‘தப்பா எழுதினாத்தானே அழிரப்பர் தேவை’
‘தப்பா எழுதினாத்தானே அழிரப்பர் தேவை’ இது அந்தக்காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடித்த ‘ஹிட்லர் உமாநாத்’திரைப்படத்தில் இடம் பெற்ற நடிகர் சுருளிராஜனின் வசனம். நகைச்சுவையான வில்லுப்பாட்டின்போது இந்த வசனம் இடம்பெறும். இது எதற்கு இப்போது?
தப்பாக எழுதினால்தானே அழிரப்பர் தேவைப்படும். உண்மைதான். இல்லையென்றால் அதன் தேவை இருக்காது அல்லவா?
கண்தானமும் அப்படியான ஒன்றுதான். கருவிழி பார்வையிழப்பு ஏற்பட்டால்தானே கண்தானம் குறித்த பேச்சே!
அப்படியானால் கருவிழி பார்வையிழப்பு ஏற்படுவதைத் தடுத்தால்? முறையான விழிப்புணர்வு மூலம் கருவிழி பார்வையிழப்பை கணிசமாக தடுக்க முடியுமா? முடியும். அதன் மூலம் இனிமேல் கண்தானத்தின் தேவையையும் குறைக்கலாம் அல்லவா.
கண்ணில் ஏற்படும் காயங்கள்தான் கருவிழி பார்வையிழப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கணிசமான அளவு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்படுகிறது என்றாலும் இதில் குழந்தைகளுக்கு ஏற்படுவதை முதலில் கவனிப்போம்.
பெரியவர்கள் மேற்பார்வையில்லாமல் குழந்தைகள் வீட்டுக்கு வெளியே விளையாடும்போது ஏற்படும் காயங்களால்தான் கருவிழி பார்வையிழப்பு ஏற்படுவதாக சொல்கிறார்கள். விளையாடும்போது எப்படி பாதுகாப்பாக விளையாட வேண்டும் என்பதையும் இல்லாவிட்டால் கண்ணுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் அவர்களுக்கு புரியும்படி சொல்லித்தருவது நல்லது.
தொடக்கக் கல்வியில் இருந்தே பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். மீண்டும் மீண்டும் இதை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
பாடத்திட்டத்தில் கண்பாதுகாப்பு குறித்த செய்தி இடம்பெறுவதும் நல்லது.
பெரியவர்கள் குறிப்பாக வயல்வெளியில் வேலை செய்பவர்கள் கண்ணில் தூசி விழாமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி தூசியோ, நெற்கதிரோ கண்ணில் விழும்போது கண்ணை உடனே தேய்க்காமல் குழாய் நீரால் கழுவ வேண்டும் என்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னரும் உறுத்தல் இருக்குமேயானால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிரமம் பாராமல் செல்ல வேண்டும்.
மருத்துவமனைக்கு செல்லாமல்-சிகிச்சை செய்துகொள்ளாமல் இறுதியில் பார்வையில்லாமல் கஷ்டப்படுவதைக் காட்டிலும் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று நலமாக்கிக் கொள்வது அவ்வளவு கடினமல்ல. எளிதுதான் என்பதை உணர வேண்டும். வாழ்நாள் முழுவதும் பார்வை தேவை அல்லவா!
கண்தானம் பற்றிய சரியான புரிதல்கள்:
1. இரத்ததானம் ஒருவர் உயிரோடு இருக்கும்போது கொடுப்பது. ஆனால் கண்தானம் என்பது ஒருவர் இறந்தபின் நடைபெறும் செயல். உயிருடன் இருக்கும்போது கொடுக்க முடியாது.
2. கண்தானம் கொடுப்பதற்கு ஒருவர் உயிருடன் இருக்கும்போதே பதிவு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒருவர் இறந்தபின் அவருடைய நெருங்கிய உறவினர்கள் சம்மதித்தாலே போதும் கண்களை எடுக்கலாம்.
3. ஒருவர் இறந்தபின் ஆறு மணிநேரத்திற்குள் கண்களை எடுக்க வேண்டும் என்பதால் இறப்பு நிகழ்ந்தவுடன் விரைவாக அருகில் உள்ள கண்வங்கிக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
4. இறந்த உடல் வைக்கப்பட்டிருக்கும் அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும். குளிர்சாதன வசதி இருந்தால் போட்டுவிடலாம்.
5. கண்வங்கியில் இருந்து மருத்துவர்குழு வரும் வரையிலும் இறந்தவர் உடலின் கண்களை மூடிவைத்து மூடிய இமையின்மேல் ஈரப்பஞ்சினை வைத்திருக்க வேண்டும்.
கண்தானத்தில் ஆர்வம் இருப்பவர்கள் என்ன செய்யலாம்:
உங்கள் வீட்டின் வரவேற்பறை - முன் அறையில் அனைவரது பார்வைபடும்படியாக – ‘எங்கள் குடும்பம் கண்தானம் செய்ய விருப்பமுள்ள குடும்பம்’ - என்று எழுதி வைக்கலாம்.
இதனால் என்ன பயன்?
அப்படி எழுதி வைத்திருப்பதை உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் பார்ப்பார்கள். ஒருவேளை அந்த வீட்டில் யாரேனும் இறந்துவிட்டால், கண்தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்த செய்தி ஒருவர் இறந்த நேரத்தில் உறவினர்களாலோ, நண்பர்களாலோ நினைவுகூறப்பட்டு கண்வங்கிக்கு தகவல் தெரிவித்து கண்களை உரிய நேரத்தில் எடுப்பதற்கு அது உதவியாக இருக்கும்.
இதுதான் உண்மையிலேயே ஒருவர் கண்தானத்துக்கு செய்யும் தொண்டு. அதைவிடுத்து உயிருடன் இருக்கும்போது நானும் கண்தானம் செய்திருக்கிறேன் என்று பதிவு செய்து சான்றிதழை கையில் வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் எந்த வித நேரடி பயனும் கிடையாது.
ஏனெனில் அவ்வாறு பதிவு செய்பவர்கள் பலரும் வயது குறைவானவர்கள்-இளைஞர்கள். அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழப்போகிறவர்கள். உடனடியாக இறப்பு என்பது அவர்களிடையே நேரப்போவது கிடையாது.
தங்கள் பகுதியில் வயதானவர்கள் இறக்கும்போது அங்கு சென்று நெருங்கிய உறவினர்களிடம் பேசி கண்களை எடுக்கவும் உதவி செய்யலாம்.
----
மு.வீராசாமி
மேனாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்
தேசிய கண்மருத்துவ சங்கம்
மதுரை