ஞாயிறு, 16 மார்ச், 2025

நாம் எங்கிருக்கிறோம்?

 

நாம் எங்கிருக்கிறோம்?

 

அந்தப் பச்சிளங்குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்?

நடந்தது. மத்தியபிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில். சென்ற வியாழன் அன்று. அந்தக் குழந்தைக்கு உடல்நலக்குறைவு. ஆறுமாத பச்சிளங்குழந்தை. உடல்நலக்குறைவு சரியாக மருத்துவமனைக்குத்தான் பொதுவாக செல்வோம். ஆனால் அந்தக் குழந்தையின் அம்மா செய்தது என்ன தெரியுமா?

குழந்தையைத் தூக்கிகொண்டு மந்திரவாதியிடம்  சென்றிருக்கிறார். அந்த தாந்திரீக மந்திரவாதி அமானுஸ்ய சடங்குகள் செய்வதில் வல்லவராம். அப்படி நினைத்துத்தான் அந்த அம்மா குழந்தையைத் தூக்கிக் கொண்டு போயிருக்கிறார்.

அவரும் படம் காண்பித்திருக்கிறார். வினோதமான அந்த சடங்கு ?

கீழே நெருப்பு. யாகம் போலிருக்கிறது. குழந்தையை தூக்கிப் பிடித்து தலைகீழாக நெருப்புக்கு பக்கத்தில் காண்பித்திருக்கிறார் அந்த மந்திரவாதி.

  

அவ்வளவுதான். குழந்தையின் இரு கண்களின் கருவிழியும் பொசுங்கிப் போய்விட்டதாம். இனி அந்தக் குழந்தையின் பார்வை? எதிர்காலம் ?  

குழந்தை தற்போது சிவ்புரி மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில்.

லேசாக கைவிரலில் நெருப்புபட்டாலே வலி தாங்க முடியாது. உயிரை எடுக்கும்.

ஆனால் அந்த பச்சிளங்குழந்தை?? நினைத்துப் பாருங்கள்.

ஒன்றும் சொல்வதற்கில்லை.

நாம் எங்கிருக்கிறோம்?

( செய்தி இன்றைய 16-03-2025 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது. )


 

 

 

 

 

திங்கள், 10 மார்ச், 2025

கண்ணில் பிரசர் வருமா?

                     கண்ணில் பிரசர் வருமா?                     

                உலக கண்நீர் அழுத்த உயர்வு வாரம்

                          ( மார்ச்சு 10 – 16 )

மு.வீராசாமி

மதுரை

---

கருப்பையாவுக்கு அடிக்கடி தலைவலி.  கிராமத்து சுகாதார நிலையத்தில்  அடிக்கடி போய் மாத்திரை வாங்கி சாப்பிட்டும் பயனில்லை.  ‘மருத்துவமனைக்கு வந்து கண்ணைப்  சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள் என்ற நர்ஸம்மாவின் அறிவுரையை காதில் வாங்கிக் கொள்ளவுமில்லை.  

கொஞ்ச நாளாக பார்வையில் லேசாக தடுமாற்றம் வேறு. இரு சக்கர வாகனம் ஓட்டிச் செல்கையில் பக்கத்தில் வருபவர்களும் சரியாகத் தெரியவில்லை. நர்ஸம்மாவிடம் சொன்னதில் உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டார்.

மருத்துவமனையில் சோதித்துவிட்டு கண்ணில் பிரசர் அதிகரித்துவிட்டதாக  சொல்லிவிட்டார்கள். ( கிளாக்கோமா ) கண் பிரசரால் கண்ணில் 40 விழுக்காடு பார்வை இழப்பு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது என்றும் வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் இருக்கிற பார்வையைத்தான் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று கண்மருத்துவர் சொன்னதைக் கேட்டு கருப்பையா பயந்து போய்விட்டார்.

 

கிளாக்கோமாவில் என்ன பிரச்சினை?

 

பி.பி. நமக்குத் தெரிந்ததுதான். இதைப் படிக்கும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் பாதிப்பேருக்கு இருக்கவும் கூடும். இரத்த அழுத்தம் 120/80 மி.மீ பாதரச அழுத்தம் என்றால் பிரச்சினை இல்லை. கூடினால் பிரஷர். பி.பி.கூடிருச்சு என்கிறார்கள்.  இதைப் போல் கண்ணிலும் ஒரு அழுத்தம் பராமரிக்கப்படுகிறது. 10-20 க்குள் இருந்தால் நல்லது.


 

உடம்பில் பிரஷர் அதிகமானால் எப்படி பி.பி. என்கிறோமோ அதேபோல் கண்ணில் அழுத்தம் உயர்ந்தால் அதுதான் கிளாக்கோமா. கண்நீர் அழுத்த உயர்வு.

கிளாக்கோமா வருவதற்கு முன், தகவல் சொல்லிவிட்டு  வருவது கிடையாது. பொதுவாக எந்த விதமான அறிகுறிகளும் தெரியாது. அதுபாட்டுக்கு அமைதியா வந்து தாக்கும். வந்ததே தெரியாது. அமுக்குணித் திருடன் என்று சொல்லலாம். நன்றாக கால் ஊன்றிய பிறகு அதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டபிறகே கண்ணில் ஏதோ பிரச்சினையாக இருக்கிறது போலிருக்கிறதே என்று லேசாக உணரமுடியும். அதுவரையில் தெரியாது.

சரி அதனாலென்ன? என்றால் பிரச்சினயே அதுதான். அதை  விரிவாக தெரிந்து கொள்வதற்கு நாம் செடியைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கிறது. செடி நன்றாக வளர அதற்கு நீர் தேவை. நீர் ஊற்றாமல் விட்டுவிட்டால் செடி நாளடைவில் பட்டுப்போய்விடும் அல்லவா. பட்டுப் போன பின் லிட்டர் லிட்டராக நீர் ஊற்றினாலும் பழையபடி துளிர்க்க வைக்க முடியுமா?

கிளாக்கோமாவிலும் அப்படித்தான். கண்ணில் அழுத்தம் அதிகரித்தது கண்டறியப்படாமல் தொடக்க நிலையில் சிகிச்சை செய்ய வில்லை என்றால் அழுத்த அதிகரிப்பினால் பார்வை நரம்புகள் பாதித்துவிடும். இதனால் பார்வையும் கடுமையாக பாதித்துவிடும். ஒருமுறை பாதித்தால் பாதித்ததுதான். ரிப்பேர் எல்லாம் செய்ய முடியாது.

பட்டுப்போன செடியை மீண்டும் துளிர்க்க வைக்க முடியுமா? அதைப் போன்றுதான் பாதித்த பார்வை நரம்புகளை மீண்டும் சரி செய்ய முடியாது. மேற்கொண்டு சிகிச்சை செய்து அழுத்தத்தை கட்டுப்படுத்தி இருக்கின்ற பார்வையை காப்பாற்றலாம்.

 

பார்வையை பாதுகாப்பது எளிதா?

 

மருத்துவமனையில் 40 வயதிற்கு மேல் எப்படி இரத்த அழுத்த சோதனை செய்து கொள்கிறோமா அதைப்போன்று கண்மருத்துவமனையில் கண்ணில் அழுத்த சோதனையினையும் ( Eye Pressure Test ) பார்த்துக் கொள்ள வேண்டும். யாரும் வந்து பாருங்கள் என்று சொல்ல மாட்டார்கள். நாமாகத்தான் போய் பார்த்துக் கொள்ள வேண்டும். 40 வயதில் இதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. ஒரு வேளை இருந்தால் தொடக்க நிலையிலேயே சரியான சிகிச்சை செய்து கட்டுக்குள் வைக்கலாம்.


 

மருத்துவமனையில் கண்ணில் மருந்துபோட்டு சிலிட் லேம்ப் சோதனை, ஆப்தால்மாஸ்கோப் சோதனை செய்து கண்ணை உள்நோக்கி சோதித்து கிளாக்கோமா பாதிப்புக்கான வெளிப்பாடுகள் இருக்கிறதா என்று மருத்துவர் பார்ப்பார்.

40 வயதில் ஒருவருக்கு வெள்ளெழுத்துக் கண்ணாடியை மாற்ற வேண்டி இருந்தால் மருத்துவமனைக்கு சென்றால்தான் இந்த சோதனைகளை எல்லாம் பார்த்துக் கொள்ள முடியும். நேரடியாக கண்ணாடிக் கடைக்குச் சென்று வாங்கினால் இந்த சோதனைகளை எல்லாம் பார்க்க முடியாது. ஒருவேளை கிளாக்கோமா இருந்தால் தொடக்க நிலையில் கண்டறியும் வாய்ப்பு கிடைக்காமல் போகும்.

கிளாக்கோமாவை தொடக்கநிலையில் கண்டறியாமல் போனால் நாளாக நாளாக பக்கப்பார்வை வெகுவாக குறையும். பொதுவாக நாம் ஒரு பொருளைப்பார்க்கும்போது இரண்டு கண்ணின் இரு புறமும் (சைடு பார்வை) இருக்கிற பொருட்களை ஒரு அளவு வரை நம்மால் பார்க்க முடியும்.

நடந்தோ இரு சக்கர வாகனத்திலோ செல்கிறோம். பக்கத்தில் யார் வருகிறார்கள்-போகிறார்கள் என்பது ஓரளவுக்குத் தெரியும். இலையில் சாப்பிடுகிறோம். முழு இலையிலும் இருக்கும் உணவு பதார்த்தங்களை முழுமையாக பார்க்க முடியும்.

ஆனால் கடுமையாக பாதிக்கப்பட்டால் பக்கப்பார்வை குறையும். பக்கத்தில் யார் வருகிறார்கள் என்பதோ இலையில் இருக்கும் பதார்த்தங்கள் முழுமையாகவோ தெரியாது. குழாய் வழியாக பார்ப்பதுபோல் கூட பார்வை அளவு வெகுவாக குறைந்து விடலாம்.

 

இப்போது புரிந்திருக்கும்.

 

யாரெல்லாம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளலாம்.

Ø  குடும்பத்தில் யாருக்கேனும் கிளாக்கோமா இருந்தால்

Ø  உடலில் இருக்கும் வேறு ஏதேனும் நோய்க்கு தொடர்ந்து ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டிருந்தாலும்

Ø  வெள்ளெழுத்துக் கண்ணாடியை அடிக்கடி மாற்ற வேண்டி இருந்தாலும்

Ø  விளக்கினைச் சுற்றி கலர் கலராய் தெரிந்தாலும்

Ø  அடிக்கடி ஏற்படும் நாள்பட்ட தலைவலி

Ø  பக்கப் பார்வையில் தடுமாற்றம் இருந்தாலும்

உடனே கண்மருத்துவரிடம் சென்று கண்ணில் அழுத்தம் அதிகரித்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக மருத்துவமனைக்கு செல்லும்போதே பார்வை பாதிப்போடு செல்லும் நிலையில் தான் கிளாக்கோமா இருக்கிறது. பார்வையைக் காக்க கிளாக்கோமாவுக்கு தேவையெல்லாம் தொடக்க நிலை கண்டுபிடிப்பு. நல்ல கண்சொட்டு மருந்துகள் இருக்கின்றன. தேவைப்பட்டால் லேசர் மருத்துவமும், அறுவை சிகிச்சையும் செய்வார்கள்.

தொடக்கநிலை – கண்டுபிடிப்பு-சிகிச்சை-கவனிப்பு பார்வையை நிச்சயமாக பாதுகாக்கும்.