அரைச் சர்க்கரை
குறுந்தொடர்
சர்க்கரை நோய் பற்றிய முக்கிய வரலாற்று செய்திகள்
வாரம் 14
நீரிழிவுநோயினை நன்கு புரிந்த நோயாளி நீண்ட காலம் வாழ்கிறார்.
எல்லியட்.பி.ஜோஸ்லின்.
அமெரிக்காவைச் சார்ந்த எலியட்.பி.ஜோஸ்லின் சர்க்கரை நோயில் சிறப்பு பயிற்சி பெற்ற முதல் அமெரிக்க மருத்துவர் என்ற பெருமைக்குரியவ்ர். சர்க்கரைநோய் குறித்து இவர் பேசி வந்த கருத்துக்களில் இரண்டு முக்கியமானது.
ஒன்று. 1920 காலகட்டத்திலேயே நோயின் தீவிரத் தாக்கத்தை உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று வலியுறுத்தி வந்தது.
இன்னொன்று. நோயாளிக்கு நலக்கல்வி போதிப்பதே முதலாவது சிகிச்சையாக இருக்க வேண்டும் என்பது. ( Health Education )
வருமுன் காப்போம் என்று இன்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். நோய் வராமல் தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி வருகிறோம். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பே அவர் பேசியும், செய்தும் வந்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு அதுதானே முக்கியம். நோய் ஏற்படாமல் தடுப்பது அல்லது நோயின் தீவிரம் அடையாமல் தடுப்பதே அவருடைய முதன்மையான நோக்கமாக இருந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து வலியுறுத்தியும் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.
சர்க்கரை நோயாளிகளின் பதிவேட்டினை ( Diabetes Registry ) உலகிலேயே முதலாவதாக பராமரித்து வந்திருக்கிறார். 1916-ல் தன்னுடைய சிகிச்சையின் அனுபவ அடிப்படையில் நீரிழிவுநோய் குறித்த முதல் புத்தகத்தை வெளியிட்டார்.. இந்த புத்தகம் அவருடைய வாழ்நாளிலேயே 10 பதிப்பினைக் கண்டது. உலக அளவில் நீரிழிவு குறித்து பேசக்கூடிய தலைவராய் இருந்திருக்கிறார்.
அடுத்து அவர் வெளியிட்ட நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்குமான நீரிழிவுநோய் குறித்த விளக்கக் கையேடு 14 பதிப்புக்களைக் கண்டது.
கார்போஹைட்ரேட் உணவைக் குறைத்தல், உடற்பயிற்சி, சர்க்கரையினை அடிக்கடி சோதித்து அதற்கேற்றாற்போல் இன்சுலின் அளவினை மாற்றுவதன் மூலம் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கமுடியும். இதன் மூலம் பக்க விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்தார். ஆனால் இது பல காலம் பிற அகச்சுரப்பியல் நிபுணர்களால் விவாதத்துக்கு உட்பட்டாலும் அவருடைய இந்த ஆய்வு அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்றும் இதைத்தானே மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார்கள்.
நீரிழிவுநோய் குறித்த நீரிழிவுநோயின் ‘பைபிள்’ என்றழைக்கப்படும் அவருடைய Joslin’s Diabetes Mellitus புத்தகம் தற்போது 14ஆவது பதிப்பினைக் கண்டுள்ளது. மருத்துவ மாணவர்களிடையே பிரசித்தம்.
நீரிழிவுநோய் ஒரு பொதுசுகாதார பிரச்சினை என்று முதலில் பேசியது இவரே. அவர் இன்சுலினைக் கண்டுபிடிக்கவில்லையேத் தவிர 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவுநோய் ஆய்வு சிகிச்சையில் ஈடுபட்டு உலக அளவில் அது குறித்து பேசக்கூடிய அதிகாரப்பூர்வ மருத்துவராக தன்னிகரற்று விளங்கினார் என்பதுதான் வரலாறு.
தொடரும்
நன்றியுடன் உதவியவை: 1. டாக்டர்.வி.மோகன் எழுதிய ‘Making excellence a Habit’& ‘Banding, Bose And Beyond’ புத்தகங்கள்.
2. Indian Medical Gazette.
3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக