க முடியும். எழுந்து நிற்க முயற்சிப்பதும் இம்மாதத்தில்தான். 10 மாதக் குழந்தை கட்டைவிரலுக்கும் ஆட்காட்டிவிரலுக்கும் இடையில் ஒருபொருளைப் பற்றிக் கொள்ள முயற்சிக்கும்.
பன்னிரண்டாவது மாதத்தில் குழந்தைகள் பெரும்பாலும் தவழவும் நடக்கவும் முயற்சிப்பார்கள். இந்த மாதத்தில் குழந்தைகளின் ஆரம்ப நடைப்பழக்கத்தைவிட தவழ்வதற்கு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். சிறந்த கண் - கை ஒருங்கிணப்பை வளர்க்க இது உதவும். குழந்தைகளால் இப்போது தூரங்களை துல்லியமாகத் தீர்மானிக்க முடியும். ஓரளவுக்கு தெளிவாக பொருட்களைத் தூக்கி எறியவும் முடியும்.
குழந்தைக்கு கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளங்காண்பது எப்படி?
பெரும்பாலும் குழந்தைகளுக்கு கண்ணில் பிரச்சினை ஏற்படுவதில்லை என்றாலும் சிலநேரங்களில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். குழந்தையின் கண்ணில் அசாதாரணமாக கண்ணீர் வடியலாம். கண்சிவந்து இமை வீங்கியும்கூட காணப்படலாம். அப்படியிருந்தால் அது விழிவெண்படல அழற்சி - Conjunctivitis ). இதற்கு சொட்டு மருந்து போட வேண்டி இருக்கும்.
சில சமயங்களில் கண்ணில் நீர் மட்டும் தொடர்ந்து வடியலாம். அது ஒருவேளை நீர்ப்பை அடைப்பாகவும் இருக்கலாம். பொதுவாக கண்ணில் சொட்டு மருந்து போட்டுவிட்டு கண்ணும் மூக்கும் சந்திக்கும் இடத்தில் லேசாக மசாஜ் செய்யச் சொல்வார்கள். இப்படிச் செய்தால் நாளடைவில் சரியாகிவிடும் கருவிழி பெரிதாக இருந்தால் பிறவி கண்நீர் அழுத்த உயர்வாக ( Congenital Glaucoma ) இருக்க வாய்ப்புண்டு. பெரிய கண். அழகாக இருக்கிறது என்று நினைக்காமல் மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும்.
நகரும் பொருட்களை கண்காணிப்பதில் குழந்தையிடம் தாமதம் இருப்பதாக தெரிந்தாலும் கவனிக்க வேண்டும். கண்ணின் நடுவில் பாப்பா இயல்பான நிறத்திற்கு மாறாக வெள்ளையாக இருந்தால் ( White reflex ) உடனே காண்பிக்க வேண்டும். அது கண் புற்றுநோயாக (Eye Cancer ) இருக்கலாம்.
பிறந்த குழந்தையின் அறையில் மங்கலான இரவு விளக்கு இருக்கலாம். 8- லிருந்து 10 அங்குலத்திற்குள் குழந்தையை கவரும்படி பொம்மையை வைக்கலாம். அறைக்குள் இருக்கும்போது பெற்றோர் குழந்தையுடன் பேசலாம்.
குழந்தை பிடித்து இழுத்து விளையாட பொம்மைகளை தொட்டிலின் குறுக்காக மாட்டி வைக்கலாம். தரையில் அதிக நேரம் விளையாடலாம். பிளாஸ்டிக், மரத்தொகுதி விளையாட்டுக்களை குழந்தையின் கையில் கொடுத்து விளையாடச் செய்யலாம். அப்படி விளையாடும்போது சத்தமாக பேசி குழந்தையுடன் விளையாடவும்.
குழந்தையின் காட்சி நினைவகத்தை ( Visual Memory ) மேம்படுத்த பொம்மைகளை வைத்தோ உங்கள் முகத்தினை வைத்தோ ஒளிந்து விளையாடலாம். குழந்தையின் சொல் உச்சரிப்பு திறன் வளர்வதற்கு குழந்தையுடன் பேசும்போது பொருட்களின் பெயரினை சொல்லி பேசலாம். தவழவும் ஊர்ந்து செல்லவும் உற்சாகப்படுத்தலாம்.
குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
மு.வீராசாமி
மதுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக