கண்ணைக் காக்கும் - சொட்டு
“இந்த கண்ணுக்கு போடற சொட்டு மருந்தை யாரையாவது கூப்பிட்டு என் பையனுக்கு இரண்டு சொட்டு போடச் சொல்லுங்க. முரட்டுத்தனமா சொட்டுமருந்து போட்டா கண்ணில் குப்பி பட்டு செப்டிக் ஆயிடும். இதில் ஓட்டை போடறதுக்கு பின்னை எடுத்து போடும்போது துரு பிடிச்சிருக்கான்னு பார்த்து போடச் சொல்லுங்க. இல்லைன்னா அதனால் வேற பிரச்சினை வந்துடும். குப்பியைத் திறந்து என் பையனுக்கு போட்டு விடுங்க.” ‘ஒத்த செருப்பு’ படத்தில் பார்த்திபன் காவல்நிலையத்தில் பேசும் காட்சிதான் இது.
இது உண்மைதான். பல சமயங்களில் குப்பியைப் பிரித்த பிறகு மருந்து வெளியே வராது. அப்போதெல்லாம் குப்பியில் ஓட்டை போடுவதற்கு கையில் கிடைக்கும் ஊசி போன்ற ஏதாவது பொருளை எடுத்து குத்த வேண்டி இருக்கும். மருந்து சுத்தத்தை பற்றி தெரியாமல் பலரும் இப்படி கையில் கிடைத்ததை, எடுத்து குத்தி ஓட்டை போட்டுத் திறப்பார்கள். இதனால் மருந்தின் தரம் கேள்விக்குறியாகிறது.
மருந்துக்குப்பியைத் திறப்பதற்கு எளிய வழி, குப்பியின் மூடியைப் பிரித்தபிறகு மூடியை அழுத்தமாகத் திருகி அதன்பின் மூடியைத் திறந்து போட்டால் சொட்டுமருந்து எளிதாக வரும். சில வகை மருந்து - குறிப்பாக ஸ்டீராய்டு வகை சொட்டுமருந்து பால்போன்று இருக்கும். அதுபோன்ற மருந்தினை, கண்ணில் போட்ட பிறகு அதன் எச்சங்கள் தயிர்திரிந்தது போன்று சிறிது கண்ணிமை ஓரத்தில் தங்கி இருக்கலாம். பார்ப்பதற்கு கண்பீளை மாதிரி தோன்றும். பயம் வேண்டாம்.
அடுத்தடுத்த சொட்டு மருந்து உடனுக்குடன் வேண்டாம்.
இரயில் புறப்படுவதற்குள் கண்ணில் சொட்டுமருந்து போட்டு விடவேண்டும் என்ற அவசரம் அந்த பெரியவருக்கு. அவசர அவசரமாக சொட்டு மருந்து போட்டுக் கொண்டிருந்தார். சொட்டு மருந்து கண்ணுக்குள்ளேயே விழவில்லை. விழுந்தது என்னமோ கீழ் இமையோரத்தில். அடுத்து ‘டபக்கென்று’ இன்னொரு சொட்டுமருந்தையும் போட்டார். அதுவும் அப்படித்தானே விழும். சொட்டுமருந்தை எப்படிப்போட்டால் என்ன? அவரைப் பொறுத்த வரை கண்ணுக்கு சொட்டுமருந்து போட வேண்டும். அவ்வளவுதான்!
அந்த சொட்டுமருந்து கிளாக்கோமாவுக்கானது. அதாவது கண்நீர் அழுத்த உயர்வினைக் கட்டுப்படுத்துவதற்குரியது. மருந்து கண்ணுக்குள் செல்லவேயில்லை. பின் எப்படி அது வேலை செய்யும். மேலும் ஒரு மருந்தை போட்டவுடனேயே அடுத்த சொட்டு மருந்தினை போட்டால் அது எப்படி கண்ணுக்குள் செல்லும். சிறிது நேர இடைவெளியாவது வேண்டாமா.
ஒன்றுக்குமேல் சொட்டுமருந்து போட வேண்டியிருந்தால் ஒரு மருந்தைப் போட்டபிறகு இரண்டு - மூன்று நிமிடங்களுக்கு பிறகுதான் அடுத்த சொட்டுமருந்தினைப் போட வேண்டும். மருந்தைப் போட்டபிறகு கண்ணை சில விநாடிகள் மூடி இருப்பது நல்லது. மருந்தை கண்ணில் போடும்போது வேகமாக கண்ணிமைகளை இறுக்கி மூடக்கூடாது. அப்படி உடனே கண்ணிமைகளை இறுக்கி மூடினால் - கண்ணில் போட்ட மருந்தில் பெரும்பாலானவை வெளியேறிவிடும். மருந்துபோட்டும் பயனில்லை.
கண்புரை அறுவைசிகிச்சைக்குப் பின் ஏறக்குறைய ஒருமாதம்போல் கண்ணில் சொட்டு மருந்துபோட வேண்டி இருக்கும். மருத்துவமனையில் எத்தனை தடவை, எப்படி போட வேண்டும் என்று தெளிவாக சொல்லி அனுப்புவார்கள்.
மறு பரிசோதனைக்கு வரும்போது அறுவைசிகிச்சை செய்த கண் தெளிவாக இருக்கும். எந்தவித தொற்றும் பெரும்பாலும் இருக்காது. இருக்கக்கூடாது. மறுசோதனைக்கு வரும்போது சிலருக்கு கண்ணில் சிகப்புடன் பீளை சேர்ந்து இருக்கலாம். அவர்களிடம் மருந்து நீங்களாகவே போட்டீர்களா? என்று கேட்டால் ஆமாம் என்று சொல்வார்கள். வீட்டில் மருந்து போட்டுவிட யாருமில்லை என்று சொல்வார்கள். இல்லையென்றால் நானாக போட்டுக்கொள்வதுதான் பழக்கம் என்று சொல்வார்கள், இப்படி அவர்களாகவே சொட்டு மருந்தினை போட்டுக் கொள்ளும்போது கண்ணுக்குள் சரியாக போகாததால் நலமாவதில் பிரச்சினை ஏற்படும்.
கண்நீர் அழுத்த உயர்வு (கிளாக்கோமா), உலர் கண் போன்ற சிலவகை கண் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து சொட்டு மருந்துபோட வேண்டியது சிலரது வாழ்வில் தவிர்க்க முடியாதது. அவர்கள் மருந்து போடும்போது கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
குப்பியினுள் மருந்து எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க முடியாதது போல்தான் குப்பிகள் இருக்கின்றன. உள்ளே இருக்கும் மருந்தை வெளியில் இருந்து பார்த்தால், தெரிவதற்கு ஏற்ப குப்பி கண்ணாடிபோல் ஒளி ஊடுருவுந்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இதனால் என்ன பயன் என்றால் சில வகை சொட்டுமருந்துகளின் விலை அதிகமாக இருக்கின்றன. சொட்டு மருந்து போடும்போது வீணாகாமல் கவனமாக போட இது உதவும். சொட்டு மருந்து தயாரிக்கும் மருந்து நிறுவனங்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். சொட்டுமருந்து இன்னும் எவ்வளவு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
சொட்டுமருந்து போடப்போகிறீர்களா...
- கண்ணின் கீழ் இமையை லேசாக கீழே இழுத்து, கண்ணின் கருவிழியில்படாமல் அதற்கு கீழே உள்ள வெள்ளைப்பகுதியில் இரண்டு சொட்டு போட வேண்டும்.
- மருந்தினை யார் போடப்போகிறார்களோ அவர்களுக்கு விளக்கமாக சொல்லிப் போடச் சொல்ல வேண்டும். படுத்துக்கொண்டோ, சாய்ந்து உட்கார்ந்துகொண்டோ மருந்து போட்டுக்கொள்ளலாம்.
- சொட்டு மருந்தின் துவாரப் பகுதியினை கையால் தொடக்கூடாது. சொட்டுமருந்தின் தரம் கெட்டுப்போய்விடலாம்.
- சில சொட்டு மருந்துகள் பால் மாதிரி இருக்கும். அது போன்ற மருந்தினை போடுவதற்கு முன் குப்பியை ஒருமுறை குலுக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.
- கண்பிரச்சினை சரியான பிறகு, சொட்டு மருந்து மீதம் இருந்தால் தூக்கி வெளியே எறிந்துவிட வேண்டும். காசுபோட்டு வாங்கியது எப்படி தூக்கி எறிவது என்ற நினைப்பு வேண்டாம். இல்லையென்றால் வீட்டில் வேறு ஒருவருக்கு பிரச்சினை ஏற்படும்போது அதை எடுத்து பயன்படுத்தத் தூண்டும்.
- இன்னொருவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த சொட்டு மருந்தினை எக்காரணம் கொண்டும் வேறொருவர் பயன்படுத்தக்கூடாது. அவசரத்துக்கு போட்டுக்கொண்டு அப்புறமாக மருத்துவரிடம் செல்லலாம் என்ற நினைப்பும் வேண்டாம். காரணம் சொட்டு மருந்தில் பல வகைகள் உள்ளன. பிரச்சினையை அறிந்து அதற்கேற்ற மருந்தினை பயன்படுத்துவதுதான் சரியான அணுகுமுறை. பார்வைக்கும் பாதுகாப்பு.
- சொட்டுமருந்துக் குப்பியைத் திறந்த ஒருமாதத்திற்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் அந்த குப்பிமருந்தினை பயன்படுத்தக்கூடாது. அதன் பின் தேவையிருந்தால் புதிதாக ஒன்று வாங்கிக் கொள்ளலாம்.
கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நீங்களாகவே மருந்துக்கடையில்போய் பிரச்சினையைச் சொல்லி மருந்து வாங்கிப் போடுதல் கூடாது. மருத்துவர் ஆலோசனையின் பேரில் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது. அப்போதும் மருத்துவர் பரிந்துரைத்தபடி மருந்துக்கடையில் இருந்து, மருந்து வாங்கி இருக்கிறோமா என்று மருத்துவரிடம் சரிபார்த்த பிற்கு பயன்படுத்துவதுதான் கண்களுக்கு பாதுகாப்பானது.
---
மு.வீராசாமி
கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு )
மதுரை.

மிகவும் பயனுள்ள கட்டுரை. இத்தனை விளக்கமாக எந்த மருத்துவரும் சொல்லியதில்லை.
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்
நீக்குமிக்க நன்றி சார்
நீக்கு