உலக கிட்டப்பார்வை விழிப்புணர்வு சிறப்புக் கட்டுரை ( மே 13 – 19 )
கிட்டப்பார்வையினை கட்டுப்படுத்தும் புதிய வகை கண்ணாடி
தலைமுறை இடைவெளியால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினை கிட்டப்பார்வை ( Myopia ). ஆமாம். முந்தைய தலைமுறையினர் செல்பேசியை பார்த்திராத காலம் அல்லவா! அன்று ஓடியாடி விளையாடி அல்லவா மகிழ்ந்தார்கள்! சிந்தித்துப் பாருங்கள். இன்றைய குழந்தைகள் அளவு அன்றைய பிள்ளைகளுக்கு பார்வைபிரச்சினை இல்லை. கண்ணாடியும் இந்த அளவுக்குப் போடவில்லை.
ஆனால் இப்போது? எந்நேரமும் செல்லும் கையுமாக அறைக்குள்ளேயேத்தானே முடங்கிக் கிடக்கிறார்கள். நேருக்கு நேராய் பார்த்து பேசுவது என்பதே இல்லையே. டிஜிட்டலில் சமூக வலைதளங்கள் மூலமாகத்தானே செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கிறார்கள்.
80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் நாளொன்றுக்கு 4 மணி நேரத்திற்கும் அதிகமாக செல்போனில் செலவிடுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சிறுபிள்ளைகளும் அப்படித்தான். செல்போனில் அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படும் வாழ்வியல் பிரச்சினைகளில் ஒன்று கண்ணில் ஏற்படும் கிட்டப்பார்வை (Myopia) பிரச்சினை.
கிட்டப்பார்வையைப் பொறுத்தவரையில் குழந்தைப்பருவத்திலேயே கண்டறிய வேண்டியது முக்கியம். கண்பார்வை சரியாகத் தெரியாவிடில் பாடங்களை சரியாகப் படிக்க முடியாது. கற்பதில் பெரும்பகுதி பார்ப்பதன் மூலம்தான் நடைபெறுகிறது என்பது பலருக்குத் தெரியவில்லை. பார்வை தொடர்ந்து தெளிவாக இல்லாவிட்டால் பிள்ளையால் தெளிவான பார்வை-காட்சியை உணர முடியாது. கல்வியில் பின் தங்க நேரிடும். அறிவுசார் குறைபாட்டிற்கும் வழிவகுத்துவிடலாம்.
மூளையின் சரியான வளர்ச்சியைப் பொறுத்து நலமான பார்வை அமையும். சில சமயங்களில் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு கண்ணின் வளர்ச்சியைப் பாதித்து பார்வையும் பாதிக்கலாம்.
நம்முடைய நவீன வாழ்க்கை அனைத்துமே செயற்கை ஒளியில்தான். படிப்பதாகட்டும், செல்போன், ஐபேட், கிண்டில் போன்ற டிஜிட்டல் சாதனங்களாகட்டும் எல்லாம் செயற்கை ஒளியில்தான். அதுவும் அதிக ஒளி அடர்வில். அதாவது அதிக contrast-ல்.
செயற்கைத் திரைகளைப் பார்க்கும்போது அதிக பிரகாசமான ஒளியில் பார்க்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த பிரகாசமான ஒளியில் நீண்ட நேரம் தொடர்ந்து பார்ப்பது கிட்டப்பார்வையைத் தூண்டுகிறது.
ஒளி அடர்வும் கிட்டப்பார்வையும்
எந்த ஒரு படமும் தெளிவாக இருந்தால்தான் நம்மால் பார்க்க முடியும். இல்லாவிடில் பார்க்க விருப்பப்பட மாட்டோம். அதிக பிரகாசமான ஒளி எனும்போது contrast – அதாவது ஒளி அடர்வும் அதிகமாக இருக்கும். இந்த ஒளி அடர்வு (contrast) நமக்கு தெரிந்த ஒன்றுதான். தெளிவான பார்வைக்கு முக்கியமானதுங்கூட. நாம்கூட சொல்வோமே. இந்தப் படத்தில் contrast குறைவாக இருக்கிறது. இன்னும் contrast ஐக்கூட்ட வேண்டும் என்று.
இந்த ஒளி அடர்வுக்கும் (contrast) கிட்டப்பார்வைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கிட்டப்பார்வை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதிக ஒளி அடர்வினை விழித்திரை உணரும்போது விழிக்கோளம் நீட்சிக்கு வழிவகுக்கிறது. எனவே இந்த ஒளி அடர்வினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கிட்டப்பார்வை ஏற்படுவதைத் தடுக்க முடியும். கட்டுப்படுத்தவும் முடியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.
கிட்டப்பார்வையினைக் கட்டுப்படுத்த பல்வேறு அணுகுமுறைகள் ஆய்வில் இருக்கின்றன. அதில் ஒன்றான டாட்-DOT ( Diffusion Optics Technology ) வகை கண்ணாடி என்ற புதிய தொழிற்நுட்பம் 4 ஆண்டுகால ஆய்வுக்குப்பின் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
டாட் கண்ணாடி-எப்படி வேலை செய்கிறது?
சூழலியல் காரணமும், செயற்கைத்திரைகளைத் ( டிஜிட்டல் திரைகள் ) தொடர்ந்து நீண்ட நேரம் பார்ப்பதுமே கிட்டப்பார்வை ஏற்படுவதற்கான காரணமாக ஆய்வுகள் தொடர்ந்து புலப்படுத்தி வருகின்றன. அதிக ஒளி அடர்வு விழிக்கோளத்தை நீட்டிக்கச் செய்வதாக கருதப்படுகிறது. எனவே கண்விழித்திரை ஏற்பிகளுக்கிடையே contrast – ஒளி அடர்வைனை குறைக்கச் செய்வதே இந்த டாட் - DOT லென்சின் முக்கிய வேலை.
பரவல் ஒளியியல் தொழிற்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளி அடர்வினை மாறுபடுத்தும் தனித்துவமான முறையில் செயல்படுகிறது. கண்ணுக்குள் நுழையும் ஒளிக்கதிர்களை சிதறடிக்கச் செய்து விழித்திரையில் விழுவதற்கு முன் ஒளி அடர்வினைக் குறைக்கச் செய்கிறது. குறைந்த ஒளி அடர்வு பார்வை அமைப்பினை பலகீனமாகவே தூண்டுகிறது.
அதற்கேற்ப இந்த டாட் லென்சு வடிவமைக்கப்பட்டுள்ளது. மையப்பகுதி தெளிவான ஒளி ஊடுருவும் பகுதியினைக் கொண்டுள்ளது. இதன் வழியாக குழந்தையால் தெளிவாகப் பார்க்க முடியும். சுற்றிலும் உள்ள சிகிச்சை மண்டலபகுதியில் ஒளி விலகல் அடைய முடியாத ஆயிரக்கணக்கான நுண்புள்ளிகள் கொண்ட சிதறடிக்கும் பகுதி இருக்கிறது. இதன் வழியாக செல்லும் எந்த ஒளியையும் மென்மையாக சிதறடித்து அதன் மூலம் ஒளி அடர்வினை மாற்றியமைக்கிறது. இந்த நுண் ஒளிச்சிதற்றிகளின் அகலம் ஒரு மில்லிமீட்டரில் பத்தில் ஒரு பங்குதான். விழித்திரைக்குள் செல்லும் ஒளிக்கதிரின் ஒளி அடர்வினைக் குறைப்பதே அதன் வேலை. இந்த நுண் ஒளிச்சிதற்றி வழியாகவும் குழந்தையால் நன்றாக பார்க்க முடியும். கண்ணாடியின் எந்த பகுதியின் வழியாகவும் குழந்தையால் நன்றாக பார்க்க முடியும் என்பது முக்கியமான செய்தி. இந்த சிகிச்சை மண்டலபகுதி பார்வையைப் பாதிக்காது.
விழித்திரையின் புறப்பகுதியில் ( Peripheral ) விழும் பார்வை சமிக்ஞைகள்தான் விழிக்கோளத்தை அதிக அளவில் தூண்டச் செய்கின்றன. இயல்பான கண்ணைப்பொறுத்த வரையில் இயற்கை வெளிச்சூழலில் தொலைதூரக் காட்சிகள் பெரும்பாலும் விழித்திரையின் புறப்பகுதியில்தான் விழுகின்றன. அதற்கேற்ப இந்த டாட் லென்சின் புறப்பகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சாதாரணவகை கண்ணாடிகள், காண்டக்ட் லென்சுகள் கிட்டப்பார்வைக்கு தெளிவான பார்வை கொடுக்கின்றன. என்றாலும் கிட்டப்பார்வை ஏற்படுவதற்குரிய காரணத்தை சரி செய்யும் உத்திகள் அவற்றில் இல்லை.
நம்முடைய நோக்கம் கிட்டப்பார்வைக்குத் தீர்வு. அதே சமயத்தில் உயர்கிட்டப்பார்வைக்கு ( Myopia ) செல்லவிடாமல் அதன்மூலம் கடுமையான பக்கவிளைவுகளைத் தடுத்து குழந்தைகளின் வாழ்க்கைத்தரத்தை பேணிக்காப்பது.
தற்போதைக்கு குழந்தைகள் செல்போன் பார்ப்பதையோ, எழுதுவதையோ, படிப்பதையோ குறைத்துக் கொள்ள முடியாது. கல்விக்காக டிஜிட்டல் சாதனங்களைப் பார்ப்பதற்குரிய தேவை அதிகமாக இருப்பதால் உடனே அதைக் குறைப்பது சாத்தியமில்லை.
இந்தநிலையில்தான் இந்த புதிய அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு பயன்கள். கிட்டப்பார்வைக்கு லென்சு பவர் மூலம் தெளிவான பார்வை. அதே சமயம் கிட்டப்பார்வை லென்சு பவர் மேலும் உயர்வதையும் தடுக்கிறது.
குழந்தையின் கண்ணாடி பவர் படிப்படியாக உயர்ந்து நாளடைவில் -6 க்கு செல்வதாக வைத்துக்கொள்வோம். கிட்டப்பார்வை கட்டுப்படுத்தும் சிகிச்சை மூலம் இந்த பவரை பாதிக்கும் கீழாக குறைக்க முடியும்.
இந்த டாட் கண்ணாடியினை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தும்போது விழிக்கோளம் நீட்சி அடைவது நன்றாக மட்டுப்படுவதகாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. டாட் கண்ணாடி தற்போது 6 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நல்ல பலனைத் தருவதாக சொல்கிறார்கள். சீனா, இஸ்ரேல், நெதர்லாந்து போன்ற சில வெளிநாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் இந்த டாட் கண்ணாடி விரைவில் இந்தியாவிலும் பயன்பாட்டிற்கு வரலாம். நம் பிள்ளைகளும் பயன்பெறட்டும்.
மு.வீராசாமி
மதுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக