அரைச் சர்க்கரை
சர்க்கரைநோய் பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சொல்லும் குறுந்தொடர்
வாரம் 11
சர்க்கரை-இனிப்பு ஒருவருக்கு விருப்பமாய் இருப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் சர்க்கரைநோயே ஒருவருக்கு விருப்பமாய் இருந்திருக்கிறது என்றால் வியப்பாகத்தானே இருக்கிறது. எந்நேரமும் நினைப்பெல்லாம் சர்க்கரைநோய்தான். அப்படித்தான் இருந்திருக்கிறார் காஷ்மீரின் முதல் தலைமை மருத்துவ அலுவலராக இருந்த டாக்டர். A. மித்ரா ( 1885). நீரிழிவுசிதைவு பற்றி அறிந்துகொள்ள அதீத ஆர்வம். சர்க்கரை நோய் குறித்து அதிகம் அன்று யாருக்கும் தெரியாதல்லவா. அதனால் அதைப்பற்றி அறிந்து கொள்வதற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார். புள்ளிவிபரங்களை சேகரித்திருக்கிறார். அதற்காக இந்திய மருத்துவ இதழில் அவர் கேட்கும் 27 வகையான கேள்விகளில் சிலவற்றினை பாருங்கள்.
நோய் ஏற்பட்டுள்ளவரின் வயது, பாலினம், என்ன மாதிரியான வேலை, தாய்வழி அல்லது தந்தை வழி யாருக்கேனும் நீரிழிவு இருந்ததா, திருமணமானவரா, உடல் உழைப்புள்ளவரா அல்லது உட்கார்ந்தே இருப்பவரா, மூளைக்கு அதிகம் வேலை கொடுப்பவரா, மனச்சோர்வு உள்ளவரா, நோய் எற்படுவதற்கு முன் எந்த மாதிரியான உணவு எடுத்துக்கொண்டார், எடை இழப்பு ஏற்பட்டுள்ளதா, தூக்கமின்மை, கால் எரிச்சல், அதிக தாகம், பால் சிகிச்சை, நாவல் பழ சிகிச்சை எடுத்தார்களா, வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்களா, போன்ற கேள்விகள் கேட்டு அதற்கு பதில் தரும்படி இந்தியாவில் இருந்த மருத்துவர்களை கேட்டிருக்கிறார்.
அதற்கு பலர் எதிர்வினை ஆற்றியதற்கு நன்றியும் தெரிவிக்கிறார். அதன் தொடர்ச்சியாக சேகரித்த புள்ளி விபரங்களைக் கொண்டு, மருத்துவ மாநாட்டில் தான் படித்த 200 நீரிழிவு நோயாளிகள் குறித்த விரிவான ஆய்வுக் கட்டுரை குறித்தும் பேசுகிறார். அதனை தொடர்ந்து விரிவாக பகுப்பாய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கிறார். இது போன்ற நீரிழிவு நோயாளிகளை யாராவது ஆய்வு செய்திருந்தால் அதன் தரவுகளை தெரிவிக்கும்படியும் கேட்கிறார்.
எந்நேரமும் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டவராய் இருந்திருக்கிறார். வியப்பான விசயம் பாதுகாக்கப்பட்ட குடிநீரை ஸ்ரீநகருக்கு ஏற்படுத்தித் தந்தது. இதன் மூலம் பல ஆயிரம் மக்களின் சுகாதாரம் பாதுக்காக்கப்பட்டிருக்கிறது.
கல்கத்தாவில் பிறந்து இங்கிலாந்தில் படித்து கல்கத்தாவின் சுகாதாரத்துறை அலுவலராக பணிபுரிந்து கொண்டிருந்தவர் காஷ்மீர் மகாராஜாவால் தலைமை மருத்துவ அலுவலராக நியமனம் செய்யப்பட்டு காஷ்மீரில் கொடிகட்டி பறந்தது வியப்புதான். சிறந்த மருத்துவராகவும் நிர்வாகியாகவும் இருந்த காரணத்தால் சுகாதாரம், சிறைத்துறை, கல்வி உட்பட 9 துறைகளை நிர்வகிக்கும் பொறுப்பு அவரிடம் இருந்தது. இருந்தாலும் அரசியல் ரீதியாக சிக்கிக் கொள்ளாமல் சிறந்த முறையில் பணி ஆற்றியிருக்கிறார்.
அவருடைய அளப்பரிய தகுதியின் காரணமாக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பும் அவரைத் தேடி வந்தது. தலைமை மருத்துவ அலுவராய் இருந்துகொண்டே அனைத்துத் துறைகளையும் கட்டுப்படுத்தும் பொறுப்பு கிடைத்தது.
மித்ரா என்றால் நண்பர்-நட்பு என்று பொருள். பெயருக்கேற்றார்போல் இறுதி வரை அனைவரிடமும் அன்பாய் பழகி சர்க்கரை சர்க்கரை என்று சதா நினைத்து அதைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதில் அதீத ஆர்வத்துடன் மக்களுக்காகவே உழைத்த டாக்டர்.ராய் பகதூர் A. மித்ரா சர்க்கரை நோயினாலேயே இறந்துபோனதை என்னவென்று சொல்வது? காலத்தின் கொடுமையா? அவருடைய தன்னலமற்ற சேவை காரணமாக அவர் மறைந்துபோன போது காஷ்மீரே துக்கத்தில் ஆழ்ந்ததாக வரலாறு வருத்தத்துடன் பதிவு செய்துள்ளது.
அவருடைய மரணத்திற்கு பிறகு டாக்டர்.மித்ராவின் மனைவி, கணவரின் நினைவாக அவரது பெயரில் கல்கத்தா வெப்பமண்டல மருத்துவக் கல்லூரியில் நீரிழிவுநோய் ஆராய்ச்சிக்கான உதவித்தொகையை நிறுவியதாக இந்திய மருத்துவ இதழ் ஆசிரியர்கள் 1927 ல் பதிவு செய்திருக்கிறார்கள்.
.தொடரும்,
நன்றியுடன் உதவியவை: 1. டாக்டர்.வி.மோகன் எழுதிய ‘Making excellence a Habit’& ‘Banding, Bose And Beyond’ புத்தகங்கள்.
2. Indian Medical Gazette.
3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக