அரைச் சர்க்கரை
குறுந்தொடர்
சர்க்கரை நோய் பற்றிய வியப்பூட்டும் தெரிந்து கொள்ள வேண்டிய
வரலாற்று செய்திகள்
வாரம் 13
ஆறு சிறந்த மருத்துவர்கள்:
சூரிய ஒளி, நீர், காற்று,
ஓய்வு, உடற்பயிற்சி
மற்றும் உணவு
· கெளதம புத்தர்
சர்க்கரைநோய் அன்றைய காலகட்டத்தில் இருந்தே தொடர் பிரச்சினையாக இருந்து வருவதை பதிவுகள் மூலம் அறிந்து வருகிறோம். இதுவரை பார்த்த வரையில் அதற்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பால் சிகிச்சை, ஆவாரம்பூ சிகிச்சை, நாவல்பழ சிகிச்சை, போன்றவற்றை கொடுத்து சிகிச்சை செய்ய முயன்றிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தோம். இது தவிர பெப்சின், கொடின் போன்ற மருந்துகளையும்கூட பயன்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் இன்சுலின் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு மேலே செல்வோம்.
டாக்டர்.JP.போஸ்.
யார் இந்த போஸ். சர்க்கரைநோய் வரலாற்றில் அதிகம் அறியப்படாமலேயே இருந்துவிட்டவர்.
டாக்டர்.J.P. போஸ் கல்கத்தாவில் நீரிழிவு பணியைத் துவக்கிய அதே காலகட்டத்தில் தான் கனடாவில் அந்த மிக முக்கிய வரலாற்று நிகழ்வு நிகழ்ந்ததாக டாக்டர்.மோகன் தெரிவிக்கிறார். சர்க்கரை நோயாளிகளுக்கான அந்த நலம் தரும் சொல் என்ன என்பது அடுத்த சில பாராக்களில் தெரிந்துவிடும். இந்தியாவில் சர்க்கரைநோய் கட்டுப்படுத்துவதில் போஸினுடைய பங்கு மகத்தானது என்று மருத்துவர் வி. மோகன் புகழாரம் சூட்டுகிறார்.
காஷ்மீர் டாக்டர்.A.மித்ராவைப் பற்றி பார்க்கும்போது டாக்டர். மித்ராவின் பெயரில் நீரிழிவுநோய்க்கான ஆராய்ச்சி உதவித்தொகை ஏற்படுத்தப்பட்டதையும் அவருடைய இறப்புக்குப் பின் அவருடைய மனைவி துவக்கினார் என்பதையும் பார்த்தோம்.
அந்த உதவித்தொகையினை முதலாவதாக பெற்றவர் டாக்டர் .J.P.போஸ்.
கனடாவில் நிகழ்ந்த அற்புதம்
இந்தியாவில் கல்கத்தா மருத்துவர் JP.போஸ் சர்க்கரைநோய் ஆய்வில் தீவிர கவனம் செலுத்திய அதே காலகட்டத்தில் கனடாவில் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வுகள் சர்க்கரைநோய் சிகிச்சையில் ஏற்பட்டன. 100 ஆண்டுகளுக்கு முன் 1921-ல் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு சர்க்கரை நோய் சிகிச்சையில் மகத்தான சாதனை நிகழ்ந்தது. மருத்துவத்தில் மிகப்பெரிய புரட்சி அது. இளம் மருத்துவரான பிரெட்ரிக் பாண்டிங், மருத்துவ மாணவரான சார்லஸ் பெஸ்ட், டொரொண்டோ பல்கலைகழக உடற்கூறியல் பேராசிரியர் JJ.மாக்லியோட் மற்றும் வேதியியலாளர் ஜேம்ஸ் பெர்ட்ராம் கூலிப்புடன் இணைந்து இந்த சாதனையினை நிகழ்த்தினார். இதற்காக பாண்டிங், மாக்லியோட் இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்தது.
உலகமெங்கும் மருத்துவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சர்க்கரைநோயாளிகள் பலரது மரணம் தவிர்க்கப்பட்டது.
இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் முதலில் பயன்படுத்த தொடங்கியது டாக்டர் போஸ்தான். இன்சுலின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, அதன் குணாதசியங்கள் என்ன, எப்படி பயன்படுத்துவது எப்படி பாதுகாப்பாக சேமித்து வைப்பது என்பதுடன் அவர் இன்சுலினை கொண்டு சிகிச்சை செய்த ஆய்வு விபரங்களையும் தெளிவாக முழுமையாக பதிவிட்டிருக்கிறார். (1923).
இன்சுலினின் ஆற்றல் பாதிக்காத அளவுக்கு குளிர் சேமிப்பின் அவசியம் குறித்து இந்தியா முழுவதும் மருத்துவர்கள் கருத்துக்களை அந்தக்காலக்கட்டத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வகை பிராண்ட் இன்சுலினின் ஒரு தொகுதி ( Batch ) மருந்துகள் மட்டும் ஆற்றல் குறைந்து காணப்படுவதாக இந்தியா முழுவதும் இருந்து பொது மருத்துவர்கள் கருத்து தெரிவித்த காரணத்தால் மருந்து சப்ளை செய்த லண்டன் நிறுவனம் மருந்துகள் அனைத்தையும் திரும்ப பெற்று இரண்டரை மாதம் தீவிர தரக்கட்டுப்பாடு ஆய்வுக்குட்படுத்தி ஆற்றல் இருப்பதை உறுதி செய்த பின்னரே மீண்டும் இந்தியாவுக்கு மருந்துகளை அனுப்பி வைத்திருக்கிறது.
தொடக்கத்தில் இன்சுலின் பற்றிய ஆற்றல் மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த பிரச்சினைகள் எழுந்தாலும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் உயிர் காக்கும் மருந்தாக இந்திய மருத்துவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோது அதற்கு எதிராக எப்படி கருத்துக்கள் பரப்பப்பட்டதோ அதே போன்று இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டபோதும் அன்று அதற்கு எதிராக கடுமையான பிரச்சாரங்கள் செய்ய்பட்டதாக வரவாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன
இன்சுலின் பயன்பாட்டுக்கு வந்த பிறகு இன்சுலின் சிகிச்சை பெறும் அனைத்து சர்க்கரைநோயாளிகளுக்கும் அடிக்கடியோ அல்லது சிலருக்கு தினமுமோ இரத்தத்தில் சர்க்கரை அளவு பார்க்க வேண்டிய தேவை அதிகரித்துவிட்டது. நகரப்பகுதிகளில் இதற்கான வசதி கிடைக்கின்ற போது கிராமப்பகுதியில் இரத்த பரிசோதனை பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இதனால் இன்சுலின் கொண்டு சிகிச்சை செய்வதில் மருத்துவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது. இந்த குறையினை போக்க கிராமப்பகுதிகளில் ஆய்வு செய்வதற்கென்று எளியமுறை பரிசோதனை ஒன்றினையும் டாக்டர் போஸ் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அது பயனுள்ளதாக இருந்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
இவருடைய பணிக்கு மேலும் பெருமை சேர்க்கிறது அண்மையில் டாக்டர். வி.மோகன் எழுதிய புத்தகமான , ‘Banding, Bose And Beyond’ .
தொடரும்
நன்றியுடன் உதவியவை: 1. டாக்டர்.வி.மோகன் எழுதிய ‘Making excellence a Habit’& ‘Banding, Bose And Beyond’ புத்தகங்கள்.
2. Indian Medical Gazette.
3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக