கைசுத்தம் எப்போதும் தேவைதானே!
உலக கைகழுவும் நாள் - அக்டோபர் 15
சிற்றூர் ஒன்றில் கண்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வினாடி- வினாப் போட்டி அது. கலந்துகொண்டவர்கள் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்கள். நிகழ்ச்சியில் கண்பாதுகாப்புடன் சுகாதாரம் தொடர்பான பிற செய்திகளையும் மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டிய / தெரிந்து கொள்ள வேண்டிய சில கேள்விகளும் கேட்கப்பட்டன. பார்வையாளர்களாக முதலாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களும் உட்கார்ந்திருந்தார்கள்.
நிகழ்ச்சியில் ஒரு கேள்வியைக் கேட்கும்போது ஒரு மாணவன் எழுந்து, இந்தக் கேள்விக்கு தனக்கு மட்டுமே விடை தெரியும் என்றும் வேறு யாருக்கும் தெரியாது என்றும் சொன்னான். வியப்பாக இருந்தது அவன் பேசிய தொனி. அவன் பேச்சில் ஓர் கர்வம் வேறு. இத்துணைக்கும் அவன் மூன்றாம் வகுப்பு. போட்டியிலும் அவன் இல்லை.
கேட்கப்பட்ட கேள்வி, ‘உலக கை கழுவும் நாள் ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது’ என்பதுதான். அவன் சொன்னதுபோலவே அவனுக்கு மட்டுமே ‘அக்டோபர் 15’ என்பது தெரிந்திருந்தது. எப்படி உனக்கு தெரியும் என்று கேட்டதற்கு, அந்த நாளில் தான் பிறந்ததாக சொன்னான். மேலும் தான் சாப்பிடும் முன் நன்றாக கைகளை கழுவிய பிறகே சாப்பிடுவதாகவும் சொன்னான். மகிழ்ச்சியாக இருந்தது அவன் சொன்னது. அந்த மாணவனைப்போல் எத்துணைபேருக்கு இந்தக் கைகழுவும் நாள் குறித்து தெரியும்? சாப்பிடும் முன் எல்லோருமே கைகழுவுகிறார்களா? சிந்தித்துப்பாருங்கள்.
சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டுமாம்
ஒரு முறை நான் வேலை பார்த்த சுகாதாரநிலைய தலைமை மருத்துவர் பணியாளர்கள் எல்லோரும் நின்று கொண்டிருந்தபோது ஒரு கேள்வி கேட்டார். ‘கைகளை நீங்கள் எல்லோரும் அடிக்கடி கழுவுகிறீர்களா? அதுவும் சாப்பிடும் முன் கழுவுகிறீர்களா?’ என்று. கழுவுகிறோம் என்று சிலர் சொன்னார்கள். சிலர் சோப் போட்டும், சிலர் வெறும் தண்ணீரில் கழுவுவதாகவும் சொன்னார்கள். ‘சோப்பு போட்டு என்றால் எப்படி கழுவுகிறீர்கள்? எவ்வளவு நேரம் கைகளை ஊற வைப்பீர்கள்?’ என்று கேட்டார். சோப்பு கொண்டு உடனே கழுவிவிடுவதாக சொன்னார்கள்.
துணி துவைக்கும்போது என்ன செய்கிறோம். துணிகளை சிறிது நேரம் சோப்பு நுரையில் ஊற வைக்கிறோம் இல்லையா ? அது போன்று சற்று நேரமாவது கைகளை ஊற வைத்த பிறகே கைகளை நன்றாகத் தேய்த்து கழுவ வேண்டும் என்றார். அதுதான் பயன் தரக்கூடிய சரியான முறையாகும். கழுவுவதே பெரிது. இதில் கைகளை ஊற வேறு வைக்க வேண்டுமா என்று கேட்கிறீர்களா?
‘கண்ணா, சாப்பிட வாடா’ என்றவுடன் ‘இந்தா வந்திட்டேன் என்று வேக வேகமாக ஓடி வந்து சாப்பாட்டுத்தட்டின் முன் உட்காரும் பிள்ளைகள்தானே இந்தக் காலத்துப் பிள்ளைகள். ‘போடா கைகளைக் கழுவிட்டு வாடா’ என்று சொன்னால் போனால்போகிறது என்று குழாயைத் திருகி ஒரு கையால் கைக்கு ‘தண்ணிக்காட்டிட்டு’ வேண்டுமானால் வருவார்கள். சிற்றூரில் என்றால் பாத்திரத்தில் இருக்கும் நீரில் கையை அத்திவிட்டு ஓடிவருவார்கள். இன்னும் சிலர் ‘கை டிரையாத்தானே இருக்கு ஒண்ணும் பிரச்சினையில்லையே அப்படியே சாப்பிடலாம்’ என்பார்கள். இதுதானே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வேலையின் இடையில் சாப்பிட நேரும்போது அப்படியே வந்து சாப்பாட்டில் கையை வைப்பவர்களும் இருக்கிறார்கள். ‘போடா கையைக் கழுவிட்டு வந்து சாப்பிடு’ என்று சொன்னபிறகு போய் கழுவி விட்டு வருவார்கள். இதில் என்ன பயன் இருக்கிறது? அதுதான் ஏற்கனவே கையில் இருக்கும் அழுக்கினையும் கிருமிகளையும் சாப்பாட்டில் திணித்தாயிற்றே!
திருமணம், விருந்து, கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளில் சாப்பிடுவதற்கு கூட்டம் அதிகமாக இருக்கும். அது போன்ற இடங்களில் சாப்பிடுவதற்காக அவசரப்பட்டு பலரும் கைகளை கழுவுவதே கிடையாது.
ஏன் கைகளைக் கழுவ வேண்டும்?
சாப்பிடும் முன் கைகளை கழுவுவதன் மூலம் வயிற்றுப்பிரச்சினைகளையும் வயிற்றுப்போக்கினையும், நிமோனியாவினையும் தடுக்கலாம். ஏன், சில சமயங்களில் இதன் மூலம் ஏற்படும் மரணத்தையும் தடுக்க முடியுமாம். மரணத்தில் இருந்து பாதுகாக்கிறது என்பதை அண்மைக்கால கரோனாதான் நமக்கு உணர்த்தி சென்றுவிட்டதே.
சோப்பு போட்டு கைகளை கழுவுவதே மிகச் சிறந்த வழி என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சோப் எளிதில் கிடைக்கக் கூடிய பொருள்தான். அதற்காக அதிக செலவும் செய்யவேண்டியதில்லை. இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாக்கப்படுகிறார்கள்.
கைகழுவுவதன் முக்கியத்தை உணர்த்துவதற்காக 2008-ல் நடைபெற்ற, முதல் உலக கைகழுவும் நாளில் ( First World Hand Washing Day ) 70 நாடுகளைச் சார்ந்த 120 மில்லியன் குழந்தைகள் கைகளை கழுவி விழிப்புணர்வு அடைந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் என் இனிய நண்பர் மரு.எஸ்.இளங்கோ, 15 ஆயிரம் மாணவர்களைக் கொண்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஒரே நேரத்தில் அனைவரையும் சோப் கொண்டு கைகளை கழுவ வைத்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த விழிப்புணர்வு இந்நாளில் நடைபெறுவதோடு நின்றுவிடக்கூடாது. பெற்றோரும், ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு கைகழுவுவதின் அவசியத்தை அடிக்கடி உணர்த்த வேண்டும்.
கைசுத்தம் எப்போதும் தேவைதானே!
அன்றாட அவசர உலகில் கைகளை சோப்புபோட்டு கழுவிவிட்டு சாப்பிடுவது என்பது கொஞ்சம் கஷ்டமான விசயம் என்று நினைக்கலாம். ஆனால் அது நம் நலவாழ்வில், நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. அதைத்தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தயக்கம் காட்டக்கூடாது. கரோனா காலத்தில் நாம் உயிர் காக்க கடைப்பிடித்தோம் என்பதை அவ்வளவு எளிதில் மறந்துவிடுவோமா! கைசுத்தம் எப்போதும் தேவைதானே! அதைத்தான் இவ்வாண்டு உலக கைகழுவும் நாளும் வலியுறுத்துகிறது.
--------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக