அரைச் சர்க்கரை
குறுந்தொடர்
கடந்த 15 வாரமாக பார்த்தது சர்க்கரைநோய் பற்றிய வரலாற்று செய்திகள் .
இனி இன்று...
வாரம் 16
காய்ச்சலுக்கோ வயிற்றுப் போக்குக்கோ மாத்திரை சாப்பிட்டால் மூன்று, நான்கு நாட்களில் சரியாகி விடுவதுபோல் சர்க்கரைநோயும் சரியாக வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். வாழ்க்கை முழுவதும் போராட வேண்டி இருக்கிறதே என்று அங்கலாய்க்கிறார்கள்.
அதைச் சாப்பிடாதே இதைச் சாப்பிடாதே என்றால் எதைத் தான் சாப்பிடுவது என்று மருத்துவர்கள்மேல் கோபம் கொள்கிறார்கள். வாழ்வதே சாப்பிடுவதற்காகத்தானே. வாய்க்கு ருசியாக இப்போது சாப்பிடாவிட்டால் எப்படி? பிறகு எப்போது சாப்பிடுவது?
ஆனால் வேறு வழியில்லை. கட்டுக்குள் வைத்துத்தான் ஆக வேண்டும். இன்றல்ல. ஆதியிலிருந்தே இதைத்தான் சொல்லி வருகிறார்கள்.
இன்சுலின். சர்க்கரைநோய்க்கான அருமருந்து. மந்திர மருந்து. கண்டுபிடித்திருக்காவிட்டால்...ஒரு நிமிடம் யோசிக்க வேண்டி இருக்கிறது. கண்டுபிடித்த பாண்டிங் ஒரு சர்க்கரை நிபுணரோ அல்லது அகச்சுரப்பியியல் நிபுணரோகூட கிடையாது. அட வியப்பாக இருக்கிறதா. ஆம். அவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர்.
இன்னொரு வியப்பு. இன்சுலின் கண்டுபிடிப்பதற்கு முன் அவருக்கு ஏற்பட்ட வித்தியாசமான கனவு. இரவு பாதித்தூக்கத்தில் அவருக்கு கனவில் தோன்றியதை அரைத்தூக்கத்தில் நோட்டில் கிறுக்கி வைக்க மறுநாள் பார்த்தால் இன்சுலின் கண்டுபிடிப்பதற்கான வழிமுறையாக இருந்திருக்கிறது அது. அதை செயல்படுத்த அதுவே பின்னர் இன்சுலினானது வரலாறு. இப்படி வியப்புக்கள் கொண்டதாக இருக்கிறது சர்க்கரைநோயின் வரலாறு.
சரி. இன்றைய சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் v.மோகன் சர்க்கரைநோயினை கட்டுக்குள் வைக்க வழி சொல்கிறார். நினைவில், எளிமையாக வைத்துக் கொள்ளும்படியாக. அந்த சூத்திரம் என்னவென்று பார்ப்போமா!
ஏ.பி.சி.டி ( ABCD ) என்ற பார்முலா. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஏ.பி.சி.டி என்ற தாரக மந்திரத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டே இருந்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வருவது உண்மை. அது என்ன ஏ.பி.சி.டி?
( A) ஏ. ஹெச்.பி.ஏ.1.சி. ( HbA1C) பொதுவாக மூன்று மாத சர்க்கரை அளவின் சராசரி அளவு 6 -க்கு கீழ் இருக்க வேண்டும் . சர்க்கரைநோய்க்கு மருத்துவம் எடுத்துக் கொள்பவர்களுக்கு 7க்கு கீழ் இருந்தால் நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லலாம்.
( B ) பி. Blood Pressure . இரத்த அழுத்தம் இயல்பான அளவில் கட்டுக்குள் இருக்க வேண்டும்.
( C ) சி. Cholesterol கொழுப்பினை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம்.
( D ) டி. Discipline. அதாவது கட்டுப்பாடு. இதுதான் இருப்பதிலேயே மிகவும் முக்கியம். ஆனால் பலருக்கும் கடினமானதுங்கூட. அதாவது நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மருத்துவம் இவற்றினை மருத்துவரின் அறிவுரைப்படி முறையாக சரியாக தவறாது கடைப்பிடிப்பது. ஆனால் பலரும் இதை பின்பற்றுவதில்லை. அதிலும் மருத்துவர்கள் அதிகம் வலியுறுத்தி சொல்வது நடைப்பழக்கத்தைத்தான். வரலாற்றுக் காலத்தில் இருந்தே சொல்லிவருவதும் இதைத்தான். சோம்பேறித்தனம், அலட்சியம், நேரமின்மை போன்ற காரணங்களால் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. யாரிடமாவது சொல்லிப் பாருங்க. ‘எங்க நேரங்கிடைக்குதுங்க. வேலை சரியாப் போய்டுது. அப்புறம் எங்குட்டு வாக்கிங்க்லாம் போறது.’ என்ற ரீதியில்தான் பதில் வரும் அவர்களிடமிருந்து.
தேவை இல்லாததுக்கு எல்லாம் நேரம் கிடைக்குமாம். உடல் நலத்துக்கென்று கொஞ்சம் நேரம் கிடைக்காதாம்.
பொதுவாக என்ன சாப்பிடவேண்டும்- என்ன சாப்பிடக்கூடாது என்பது குறித்த தெளிவு பலரிடம் இல்லை. அதை இப்படிச் சொல்லலாம். அவரவர்களுக்கு தேவையானதை நியாயப்படுத்திக் கொண்டு சாப்பிட்டுக் கொள்வார்கள். இதையெல்லாம் சாப்பிடக்கூடாதே என்று அவர்களிடம் சொல்லிப் பாருங்கள். அந்த டாக்டருக்கு சரியாகத் தெரியவில்லை. யூ டியூப்பில் இப்படி சொன்னார்கள். வாட்சப்பில் சாப்பிடலாம் என்று வந்தது. ஒன்றும் செய்யாது என்று சமாளிப்பார்கள்.
தொடரும்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக