செவ்வாய், 13 ஜனவரி, 2026

அடுப்பங்கரையில் அம்மிக்கு என்ன வேலை?

அடுப்பங்கரையில் அம்மிக்கு என்ன வேலை?

 

கட்டுரையின் தலைப்பை அறிவித்ததும் உடனே வந்த கமெண்ட்ஸ், ‘அடுப்பங்கரையில் அம்மையாருக்கே வேலை இல்லையே? பின் அம்மிக்கு அங்கு என்ன வேலை?’ என்பதுதான்.  அதுவும் சரிதான். 

“ஆசாரியாரே எங்க வீட்டுலேயும் ஆறுமாசத்துக்கு முன்ன அடுக்கள வேலை நடந்து, அம்மி ஆட்டுரல தூக்கி வெளிய போட்டாச்சு. காலம் மாறுதுல்ல...இப்பல்லாம் யாரு ...”. வெளிநாட்டில் இருக்கும் பிள்ளை அனுப்பிய பணத்தில், வீட்டை மறுசீரமைப்பு செய்யும்போதுதான் இந்தப்பேச்சு வரும். தினமணிகதிரில் படித்த கதை இது. எழுதியவர் பெயர் நினைவில்லை.

 

                                                    

கதை அல்ல. இது உண்மைதான். வீடுகளில் அம்மிக்கு இன்று இடமில்லை. ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்அம்மி மிதித்து அருந்ததி பார்த்து என்று பேசுகிற மொழிகளில்தான் அம்மி’ இருந்து கொண்டிருக்கிறது. பழையவீட்டில் அம்மி இருந்தாலும், புதுவீடு கட்டிப்போகும்போது,தேவையில்லாத பொருளாக கழித்துவிட்டுத்தானே செல்கின்றனர்.

குழம்புக்கும், கூட்டுக்கும் மசாலா பொருட்கள் அரைக்க, துவையல் அரைக்க அம்மிதான் சிறந்தது.

காலையில் இட்லி - தோசைக்கு சட்னிமிளகாய்சட்னி தேவை என்றால் அதற்கும் தனியாக அரைக்க வேண்டும். மதியம் குழம்புகூட்டு பொரியல்ரசத்துக்கும் அரைப்பு உண்டு. எத்தனை தடவை அரைப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். அன்று யாரும் சுணங்கியதே கிடையாது. நிமிடத்தில் அரைத்து எடுப்பார்கள்.

இப்படி அரைப்பது தனி சுகம் தான். தேங்காய் சில்லைவைத்து தட்டி அரைப்பதும்ரசத்துக்கு மிளகு சீரகம் வைத்து நுணுக்குவதும் கலைநயமிக்க வேலை. சிதறாமல் சீராக அரைக்க வேண்டும். தேங்காயோ - மிளகு சீரகமோ, அரைக்கும்போது முதல் அடி தட்டிக்கொடுக்கும் மெல்லிய அடியாக இருக்கும். பக்குவமான அடி. இரண்டு மூன்று தட்டலுக்குப்பிறகே குழவி வேகம் பிடிக்கும், வண்டியைப்போல. எடுத்தவுடன் வேகத்தைக் காட்டினால் சிதறிவிடும்.

ஒவ்வொருமுறை குழவிக்கல்லை முன்னும் பின்னும் உருட்டி அரைக்கும்போதும் அரைபடும் பொருட்கள் வெளியே சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அம்மிக்கு ஏற்ற அளவிலேயே பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து, சேர்த்து சேர்த்து அரைக்க வேண்டும். 

வேகமாக அரைத்தால், அம்மியை விட்டு குழவி வெளியே கீழே விழுந்துவிடும். ஆனால் நம் வீட்டுப் பெண்மணிகள் அரைக்கும்போது ஒருபோதும் அப்படி நிகழ்ந்ததில்லை. குழவி சீராக முன்னும் பின்னும் சென்று வரும். அதே மாதிரி அரைபடும் பொருட்களும் தேவையில்லாமல் சிந்தாமல்தான் அரைப்பார்கள். 

                                                              A person using a black cylinder to grind food

AI-generated content may be incorrect.

அரைத்து முடித்ததும் குழவியை நிமிர்த்தி, அரைத்த பொருட்களை வழித்து எடுத்து கழுவுவதும் அற்புதமாக இருக்கும். கழுவி எடுக்கும், முதல் தன்ணீரை மசாலாவுக்கோ சட்னிக்கோ தேவை என்றால் பக்குவமாக எடுத்து பாத்திரத்தில் சேகரித்து வைத்துக்கொண்டு அதற்குப் பின் அம்மியை கழுவிவிடுவார்கள்.

அரைத்து முடிப்பது ஒரு உடற்பயிற்சி மட்டுமல்ல, அதுவும் ஒருவகை மெடிட்டேசன்தான். மனம் ஒருமுகப்படும். அரைப்பதில் வல்லமை வந்துவிட்டால் நிதானமும் பக்குவமும் கூடவே வந்துவிடும். மன அழுத்தம் இருந்தாலும் போயே போய்விடும்.  

இப்போதுபோல் மின்சாரம் தடைபட்டு குழம்புக்கு மிக்ஸி அரைக்க முடியாமல் போய்விட்டால் தலையில் கைவத்து உட்கார வேண்டியதில்லை. ஆன்லைனில் ஆர்டர் போட்டு சமாளிக்கலாம் என்ற தேவையும் அன்றைய அம்மியில் கிடையாது. கைவலிஉடம்புவலி என்றாலும் அரைப்பார்கள் பெண்கள். இன்று அம்மிக்கு லீவு என்று, ஒருநாளும் நடந்தது கிடையாது. ஒருவேளை அம்மாவுக்கு முடியவில்லை என்றால் பிள்ளைகள் அரைப்பார்கள். போம்மா எனக்கு வேலை இருக்கிறதுபடிக்க வேண்டும்பழக்கமில்லை என்றெல்லாம் சொன்னதில்லை. யாரும் கையைப்பிடித்து அரைக்க சொல்லிக் கொடுத்ததுமில்லை. பக்கத்தில் இருந்து பார்த்த அனுபவம் ஒன்றுதான்.

அம்மிக்கல் வழுவழுப்பாகிவிட்டால் அதைக் கொத்த வேண்டும். அம்மி கொத்தலையோஅம்மி கொத்தலையோ என்று அம்மி குத்துபவர் அன்று தெருவீதிகளில் வருவார்கள். அம்மிக்கல்லைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நாளடைவில் அம்மி தேய்ந்து வழுவழுப்பாகி அரைப்பதற்கு ஏதுவாக இல்லாமல் போய்விடும். மீண்டும் அதை சொரசொரப்பாக்குவதே இந்த அம்மிக்குத்தல். 

கல்தச்சர் ஒரு உளியைக் கொண்டு சீராக அம்மிக்கல் முழுவதும் குத்துவார். இதன் மூலம் கல்சொரசொரப்பாகி நன்றாக அரைபடும்.

அம்மியில் அரைத்து செய்யும் சமையலின் ருசியே தனிதான். எப்படி தேங்காய் எண்ணெய் சமையலுக்கென்று தனி மணமும்ருசியும் இருக்கிறதோ அதுபோன்று அம்மி சமையலுக்கும் தனி ருசி இருக்கிறது.

அண்மைக்காலமாக சில ஹோட்டல்களில் ‘இங்கு அம்மியில் அரைத்த மசாலாபொருட்களால் ஆன சமையல் என்று எழுதிப்போட்டிருப்பதைப் பார்க்கலாம்.

கையடக்கமான சிறு கருங்கல் அம்மிகள் தற்போது கிடைக்கின்றன. பைபாஸ் சாலைகளில் கடைகளின் வெளியே விற்பனைக்கு வைத்திருப்பதைப் பார்க்கலாம். 

எல்லாம் சரிதான். மாறிவிட்ட இந்த இயந்திர உலகில், பெரிய அம்மிக்கல்லில் அரைப்பது என்பதெல்லாம் தேவையா? நினைத்தே பார்க்க முடியாது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. இந்த நிலையில் சிறு அம்மிக்கல்லை வாங்கிக் கொள்ளலாம். எடைகுறைவுதான். எடுத்துப் பயன்படுத்த மிக எளிதுதான். குறைந்த அளவில் சட்னி போன்றவைகளுக்காகவது பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. மனதுக்கும் நல்லது. 

அம்மி. அந்தக்காலத்து பாரம்பரிய மிக்‌ஸி. பல நூற்றாண்டுகளாக நம் வீட்டு அம்மா- பாட்டிமார்களின் கைகளில் தாண்டவமாடிய உயிர்ப்பான கல். அதோடு அம்மி என்பது நம் தமிழர் வாழ்வோடு தொடர்புடையது. அம்மி இருந்தால்தான் அது, வீடு. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக