புதன், 30 அக்டோபர், 2024

கொட்டுக்காளியின் தவறு?

 

                       கொட்டுக்காளியின் தவறு?

 

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் (ஓய்வு) &

முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்

தேசிய கண்மருத்துவ சங்கம்.

மதுரை.

                

                             -----


 

கொட்டுக்காளி பாத்தாச்சா! கருத்து எதுவும் சொல்லாமல் இருக்கீங்க என்று வழக்கம்போல் நண்பர்கள் கேட்டார்கள். பார்த்துவிட்டு சொல்வதாக சொல்லிவிட்டேன். அப்படி என்ன இருக்கிறது? ஆவலைத் தூண்டியது.  

கொட்டுக்காளி அருமையான படம்தான். நடிகர் சூரிக்கு விடுதலைக்கு அடுத்து உயர்வைத் தந்த படம். எடுத்துக் கொண்ட கருத்து பரவலாக பலராலும் பேசப்பட்டது. எங்கள் ஊர்காரர் என்பதால் அவர் மீது எப்போதும் பிரியம்தான். அம்மன்உணவகத்தால் மதுரைக்காரர்களை கட்டிப்போட்டல்லவா வைத்திருக்கிறார்.

சரி விசயத்துக்கு வருவோம். கொட்டுக்காளியில் ஒரு காட்சியில் சூரி, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார் தன் உறவினர்களுடன். பின்னால் ஆட்டோவில் தங்கை உட்பட இன்னும் சில உறவினர்களும் தொடர்ந்து வருகிறார்கள். திடீரென்று சூரியின் வண்டி நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். பின்னால் வந்து கொண்டிருந்த தங்கையும் மற்றவர்களும் ஒரே நேரத்தில் என்னாச்சு? என்னாச்சு? ஏன் வண்டி நிற்கிறது என்று கேட்டுக்கொண்டே ஆட்டோவை அவருக்கு அருகில் போய் நிறுத்துகிறார்கள்.

பூச்சி அடிச்சிருச்சு! பூச்சி அடிச்சிருச்சு! என்கிறார்கள் அங்கிருப்பவர்கள். கண்ணில் பூச்சி அடிச்சிருச்சாம் வேறு ஒன்றுமில்லை என்கிறார்கள். அங்கே சூரி கண்ணைத் தேய்த்துக் கொண்டு நிற்கிறார்..

ஆட்டோவில் இருந்து இறங்கிய சூரியின் தங்கை வேகமாக போய் சூரிக்கு அருகில் நின்றுகொண்டு சூரியின் கண்ணை நன்றாக திறக்கச் செய்து தூசியை தன் நாக்கால் எடுக்கிறார். குளோசப் காட்சியாக வேறு காண்பிக்கிறார்கள். இந்தக் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  


 


 

 


அதெல்லாம் பழைய கதை

அதெல்லாம் ஒரு காலம். கண்ணில் தூசிவிழுந்தால் நாக்கைப்போட்டு எடுப்பது, வளையம் போட்டு எடுப்பது, தாய்ப்பால் ஊற்றுவது, விளக்கெண்ணெய் ஊற்றுவது, கோழிக்கால் இரத்தம், பச்சிலைச் சாறு விடுவது என்பதெல்லாம் போயே போச்சு. எப்போது இந்தியாவில் ‘தேசிய பார்வை இழப்புத் தடுப்புத்திட்டம்தொடங்கி தீவிரமாக செயல்படுத்தப்பட்டதோ அப்போதே இவையெல்லாம் சிறிது சிறிதாக மறையத் தொடங்கிவிட்டது.  தடுக்கக்கூடிய பார்வையிழப்பைத் தடுப்பதற்கு போராட வேண்டி இருந்தது.  இவை மருத்துவ வசதி கிடைக்காத நிலையில் முன்னேறாத காலகட்டத்தில் இருந்த வழக்கங்கள் என்பதையும் தற்போது அவை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன என்பதையும் கவனிக்க வேண்டும்.

மருத்துவ வசதி இல்லாத தொலைதூர கிராமங்களில்கூட இம்முறைகள் தற்போது வழக்கத்தில் இல்லை என்று சொல்லலாம். இப்படி தூசி எடுத்து பார்வை இழந்துபோனவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். கருவிழி பாதிக்கப்பட்டு, நாக்கால் எடுப்பவர் மூலம் தொற்று ஏற்பட்டு, தூசி முறையாக முழுமையாக எடுக்கப்படாமல் போன்ற காரணங்களால்.

தற்போது பார்வை இழப்பத் தடுப்புத் திட்டம் எவ்வளவோ முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சூரி சார்ந்த மதுரையே கண்பாதுகாப்புக்கும் நவீன சிகிச்சைக்கும் பேர் பெற்ற ஊர் என்பது அவருக்கேத் தெரியும்.

பார்வை பாதுகாப்பில் பல அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் இந்த காட்சி தேவையா என்று தோன்றுகிறது.

 

கண்ணில் தூசி - பூச்சி விழுந்தால் என்ன பிரச்சினை?

இரு சக்கர வாகனம் ஓட்டும்போது கண்ணாடியோ அல்லது ஹெல்மெட்டோ அணிந்து செல்லாமல் பலரும் செல்வதைப் பார்க்கிறோம். இதுபோன்ற சமயங்களில் கண்ணில் அடிக்கடி தூசியோ பூச்சியோ விழலாம். இதில் பொதுவாக தூசி விழுந்தவுடன் கண்களைக் கசக்கக் கூடாது. இதனால் அழுத்தமாக படியாமல் மேலோட்டமாகவே தூசி இருந்துவிட்டு  தானாகவே வெளியேறிவிட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் சில சமயங்களில் நாம் வண்டியில் வேகமாக போய்க்கொண்டிருக்கும்போது வேகமாக பறந்து வரும் பூச்சி கண்ணில் விழும்போது கொசுவோ அல்லது வேறு பூச்சிகளின் கொடுக்கோ பறந்துவந்த வேகத்தில் - நாம் வண்டியில் செல்லும் வேகத்தில் கண்ணின் கருவிழியைத் துளைத்துக் கொண்டு கண்ணுக்குள்ளேயே சென்று விடுவதுண்டு.

இதுமாதிரியான விசயங்களில் கண்ணின் கருவிழிக்குள் சென்ற கொடுக்கினை மருத்துவமனையில், அறுவை சிகிச்சைமூலம்தான் எடுக்கமுடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  எனவே கண்ணில் இது போன்று பூச்சிகள் விழுந்தால் கவனமாய் இருப்பது நல்லது. அட கொசுதானே! பொடி பூச்சிதானே என்று அலட்சியப்படுத்தக்கூடாது.

நாக்குபோட்டு எடுப்பது நல்லதல்ல என்பதோடு பார்வைக்கும் கேடு. பார்வைஇழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

 

தூசி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக தூசி விழுந்தால் குழாய் நீரால் கண்ணைக் கழுவினாலே போதும். பெரும்பாலும் தூசி போய்விடும். கண்ணில் தூசியோ அல்லது பூச்சி போன்ற இதர பொருட்கள் விழும்போது கண்ணைத் தேய்க்கக்கூடாது.  தேய்த்தால் கழுவிழியில் சிராய்ப்பு ஏற்பட்டு புண் ஏற்படலாம். அத்துடன் தூசி ஆழமாக பதிந்துவிடும்.

ஆனால் படத்தில் சூரி கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கிறார். இதுவும் தவறான செயல்.

அந்த சூழலில் வேறு என்ன செய்வது என்று கேட்கலாம். அதுதான் சூரி உறவினர்கள் பாட்டிலில் தண்ணீர் வைத்திருக்கிறார்களே. தண்ணீர் கொண்டு கண்ணை நன்றாக கழுவுவதுபோல் காட்சியை அமைத்திருக்கலாம்.

திரைப்படம்தானே. லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது என்று ஒதுக்கிவிட்டு போக முடியாது. வியப்பாக இருக்கிறது. இந்தக் காட்சியை எடுக்க ஒருவர்கூட எதிர்ப்போ அல்லது குறைந்தது விமர்சிக்கவோ இல்லையா என்று.

கதை கிராமிய சூழலில் நடைபெறுவதால் கிராம வாழ்வியலை காண்பித்திருக்கிறேன் என்று இயக்குநர் சொல்லி சமாளிக்க முடியாது. திரைப்படம் ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் என்பதால் காட்சி அமைப்பில் எப்போதும் கூடுதல் கவனம் தேவை.

                                ---

வியாழன், 24 அக்டோபர், 2024

இருளடைபார்வை

 

                             இருளடைபார்வை

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் (ஓய்வு)

                                       

                                                                     ---    

அண்மையில் வரலாற்றாய்வாளரும் கண்மருத்துவருமான டாக்டர்.இரா.கலைக்கோவனின் ‘பார்வையிழப்பின் மூவருலா என்ற கட்டுரை இந்துதமிழ் திசை நாளிதழில் வெளியானது. இதில் Amaurosis fugax என்ற கண்நோய் பிரச்சினை பற்றி குறிப்பிட்டிருந்தார். வரலாறு, கல்வெட்டு, மருத்துவம் கலந்து சுவைபடயிருந்த அந்த கட்டுரையில் இடம்பெற்றிருந்த  அந்த Amaurosis fugax கண் பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்தது.  

20 ஆண்டுகளுக்கு முன் அந்த நோயால் துயரப்பட்ட ஒருவரைப் பார்க்க நேர்ந்தது. ஒருநாள் காலை நேரத்தில் திடீரென அவருக்கு பார்வை இருட்டிவிட்டது. அவருக்கு உடலில் சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் வேறு இருந்தது.

கிராமத்தில் இருந்ததால் சாமிகுத்தம் என்று இரண்டு மூன்று நாட்கள் கழித்தே மருத்துவமனைக்கு சென்றதால் சிகிச்சையில் தாமதம். அலட்சியமாக இருந்ததால் பிரச்சினை சற்று அதிகமாகி சிகிச்சை செய்தும் 30 விழுக்காடு பார்வையே அவருக்கு மிஞ்சியது.


 

என்ன பிரச்சினை?

Amaurosis என்றால் கிரேக்கத்தில் இருள். Fugax என்றால் விரைவாக என்று பொருள். இது ஒரு நிலையற்ற பார்வையிழப்பு. தற்காலிகமானது. வலி எதுவுமில்லாமல் திடீரென்றுதான் ஏற்படும்.

பாதிக்கப்பட்டவரின் கண்ணிற்கு முன் திரைபோன்ற இருள் ஏற்படுவதுபோல் தோன்றும். பெரும்பாலும் 2 நிமிடத்திலிருந்து 10 நிமிடம் வரை நீடித்து பின் இயல்பு நிலைக்குத் திரும்பும். பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது. தானாகவே சரியாகிவிடக்கூடியது.

வயதானவர்களுக்கும் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும் கண்ணிற்கு முன்னால் பூச்சி பறப்பது போன்ற  பிரச்சினை இருக்கும். கண்ணுக்கு முன் கறுப்பாக ஓடுவது போல் இருப்பதாக சொல்வார்கள். இது சாதாரண ஒன்று. இதையும் இருளடைபார்வையினையும் சேர்த்து குழப்பிக் கொள்ளக்கூடாது. சாப்பிடாமல் பசி மயக்கத்தில் இருக்கும்போது கூட கண்ணை இருட்டிக்கிட்டு வரும். அதெல்லாம் சாதாரண நிகழ்வு.

 

ஏன் இந்த திடீர் இருட்டு?

 

மூளைக்கு செல்லும் தமனியில் இரத்தம் மெதுவாக செல்வதால் இந்த தீடீர் இருள் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் காரணமாகவோ சர்க்கரைநோய் காரணமாகவோ இதய இரத்தக்குழாய்களின் உட்புறம் கொழுப்போ, கால்சியமோ படியலாம். படிந்துள்ள இவற்றிலிருந்து சிறு துகள் பிரிந்து சிலசமயங்களில் இரத்தத்தில் கலந்து போகலாம்.

இதயத்திலிருந்து இரத்தம் செல்லும்போது  இந்த துகள்களும் இரத்தத்தில் கலந்து கண்ணுக்குள் செல்லலாம். இதனால் இரத்த ஓட்டம் சில விநாடிகள் தடைப்பட்டு இந்த இருள் ஏற்படுகிறது. பெரும்பாலும் ஒரு நிமிடத்தில் இருந்து 5 நிமிடங்கள் வரை இந்த இருட்டடைப்பு இருக்கலாம். இன்னும் சிலருக்கு 10 நிமிடங்கள் வரை நீடிக்கலாம்.

கழுத்து எலும்பு தேய்மானப் பிரச்சினையாலும் தலையில் அடிபடுவதாலும் பார்வை நரம்பில் ( Optic Nerve ) ஏற்படும் வீக்கத்தாலும்கூட இருளடைபார்வை ஏற்படலாம்..

 

எச்சரிக்கை மணி

 

ஒருவர் தனக்கு சில நிமிடம் பார்வை தெரியாமல் இருட்டாக இருந்தது சொன்னால் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு உடலில் வேறு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்று சோதித்து பார்க்க வேண்டும்.

பக்கவாதம்  ஏற்படுவதற்குரிய எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொண்டு உடனடியாக மருத்துவமனை சென்று சோதித்துக் கொள்ள வேண்டும்.

பாதிப்புக்குள்ளானவர் சர்க்கரைநோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்க்குரிய சோதனைகளையும் செய்து கொள்ள வேண்டும். கண்ணிலும் விரிவான பரிசோதனை செய்து பார்வைநரம்பின் ஆரோக்கியத்தை சோதித்துக்கொள்ள வேண்டும். முழுமையான இரத்த பரிசோதனையும் தேவைப்படும்.

மைக்ரேன்- ஒற்றைத்தலைவலி பிரச்சினையிலும் தற்காலிக பார்வையிழப்பு போன்று பார்வை இருட்டடைந்து சிறிது நேரம் பொருட்கள் முழுமையாக தெரியாது. அப்படி அதுபோன்று அடிக்கடி பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களும் முழுமையான சோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

சாதாரணமாக சிலருக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வரும் என்று சொல்வார்கள். இருளடைபார்வை ஒரு நிலையற்ற பார்வையிழப்புதான். சாதாரண ஒன்றாக எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் அதில் மாறுபாடு தெரிந்து சில நிமிடங்கள் வரை நீடித்தால் ஏற்படுவதற்கான காரணத்தை முழுமையாக சோதனை செய்து வேறு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்று  பார்த்துக்கொள்வது பார்வைக்கும் மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லதுதான்.

( நன்றி: இந்தக் கட்டுரைக்கு இருளடைபார்வை என்று பொருத்தமாய் பெயரிட்ட கவிஞர்.மகுடேசுவரன் அவர்களுக்கு. )

 

 

செவ்வாய், 15 அக்டோபர், 2024

உலக கைகழுவும் நாள் - அக்டோபர் 15

 


                 கைசுத்தம் எப்போதும் தேவைதானே!

               உலக கைகழுவும் நாள் - அக்டோபர் 15

 

சிற்றூர் ஒன்றில் கண்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வினாடி- வினாப் போட்டி அது. கலந்துகொண்டவர்கள் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்கள். நிகழ்ச்சியில் கண்பாதுகாப்புடன் சுகாதாரம் தொடர்பான பிற செய்திகளையும் மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டிய / தெரிந்து கொள்ள வேண்டிய சில கேள்விகளும் கேட்கப்பட்டன. பார்வையாளர்களாக முதலாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களும் உட்கார்ந்திருந்தார்கள்.

நிகழ்ச்சியில் ஒரு கேள்வியைக் கேட்கும்போது ஒரு மாணவன் எழுந்து, இந்தக் கேள்விக்கு தனக்கு மட்டுமே விடை தெரியும் என்றும் வேறு யாருக்கும் தெரியாது என்றும் சொன்னான். வியப்பாக இருந்தது அவன் பேசிய தொனி. அவன் பேச்சில் ஓர் கர்வம் வேறு. இத்துணைக்கும் அவன் மூன்றாம் வகுப்பு. போட்டியிலும் அவன் இல்லை.

கேட்கப்பட்ட கேள்வி, ‘உலக கை கழுவும் நாள்  ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறதுஎன்பதுதான். அவன் சொன்னதுபோலவே அவனுக்கு மட்டுமே ‘அக்டோபர் 15என்பது தெரிந்திருந்தது. எப்படி உனக்கு தெரியும் என்று கேட்டதற்கு, அந்த நாளில் தான் பிறந்ததாக சொன்னான். மேலும் தான் சாப்பிடும் முன் நன்றாக கைகளை கழுவிய பிறகே சாப்பிடுவதாகவும் சொன்னான். மகிழ்ச்சியாக இருந்தது அவன் சொன்னது. அந்த மாணவனைப்போல் எத்துணைபேருக்கு இந்தக் கைகழுவும் நாள் குறித்து தெரியும்?  சாப்பிடும் முன் எல்லோருமே கைகழுவுகிறார்களா?  சிந்தித்துப்பாருங்கள்.

 

சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டுமாம்

 

ஒரு முறை நான் வேலை பார்த்த சுகாதாரநிலைய தலைமை மருத்துவர் பணியாளர்கள் எல்லோரும் நின்று கொண்டிருந்தபோது ஒரு கேள்வி கேட்டார். ‘கைகளை நீங்கள் எல்லோரும் அடிக்கடி கழுவுகிறீர்களா? அதுவும் சாப்பிடும் முன் கழுவுகிறீர்களா? என்று. கழுவுகிறோம் என்று சிலர் சொன்னார்கள். சிலர் சோப் போட்டும், சிலர் வெறும் தண்ணீரில் கழுவுவதாகவும் சொன்னார்கள். ‘சோப்பு போட்டு என்றால் எப்படி கழுவுகிறீர்கள்? எவ்வளவு நேரம் கைகளை ஊற வைப்பீர்கள்?என்று கேட்டார். சோப்பு கொண்டு உடனே கழுவிவிடுவதாக சொன்னார்கள்.

துணி துவைக்கும்போது என்ன செய்கிறோம். துணிகளை சிறிது நேரம் சோப்பு நுரையில் ஊற வைக்கிறோம் இல்லையா ? அது போன்று சற்று நேரமாவது கைகளை ஊற வைத்த பிறகே கைகளை நன்றாகத் தேய்த்து கழுவ வேண்டும் என்றார். அதுதான் பயன் தரக்கூடிய சரியான முறையாகும். கழுவுவதே பெரிது. இதில் கைகளை ஊற வேறு வைக்க வேண்டுமா என்று கேட்கிறீர்களா?

‘கண்ணா, சாப்பிட வாடாஎன்றவுடன் ‘இந்தா வந்திட்டேன் என்று வேக வேகமாக ஓடி வந்து சாப்பாட்டுத்தட்டின் முன் உட்காரும் பிள்ளைகள்தானே இந்தக் காலத்துப் பிள்ளைகள். ‘போடா கைகளைக் கழுவிட்டு வாடாஎன்று சொன்னால் போனால்போகிறது என்று குழாயைத் திருகி ஒரு கையால் கைக்கு ‘தண்ணிக்காட்டிட்டுவேண்டுமானால் வருவார்கள். சிற்றூரில் என்றால் பாத்திரத்தில் இருக்கும் நீரில் கையை அத்திவிட்டு ஓடிவருவார்கள். இன்னும் சிலர் ‘கை டிரையாத்தானே இருக்கு ஒண்ணும் பிரச்சினையில்லையே அப்படியே சாப்பிடலாம்என்பார்கள். இதுதானே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வேலையின் இடையில் சாப்பிட நேரும்போது அப்படியே வந்து சாப்பாட்டில் கையை வைப்பவர்களும் இருக்கிறார்கள். ‘போடா கையைக் கழுவிட்டு வந்து சாப்பிடுஎன்று சொன்னபிறகு போய் கழுவி விட்டு வருவார்கள். இதில் என்ன பயன் இருக்கிறது? அதுதான் ஏற்கனவே கையில் இருக்கும் அழுக்கினையும் கிருமிகளையும் சாப்பாட்டில் திணித்தாயிற்றே!

திருமணம், விருந்து, கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளில் சாப்பிடுவதற்கு கூட்டம் அதிகமாக இருக்கும். அது போன்ற இடங்களில் சாப்பிடுவதற்காக அவசரப்பட்டு பலரும் கைகளை கழுவுவதே கிடையாது.

 

ஏன் கைகளைக் கழுவ வேண்டும்?

 

சாப்பிடும் முன் கைகளை கழுவுவதன் மூலம் வயிற்றுப்பிரச்சினைகளையும் வயிற்றுப்போக்கினையும், நிமோனியாவினையும் தடுக்கலாம். ஏன், சில சமயங்களில் இதன் மூலம் ஏற்படும் மரணத்தையும் தடுக்க முடியுமாம். மரணத்தில் இருந்து பாதுகாக்கிறது என்பதை அண்மைக்கால கரோனாதான் நமக்கு உணர்த்தி சென்றுவிட்டதே.  

சோப்பு போட்டு கைகளை கழுவுவதே மிகச் சிறந்த வழி என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சோப் எளிதில் கிடைக்கக் கூடிய பொருள்தான். அதற்காக அதிக செலவும் செய்யவேண்டியதில்லை. இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

கைகழுவுவதன் முக்கியத்தை உணர்த்துவதற்காக 2008-ல் நடைபெற்ற, முதல் உலக கைகழுவும் நாளில் ( First World Hand Washing Day ) 70 நாடுகளைச் சார்ந்த 120 மில்லியன் குழந்தைகள் கைகளை கழுவி விழிப்புணர்வு அடைந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் என் இனிய நண்பர் மரு.எஸ்.இளங்கோ, 15  ஆயிரம் மாணவர்களைக் கொண்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஒரே நேரத்தில் அனைவரையும் சோப் கொண்டு கைகளை கழுவ வைத்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வு இந்நாளில் நடைபெறுவதோடு நின்றுவிடக்கூடாது. பெற்றோரும், ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு கைகழுவுவதின் அவசியத்தை அடிக்கடி உணர்த்த வேண்டும்.

 

கைசுத்தம் எப்போதும் தேவைதானே!

 

அன்றாட அவசர  உலகில் கைகளை சோப்புபோட்டு கழுவிவிட்டு சாப்பிடுவது என்பது கொஞ்சம் கஷ்டமான விசயம் என்று நினைக்கலாம். ஆனால் அது நம் நலவாழ்வில், நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. அதைத்தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தயக்கம் காட்டக்கூடாது. கரோனா காலத்தில் நாம் உயிர் காக்க கடைப்பிடித்தோம் என்பதை அவ்வளவு எளிதில் மறந்துவிடுவோமா! கைசுத்தம் எப்போதும் தேவைதானே! அதைத்தான் இவ்வாண்டு உலக கைகழுவும் நாளும் வலியுறுத்துகிறது.

                           --------