நலவாழ்வளிக்க வந்த காந்தி
( இன்று காந்தி மறைந்த நாள். ஜனவரி-30 )
சுத்தம் என்பது இறைவனுக்கு அடுத்த நிலை
நாகரீக உடை உடைத்தி, உயர்தர குளிர்கண்ணாடி அணிந்துகொண்டு கையில் நீண்ட துடைப்பத்தை, முதன் முதலாக கையில் பிடித்துக்கொண்டு புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுக்கும் அரசியல்வாதியை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ‘நேற்று இன்று நாளை’ யிலும் அது போன்ற காட்சி உண்டு.
ஆனால் அதைப்போலவே மேற்கத்திய உடையில், கோட்-சூட்டுடன் கையில் துடைப்பத்தைப் பிடித்து அங்கிருந்த அசுத்தங்களையும் கழிவுகளையும் அகற்றிக் கொண்டிருந்தார் அவர்.
1901-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்தான், கழிவுகளால் துர்நாற்றமாய் இருந்த இடத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார் அந்த மனிதர். தொண்டர்களும் பிரதிநிதிகளுமாய் நிரம்பியிருந்த மாநாட்டில், வந்திருந்த பிரதிநிதிகள் தங்கியிருந்த பகுதிகளில், சிலர் கழிப்பறைகளை சரியாக பயன்படுத்தாமல் திறந்தவெளிகளில் அசுத்தம் செய்ததால்தான் அந்த மோசமான சூழல். துர்நாற்றம்.
அதைப்பார்த்துக் கொண்டு அந்த மனிதரால் சும்மா இருக்க முடியவில்லை. அங்கிருந்த தன்னார்வலர்களிடம் சுத்தம் செய்யச் சொன்னபோது , ‘இது எங்கள் வேலை இல்லை, துப்புரவுத்தொழிலாளிகளின் வேலை அது’ என்று மறுத்துவிட்டார்கள். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? நமக்கேன் இந்த தேவையில்லாத வேலை என்று மூக்கைப் பொத்திக்கொண்டு 100 அடித்தள்ளி சுற்றிப் போயிருப்போம்.
ஆனால் அந்த துர்நாற்றம் வீசும் சூழலைப்பார்த்து, துளியும் தயங்காமல் துடைப்பத்தைத் தேடி எடுத்து சுத்தம் செய்ய ஆரம்பித்தார் அந்த அரை ஆடை மனிதர். ஆம்! தேசத்தந்தை மகாத்மா காந்தியேதான்.
தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தி, பிரதிநிதியாக கலந்து கொண்ட முதல் மாநாடு அது. நமக்குத் தெரியும் காந்தி அப்போது மேற்கத்திய உடைகளை அணிந்திருந்த காலம். கோட், சூட்டுடன் அவர் துடைப்பத்துடன் சுத்தம் செய்வதை ஒரு நிமிடம் கண்ணை மூடி அந்த காட்சியை நினைத்துப் பாருங்கள். கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதுபோல் இது ஒன்றும் சில திரைப்படங்களில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்ற காட்சி அல்ல.
பலரும் அன்று அவரை ஏளனமாகத்தான் பார்த்தார்கள். உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. பின்னாளில் காந்தி செய்த தூய்மை பணிக்கு அதுவே தொடக்கம்.
தூய்மை குறித்த சிந்தனை
வியப்பாக இருக்கிறது. மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை அவருக்கு ஏன் வந்தது? அவருக்கு துப்புரவு தூய்மை குறித்த சிந்தனை ஈடுபாடு எங்கிருந்து கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ள தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நிகழ்வினைப் பார்க்க வேண்டும்.
தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அசுத்தமானவர்கள் என்ற கருத்து அன்று நிலவியது. ஆங்கிலேயர்கள் அவர்களை பாகுபடுத்தவே அது காந்தியை வெகுவாக பாதித்திருக்கிறது. அதனால் காந்தி, இந்தியர்களிடம் அவர்களுடைய சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார். அவரவர் சுத்தத்தை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதானே உண்மை! காந்தி அந்தக் கருத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். பிற நாடுகளில் அப்படித்தானே இருக்கிறது.
ஒருமுறை ஜோகன்னஸ்பெர்க்கில் இந்தியர்கள் வசிக்கும் பகுதியில் பிளேக் நோய் கடுமையாக பரவி சிலர் இறந்தபோது நகராட்சி, அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் காந்தி உடனே களத்தில் இறங்கி இருக்கிறார். நிவாரணப்பணியோடு மருத்துவ உதவிகளையும் செய்திருக்கிறார். இதன்மூலம் அவருக்கு ஆழமான அடிப்படைச் செய்திகள் கிடைத்திருக்க வேண்டும். இதை ‘கறுப்பு பிளேக்’ என்றே தன் சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார்.
இந்த அனுபவம் பின்னாளில் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறது. அது தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியா வந்த சமயம். பம்பாயில் ‘பிளேக் நோய்’ தீவிரமாக இருந்தபோது காந்தியடிகள், தானே வலியப்போய் சுகாதாரக் குழுவினருடன் சேர்ந்து சுற்றுப்புறத்தை சுத்தமாக்க கடும் முயற்சி மேற்கொண்டிருக்கிறார். வீடு வீடாக சென்று கழிப்பறையை ஆய்வு செய்து, சுத்தமாக வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தைக் கூறி அதற்கான ஆலோசனைகளையும் வழங்கியதாக, தம் சுயசரிதையில் கூறுகிறார்.
‘இந்தியர்கள் சுத்தத்தைக் குறித்து கவலைப்படமாட்டார்கள், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க மாட்டார்கள்’ என்று இந்திய சமூகத்தின் மீது அந்தக்காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை, பொய் என்று நிரூபிக்க அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் ராஜ்கோட்டில் பிளேக் நோய் வராமல் தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதிலும் தீவிரம் காட்டி இருக்கிறார்.
தூய்மையின் அவசியத்தை உணர்ந்த காந்தி, பின்னாளில் இந்திய தேசிய காங்கிரஸில் ஐக்கியமாகியபோது துப்புரவு பணிகளுக்கென்றே குழுக்களையும் உருவாக்கினார்.
பொது இடங்களில் சுகாதாரம்?
தூய்மை என்பது தனிநபர் ஒழுக்கம் மட்டுமல்ல, அது சமூகக் கடமை
கரோனாவைக்கூட சமாளித்து எழுந்துவிட்டோம். ஆனால் இன்னும் நம்மால் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கமுடியவில்லை. தொடர்ந்து போராட்டம்தான். பொது இடங்களில் இருமும்போது வாயை மூடிக்கொள்ளும்படி, சுகாதாரத்துறையினர் ‘கத்தி’,‘கத்தி’ சொல்லி வருகிறார்கள்.
ஆனால் வியப்பான செய்தி, ஒரு மருத்துவராக இல்லாத போதும் காந்தி இது குறித்து 1919-லேயே பேசி இருப்பதுதான்.
நவஜீவனில் அவர் எழுதுகிறார்:
தெருக்களில் யாரும் எச்சில் துப்பவோ, சளியை சீந்தவோ கூடாது என்கிறார். அப்படி செய்வதன் மூலம் காசநோய் போன்ற கிருமித்தொற்று மற்றவர்களுக்கும் பரவும் ஆபத்து இருப்பதாக சொல்கிறார்.
அப்படி துப்பினால் சளியை மண்கொண்டு மூடச் சொல்கிறார். வெற்றிலை, புகையிலை மென்று கண்ட கண்ட இடங்களில் துப்புவது குறித்து வருத்தப்படுகிறார். அருகில் இருப்பவர்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லையே என்று.
இன்று டெங்கு மலேரியா, சிக்குன்குன்யா போன்ற காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. வியப்பு என்னவென்றால் அன்றே அதை அவர் செய்திருப்பதுதான். நவஜீவனில் அவர் மேலும் சொல்கிறார்:
மலேரியா ஒரு பிரச்சினையாக இருந்தபோது, பள்ளம் இருந்தால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் என்பதால் பள்ளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார். மேலும் பிளேக் போன்ற நோய்கள் பரவுவதற்கு சுற்றுப்புற சுகாதாரமின்மையும் தன்சுத்தம் இல்லாமையும் தான் காரணம் என்று சொல்லி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த படித்தவர்களை அழைக்கிறார்.
இரயில்வண்டிகளில் சுத்தம்
இரயில்வண்டிகளிலும், பொதுஇடங்களில் உள்ள பொது கழிப்பறைகளையும் அசுத்தம் செய்பவர்களைக் கண்டித்தார். அன்றையகாலத்தில்தான் அப்படி இருந்ததுபோலும் என்று இருந்துவிட முடியவில்லை.
அதிநவீன வந்தேபாரத்தில் அண்மையில் சென்றபோதும் அதே நிலைமைதான். ஒன்றும் சொல்வதற்கில்லை. அடுத்து வருபவர்கள் பயன்படுத்துவார்களே என்ற நினைப்பு சிறிதும் கிடையாது.
பல்துலக்குவது, குளிப்பது போன்று பொதுசுகாதாரத்திலும் கவனம் செலுத்தச் சொல்கிறார். சுத்தத்திற்கும் உடல்நலத்துக்கும் உள்ள தொடர்பை தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளார்.
படித்தது சட்டம், என்றாலும் சுகாதாரத்தின் மீதும் உடல்நலத்தின் மீதும் தொடர்ந்து ஆர்வம் கொண்டிருந்த காந்தி- சுயாட்சி அடைவதற்கான 18 அம்ச ஆக்கபூர்வமான திட்டத்தில் கிராமப்புற சுகாதாரம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்தை முன்னிலைப்படுத்திய காந்தி-சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதி வந்த காந்தி - மேற்கத்திய நாடுகளின் பழக்கவழக்கங்களை விமர்சித்திருந்தாலும் அங்கிருந்தே சுகாதாரத்தை கற்றுக்கொண்டதாக அவர் சொல்லத் தயங்கியதேயில்லை.
சுதந்திரத்தைவிட சுகாதாரமே முக்கியம் என்றும், ஒவ்வொருவரும் தமது அழுக்கினை தாமே சுத்தம் செய்ய வேண்டும் என்று சொன்ன காந்தி சொல்கிறார், ‘நான் யாரையும் அழுக்கு கால்களால் என் மனதின் வழியே நடக்க அனுமதிக்க மாட்டேன்’ என்று.
அன்றைய காந்திய சிந்தனையும் இன்றைய தூய்மையும்
தங்கத்தைக் காட்டிலும் ஆரோக்கியமே உண்மையான செல்வம்.
சிந்துவெளி, மொகஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களுக்கு உடல்தூய்மையில் இருந்த கவனம், சுகாதாரத்தில் இருந்த அறிவு, நமக்கு இல்லாமல் போய்விட்டதா? அங்கு நடைபெற்ற அகழாய்வுச் செய்திகள் கிடைத்த கட்டிடங்கள் - குறிப்பாக கழிவுநீர்க்கால்வாய்கள் முழுவதும் செங்கல் தகடுகளால் மூடப்பட்டிருந்தது என்றும் தனியாக குளியலறை இருந்ததாகவும், மக்கள் உடல்தூய்மையில் அதிக கவனம் செலுத்தி இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிப்பதை அறியும்போது வியப்பாகத்தான் இருக்கிறது.
அது மட்டுமல்ல. பொதுகுளியல் தொட்டியும் இருந்திருக்கிறது. அதில் இருந்து நீர் வெளியேற வடிகால் அமைப்பு இருந்ததும், ஒவ்வொருவீட்டில் இருந்தும் வெளியேறும் வடிகால், குழாய் மூலம் தெருவில் இருந்த மூடிய வடிகால்களுடனும் இணைக்கப்பட்டிருந்ததும் எப்போற்பட்ட பொதுசுகாதார சிந்தனை?.
‘உடல் ஆரோக்கியம், சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில் இருந்து துவங்குகிறது’, என்று காந்தி சொன்ன செய்திகள் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போனது வருத்தமான செய்திதான். அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவின் காரணமாகவே அவரால் 1905 காலகாட்டத்தில் ‘இந்தியன் ஒப்பினியனில்’ ஆரோக்கியம் குறித்து ‘ஆரோக்கிய வழி’ என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுத முடிந்தது. பின்னர் அதுவே ‘ஆரோக்கியத் திறவுகோல்’ என்ற பெயரில் நூல் வடிவமும் பெற்றது.
அந்த அரை ஆடை மனிதர் தூய்மை, பொதுசுகாதாரத்தின் மீது காட்டிய அளப்பரிய ஈடுபாட்டின் காரணமாக இந்திய அரசு 2014-ல் அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 2-ல் நாடுதழுவிய திட்டமான ‘தூய்மை இந்தியா திட்டத்தை’ அமல்படுத்தியது எத்தனைபேருக்குத் தெரியும்?
சரி, இந்தத் திட்டம் தொடங்கியபிறகு தூய்மையின் இன்றைய நிலைமைதான் முன்னேறி இருக்கிறதா? அதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்கிறதா?
சாலைகள், தெருக்கள் வீட்டுப்பகுதிகள் என்று எங்குபார்த்தாலும் குப்பைகள். பலரும் குப்பைத் தொட்டிக்கு அருகில் வரை வந்துவிட்டு எட்ட நின்று அங்கிருந்தே குப்பைகளை வீசி எறியத்தானே செய்கிறார்கள்.
நீர் நிலைகளையும் விட்டு வைக்கவில்லை. பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளர், பாட்டில்களையும், உடுத்திய ஆடைகளையும், இதர குப்பைகளையும் குளங்கள், ஆறுகளில் தூக்கி வீசி மாசுபடுத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள்.
பொதுசுகாதாரத்தின் அடிப்படையே ‘வருமுன்காப்போம்’ என்பது தான். அதில் உறுதியாக இருந்திருக்கிறார் காந்தி. ‘கழிப்பறை சுத்தமே ஆரோக்கியத்தின் அடிப்படை’ என்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளும்படியும், காந்தி வலியுறுத்திய கருத்துக்களை முழுமையாக நிறைவேற்றும்போதுதான் ‘தூய்மை இந்தியாவும்’ முழுமையாக நிறைவேறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக