திங்கள், 8 ஏப்ரல், 2024

அரைச் சர்க்கரை

 

அரைச் சர்க்கரை

குறுந்தொடர்

வாரம் 15

 மருத்துவர் நோயாளி.

அதென்ன மருத்துவர் நோயாளி.  முரணாக இருக்கிறதா?

ஆமாம் அவர் ஒரு டாக்டர். ஆனால் அவரும் ஒரு சர்க்கரை நோயாளிதான். வாழ்நாள் முழுவதும் கிராமப்புற மக்களுக்காக சேவை செயதவர். அரசுப் பணிக்கு வருவதற்கு முன்னும் சரி, வந்த பிறகும் சரி.

மருத்துவருக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர். அவருக்கு 50 வயதுக்கு மேல் நீரிழிவுசிதைவு இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவம் செய்து கொண்டு வருகிறார். தற்போது 75 வயது.

எத்துணையோ நோயாளிகளுக்கு சர்க்கரைநோய்க்கு மருத்துவம் செய்தவர்தான். அவரிடம் ஒரு மருத்துவராகவும் நோயாளியாகவும் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். சர்க்கரை நோயாளிக்கு என்ன என்ன அறிகுறி இருக்குமோ அத்துணையும் இருந்ததாகவும் ஆனால் அன்றாடம் பணிச்சுமை காரணமாக அது குறித்து உடனடியாக கவனிக்க முடியவில்லை என்றும் சொன்னார். நாம் இல்லை என்றால் எந்த வேலையும் நடக்காது என்ற நினைப்புதானே எல்லாரையும் பாழாய்படுத்துகிறது. ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் இப்படியே ஓடிவிட்டதாம். வேலை, வேலை தான் எந்நேரமும்.

வேலையில் கடும் பிரச்சினை அதனால் மன உளைச்சல், சோர்வு. இதுதான் காரணம் என்கிறார். மன அழுத்தத்தால் சர்க்கரை உயருமா என்ன? சென்னை சர்க்கரைநோய் சிறப்பு மருத்துவர் பத்மஸ்ரீ.டாக்டர் மோகன் என்ன சொல்கிறார்?.

600 க்குமேல் இரத்த சர்க்கரையுடன் வந்த அந்த அம்மையாருக்கு சிகிச்சை பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இன்சுலினாலும் பயனில்லை. சர்க்கரை குறையவே இல்லை. மருத்துவருக்கே ஒன்றும் பிடிபடவில்லை. ஒருவாரம் மருத்துவமனை சிகிச்சையில் பெரிய முன்னேற்றம் இல்லையாம். ஆறு மாதம் கழித்து அவர் மீண்டும் வந்தபோது இவருக்கா சர்க்கரை அதிகமாக இருந்தது? என்று வியக்கும் அளவுக்கு சர்க்கரை இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லையாம். இன்சுலின், மாத்திரைகள், தீவிர உணவுக்கட்டுப்பாடு, தீவிர மருத்துவமனை கண்காணிப்பு, சிகிச்சை என போராடிய அவரா இவர்? இந்த நிலையில் அந்த அம்மையார் சொன்னதுதான் டச்சிங்க். 

“மன அழுத்தம் அதிகமாக  ‘ஓவர் ஸ்ட்ரெஸ்ஸா இருக்கும்போது சர்க்கரை கூடுது சார். வீட்டில் அப்போது வீட்டுக்காரருடன் ஒரே பிரச்சினை. இப்போ பிரச்சினை சரியாயிடுச்சு. பிரச்சினை தீர்ந்த பிறகு நிம்மதியாக இருக்கு சார். நாங்க சந்தோசமாக இருக்கிறோம். ஸ்ட்ரெஸ் எதுவும் இல்லை. அதுதான் சர்க்கரை நார்மலா இருக்கு”.

உண்மையிலேயே அவர் புத்திசாலிதான். தன்னுடைய சர்க்கரை அதிகரிப்புக்கு மன அழுத்தம் ஒரு முக்கியமான காரணம் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்திருப்பது வியப்புக்குரிய செய்தி. இதை சென்னை பிரபல சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர். V. மோகன்  ‘Making Excellence – A Habit’  என்ற தன்னுடைய புத்தகத்தில் தெளிவாக விளக்கி இருக்கிறார். 


 

“கடுமையான மன அழுத்தம் உடலின் வளர்சிதை மாற்ற சமநிலையினை பாதித்து உயிர்வேதியியலை கட்டுப்பாடற்ற நிலைக்கு கொண்டு செல்கிறது. கடுமையான மன அழுத்தத்தின்போது கார்டிசால், அட்ரீனலின் போன்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகப்படியாக வெளியாகின்றன. ஒருவரது உடலில் போதிய அளவு இன்சுலின் சுரந்தாலும்கூட இன்சுலின் எதிர்ப்பு கொண்ட இந்த ஹார்மோன்களால் அவை பயனற்றதாகவே இருக்கும்.

மன அழுத்தம் குறையும்போது இந்த எதிர் ஒழுங்குமுறை ஹார்மோன்களின் தாக்கமும் குறைவதால் இன்சுலினின் செயல்பாடு மீண்டும் ஒழுங்குபடுத்தப்பட்டு பயன்பாடு சீராகி சர்க்கரை கட்டுக்குள் வருகிறது.

 

ஓவர் ஸ்ட்ரெஸ் ஓவர் ஸ்ட்ரெஸ் என்று சொல்பவர்கள் விடுபட எளிமையான வழி? அதான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பிரகாஸ்ராஜ் வழிகாட்டி இருக்கிறாரே.

தொடரும்

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய  ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக