இருளடைபார்வை
மு.வீராசாமி
---
அண்மையில் வரலாற்றாய்வாளரும் கண்மருத்துவருமான டாக்டர்.இரா.கலைக்கோவனின் ‘பார்வையிழப்பின் மூவருலா’ என்ற கட்டுரை இந்துதமிழ் திசை நாளிதழில் வெளியானது. இதில் Amaurosis fugax என்ற கண்நோய் பிரச்சினை பற்றி குறிப்பிட்டிருந்தார். வரலாறு, கல்வெட்டு, மருத்துவம் கலந்து சுவைபடயிருந்த அந்த கட்டுரையில் இடம்பெற்றிருந்த அந்த Amaurosis fugax கண் பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்தது.
20 ஆண்டுகளுக்கு முன் அந்த நோயால் துயரப்பட்ட ஒருவரைப் பார்க்க நேர்ந்தது. ஒருநாள் காலை நேரத்தில் திடீரென அவருக்கு பார்வை இருட்டிவிட்டது. அவருக்கு உடலில் சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் வேறு இருந்தது.
கிராமத்தில் இருந்ததால் சாமிகுத்தம் என்று இரண்டு மூன்று நாட்கள் கழித்தே மருத்துவமனைக்கு சென்றதால் சிகிச்சையில் தாமதம். அலட்சியமாக இருந்ததால் பிரச்சினை சற்று அதிகமாகி சிகிச்சை செய்தும் 30 விழுக்காடு பார்வையே அவருக்கு மிஞ்சியது.
என்ன பிரச்சினை?
Amaurosis என்றால் கிரேக்கத்தில் இருள். Fugax என்றால் விரைவாக என்று பொருள். இது ஒரு நிலையற்ற பார்வையிழப்பு. தற்காலிகமானது. வலி எதுவுமில்லாமல் திடீரென்றுதான் ஏற்படும்.
பாதிக்கப்பட்டவரின் கண்ணிற்கு முன் திரைபோன்ற இருள் ஏற்படுவதுபோல் தோன்றும். பெரும்பாலும் 2 நிமிடத்திலிருந்து 10 நிமிடம் வரை நீடித்து பின் இயல்பு நிலைக்குத் திரும்பும். பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது. தானாகவே சரியாகிவிடக்கூடியது.
வயதானவர்களுக்கும் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும் கண்ணிற்கு முன்னால் பூச்சி பறப்பது போன்ற பிரச்சினை இருக்கும். கண்ணுக்கு முன் கறுப்பாக ஓடுவது போல் இருப்பதாக சொல்வார்கள். இது சாதாரண ஒன்று. இதையும் இருளடைபார்வையினையும் சேர்த்து குழப்பிக் கொள்ளக்கூடாது. சாப்பிடாமல் பசி மயக்கத்தில் இருக்கும்போது கூட கண்ணை இருட்டிக்கிட்டு வரும். அதெல்லாம் சாதாரண நிகழ்வு.
ஏன் இந்த திடீர் இருட்டு?
மூளைக்கு செல்லும் தமனியில் இரத்தம் மெதுவாக செல்வதால் இந்த தீடீர் இருள் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் காரணமாகவோ சர்க்கரைநோய் காரணமாகவோ இதய இரத்தக்குழாய்களின் உட்புறம் கொழுப்போ, கால்சியமோ படியலாம். படிந்துள்ள இவற்றிலிருந்து சிறு துகள் பிரிந்து சிலசமயங்களில் இரத்தத்தில் கலந்து போகலாம்.
இதயத்திலிருந்து இரத்தம் செல்லும்போது இந்த துகள்களும் இரத்தத்தில் கலந்து கண்ணுக்குள் செல்லலாம். இதனால் இரத்த ஓட்டம் சில விநாடிகள் தடைப்பட்டு இந்த இருள் ஏற்படுகிறது. பெரும்பாலும் ஒரு நிமிடத்தில் இருந்து 5 நிமிடங்கள் வரை இந்த இருட்டடைப்பு இருக்கலாம். இன்னும் சிலருக்கு 10 நிமிடங்கள் வரை நீடிக்கலாம்.
கழுத்து எலும்பு தேய்மானப் பிரச்சினையாலும் தலையில் அடிபடுவதாலும் பார்வை நரம்பில் ( Optic Nerve ) ஏற்படும் வீக்கத்தாலும்கூட இருளடைபார்வை ஏற்படலாம்..
எச்சரிக்கை மணி
ஒருவர் தனக்கு சில நிமிடம் பார்வை தெரியாமல் இருட்டாக இருந்தது சொன்னால் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு உடலில் வேறு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்று சோதித்து பார்க்க வேண்டும்.
பக்கவாதம் ஏற்படுவதற்குரிய எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொண்டு உடனடியாக மருத்துவமனை சென்று சோதித்துக் கொள்ள வேண்டும்.
பாதிப்புக்குள்ளானவர் சர்க்கரைநோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்க்குரிய சோதனைகளையும் செய்து கொள்ள வேண்டும். கண்ணிலும் விரிவான பரிசோதனை செய்து பார்வைநரம்பின் ஆரோக்கியத்தை சோதித்துக்கொள்ள வேண்டும். முழுமையான இரத்த பரிசோதனையும் தேவைப்படும்.
மைக்ரேன்- ஒற்றைத்தலைவலி பிரச்சினையிலும் தற்காலிக பார்வையிழப்பு போன்று பார்வை இருட்டடைந்து சிறிது நேரம் பொருட்கள் முழுமையாக தெரியாது. அப்படி அதுபோன்று அடிக்கடி பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களும் முழுமையான சோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
சாதாரணமாக சிலருக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வரும் என்று சொல்வார்கள். இருளடைபார்வை ஒரு நிலையற்ற பார்வையிழப்புதான். சாதாரண ஒன்றாக எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் அதில் மாறுபாடு தெரிந்து சில நிமிடங்கள் வரை நீடித்தால் ஏற்படுவதற்கான காரணத்தை முழுமையாக சோதனை செய்து வேறு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வது பார்வைக்கும் மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லதுதான்.
( நன்றி: இந்தக் கட்டுரைக்கு இருளடைபார்வை என்று பொருத்தமாய் பெயரிட்ட கவிஞர்.மகுடேசுவரன் அவர்களுக்கு. )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக