திங்கள், 4 மார்ச், 2024

அரைச் சர்க்கரை

 

                                                அரைச் சர்க்கரை

   சர்க்கரைநோய் பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சொல்லும் குறுந்தொடர்

வாரம் 10

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய் எனும் போதே அதன் சுவை தெரிந்து விடுகிறது. அதிலும் நேத்து வச்ச மீன் குழம்பு என்றால் சொல்லவே வேண்டாம்.

அரிசி இல்லாத உணவினை நினைத்துப் பார்க்க முடியுமா. சங்க காலத்தில் இருந்தே நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதுதானே.  ‘நெய்யிடை நல்லதோர் சோறும் என்று பெரியாழ்வாரும்  ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் என்று பாரதியும் சொன்ன சோறுதான் இன்று ரைஸாகவும் சாதமாகவும் மாறிவிட்டது.  இன்று  ஹோட்டல், திருமண விருந்து போன்ற இடங்களில் சோறு என்றால் கேட்கக்கூடாததை கேட்டுவிட்டதைப்போல்தானே பார்க்கிறார்கள்.  


 

சர்க்கரைநோய்  ஏன் ஏற்படுகிறது? அரிசி அதிகமாக சேர்ப்பதுதான் காரணமா? அதனால் இறப்புக்களும் அதிகமா? போன்ற செய்திகள், கருத்துப் பரிமாற்றங்களை அக்கால மருத்துவ இதழ்களில் பார்க்க முடிகிறது. சுவாரஸ்யமானவை மட்டும் இந்த வாரம்.

அன்று இந்தியா முழுவதுமே மருத்துவர்களுக்கு சர்க்கரைநோய் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம். மைசூரைச் சார்ந்தவர் மேஜர். டாக்டர் டி.ஜி.மாக்கன். சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவர். கல்கத்தா மற்றும் சென்னையில் அரிசியை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறதா என்ற அய்யம் அவருக்கு. (1885). அதற்கு டாக்டர் பவி, உணவில் கார்போஹைட்ரேட் சேர்ப்பதால் எவ்வாறு சர்க்கரை எற்படுகிறது என்பது பற்றியும் அதனை குறைப்பதன் மூலம் அது கட்டுப்படுவதோடு நோயாளி எவ்வாறு பழையபடி ஆரோக்கிய நிலைக்கு திரும்புகிறார் என்பது பற்றியும் சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

லக்னோ மருத்துவ கல்லூரி உடற்கூறியல் பேராசிரியராக இருந்த ஐரோப்பிய இந்திய மருத்துவ சேவை அலுவலர் டாக்டர் ஹெச்ஸ்டாட்.  ஐரோப்பியர்களைக் காட்டிலும் இந்தியர்களுக்கு சர்க்கரை பாதிப்பு  4 மடங்கு அதிகமாம். காரணம் சோறு அதிகமாக சாப்பிடுவதுதானாம். மருத்துவ ஆவணங்களைப்  பார்க்கும்போது அது தொடர்பான மருத்துவமனை உள்நோயாளிகளும் ( Hospital Inpatients)  அதிகம் என்கிறார்.

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மட்டும் அதிகமல்ல. அதனால் இறப்பும் அதிகம்தான் என்கிறார் கல்கத்தாவைச் சார்ந்த மருத்துவர் கைலாஷ் சந்திர போஸ். நீரிழிவினால் அதிகரித்து வரும் இறப்பு குறித்து  ஆய்வு செய்த இன்னொரு கல்கத்தா மருத்துவர் பி.சி.சென் கவலை தெரிவிக்கிறார்.

திருவாங்கூர் சுகாதாரத்துறை ஆணையர் டாக்டர். எஸ்.கிருஷ்ணமூர்த்தி அய்யர், சென்னை மற்றும் பெங்கால் மக்களின் உணவு பழக்கம் அவர்களிடையே சர்க்கரை நோய் உருவாக எப்படி காரணமாக இருக்கிறது என்பது பற்றி விரிவாக அலசி இருக்கிறார். மேலும் ஓடியாடி வேலை செய்பவர்களைக் காட்டிலும் வேலை செய்யாமல் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு சர்க்கரை வருவதாகவும் கவனித்திருக்கிறார்.

பொது சுகாதார இயக்கத்தின் தேவையை சென்னை மாகாண மக்கள் உணர்ந்ததன் விளைவு அன்றைய சென்னை மாகாண ஆளுநர்.ஹெச்.இ.லார்ட். வில்லிங்க்டன் அவர்களின் தலைமையில் பொது சுகாதார சங்கம் தொடங்கப்பட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணம், சிகிச்சை முறை குறித்து விரிவான ஆய்வு தேவை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

லெப்டினென்ட்-கர்னல்.வாட்டர்ஸின் நீரிழிவு நோய் பற்றிய ஆய்வுக்கட்டுரை சுவாரஸ்யமான தகவலைத் தெரிவிக்கிறது.

நடமாடும் துணை நீதிபதிகளைக் (Deputy Magistrate)  காட்டிலும் சப்-நீதிபதிகள் (Sub-Judge) மற்றும் முனுசீப்புக்களிடையே ( Munsiffs )  நீரிழிவுநோய்த் தாக்கம் அதிகமாக இருந்ததாம்.  துணைநீதிபதிகள் நாள் முழுவதும் அங்கும் இங்கும் அலைவதாகவும் சப்-நீதிபதிகள்  , முனுசீப்புக்களைப் பொறுத்தவரையில் நாள் முழுவதும் நீதிமன்றத்துக்குள்ளேயே அமர்ந்திருப்பதாகவும் சொல்கிறார். இதனால் உடல் உழைப்பு குறைந்ததுதான் அவர்களிடையே நீரிழிவு அதிகரித்துவிட்டதாக கருதுகிறார்.

நீரிழிவுநோய் ஏற்படுவதற்கான காரணம் அன்று முழுமையாக அறியப்படவில்லை. இருந்தாலும் உணவுப் பழக்கம்-குறிப்பாக மாவுச்சத்து அதிகம் உள்ள உணவினை எடுத்துக் கொள்ளுதல், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை, நவீன வாழ்க்கையால் ஏற்படும் மன உளைச்சல் & அழுத்தம் போன்றவை காரணங்களாக இருக்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.

அண்மையில் பிலிப்பைன்ஸ் சென்றிருந்தபோது அங்கு மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதைப் பார்க்க முடிந்தது. அளவு கொஞ்சம்தான். இருந்தாலும் 3 வேளையும் சாப்பிடுகிறார்கள். அப்படியானால் அவர்களிடையே நீரிழிவு சிதைவு ( நீரிழிவு சிதைவு -நன்றி - விகடன் எழுத்தாளர் திரு.அண்டன் பிரகாஷ் ) எப்படி இருக்கிறது என்று பார்த்தால் அங்கேயும் அதிகம் என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய  ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக