அரைச் சர்க்கரை
குறுந்தொடர்
வாரம் 18
21 ஆம் நூற்றாண்டின் முக்கியமான நோயாக நீரிழிவு நோயைக் குறிப்பிடுகிறது லான்செட்டின் தலையங்கம் ஒன்று. இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அதிகரிக்கும் உடல் பருமன், பணிச்சுமை, சுற்றுப்புற சூழல் ஆபத்து, புகையிலை மற்றும் மது பயன்பாடு, குறைந்த உடல் உழைப்பு போன்றவைகளை அது பட்டியலிடுகிறது.
இந்தியாவில் மக்கள்தொகையில் 11% பேருக்கு சர்க்கரைநோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 15.3 % பேர் சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில் ( Pre Diabetic ) நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்கனவெ பார்த்தோம்.
அதன்படி பார்க்கையில் மக்கள் தொகையில் 101.3 மில்லியன் பேருக்கு சர்க்கரைநோய். சர்க்கரைக்கு முந்தைய நிலையில் ( Pre Diabetes stage ) இருப்பவர்கள் 136 மில்லியன்பேர்.
ஏற்கனவே சர்க்கரைநோய் உறுதி செய்யப்பட்டவர்களைப் பொறுத்த வரையில் அவர்களிடையே வாழ்க்கையைப் பாதிக்கும் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படாமல் தடுப்பது முக்கியம்.
இன்னொருபுறம் சர்க்கரைக்கு முந்தைய நிலையில் இருக்கும் 136 மில்லியன்பேரையும் சர்க்கரைநோய் வராமல் தடுப்பதற்குரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதும் முக்கியம். இது குறித்த விழிப்புணர்வு பணியை மேற்கொள்வது அவசியம் என்கிறார் சென்னை சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர்.V.மோகன். ஏனெனில் சர்க்கரைநோய் கள ஆய்வின்போதே சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்களில் கணிசமானோர் 6 மாதத்துக்குள்ளாகவே சர்க்கரைநோய் நிலையை அடைந்துவிட்டதாக சொல்கிறார். எனவே தேவையெல்லாம் உடனடி விழிப்புணர்வுதான்.
சர்க்கரைநோய் பற்றி பேசும்போது கிளைசெமிக் குறியீடு ( Glycemic Index ) என்ற சொல் அடிக்கடி பயன்படுத்துவதை பார்க்கலாம். கிளைசெமிக் குறியீடுக்கும் சர்க்கரைக்கும் உள்ள முக்கியமான தொடர்பு குறித்து அண்மையில் ஆங்கில இந்து நாளிதழில் டாக்டர்.வி.மோகன் எழுதிய கட்டுரை நிறைய செய்திகளைத் தெரிவிக்கிறது. டாக்டர்.வி.மோகனின் ஆய்வு குறித்த விரிவான அலசலை ஆங்கில இந்து நாளிதழின் ரம்யா கண்ணனும் நாளிதழில் பதிவு செய்திருக்கிறார்.
கிளைசெமிக் குறியீடு என்பது வேறு ஒன்றும் இல்லை. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிப்பதற்கான உணவின் பண்புகளைக் குறிக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட்டின் தரத்தை அளவிடுகிறது. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த எந்த மாதிரி மாவுச் சத்து ( கார்போஹைட்ரேட்) உணவுகளை உண்ண வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய உதவும் ஒரு வழிகாட்டி என்று சொல்லலாம்.
சர்க்கரை, வெள்ளை அரிசி, மைதா, உருளை, இனிப்பு பானங்கள், சோள அவல் போன்றவை அதிக கிளைசெமிக் குறியீடு கொண்டவை.
குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவுகள் என்று பார்த்தால் ப்ரெளன் அரிசி, ஓட்ஸ், தானியங்கள், பருப்புகள், ஆப்பிள், கொய்யா , கீரை, கத்திரி, ப்ரோகோலி போன்றவைகளைச் சொல்லலாம். குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவுகளை உண்ணுவதால் அவை மெதுவாக குளுக்கோஸாக மாறுகின்றன. நீண்ட நேரம் வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றன.
அதிக கிளைசெமிக் குறியீடு உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் இதய நோய்கள் அதிகரித்துள்ளதாக அணமை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவுப் பொருட்களை சாப்பிடுவது, போதுமான உடற்பயிற்சி செய்துகொள்வது என வாழ்க்கைமுறை மாற்றத்தின் மூலம் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க முடியும். இதன் மூலம் அதிகரித்து வரும் இதய நோய்களை கட்டுப்படுத்தி பக்கவிளைவுகளைத் தடுக்க முடியும் என்று இந்த ஆய்வில் பங்குகொண்டவர்களில் ஒருவரான டாக்டர்.வி.மோகன் தெரிவிக்கிறார்
2045 வாக்கில் அதிகரித்து வரும் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து செலவில் உலகளாவிய நீரிழிவு தொடர்பான மருத்துவ செலவு 1045 டாலர் பில்லியனாக அதிகரிக்குமாம். இது வேண்டுமானால் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனைக் குறைக்கவும் செய்யலாம். ஆனால் மருத்துவர் ரூபா மரியாவும், அரசியல் பொருளாதார நிபுணர் ராஜ்படேலும் சொல்வது போல், நலமற்ற சமுதாயத்திற்கு தீர்வு மாத்திரைகள் அல்ல, வாழ்வியல் முறைகளை மறுமதிப்பீடு செய்வதுதான்.
சர்க்கரைநோய் மருத்துவம் வளம் கொழிக்கும் மிகப்பெரிய மருத்துவ வர்த்தகம். இந்த நிலையில் உலக சுகாதார சமூகம் எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பொறுத்துதான் வரும் நாட்களில் மக்களின் ஆரோக்கியமும் ஆயுட்காலமும் அமையும். இல்லையேல் அரைச் சர்க்கரையும் போய் சர்க்கரை இல்லாமல் கேட்கக்கூடிய நிலைதான் அனவருக்கும் ஏற்படும்.
அரைச் சர்க்கரை நிறைவடைந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக