அரைச் சர்க்கரை
குறுந்தொடர்
சர்க்கரை நோய் பற்றிய வியப்பூட்டும் தெரிந்து கொள்ள வேண்டிய
பரபரப்பான வரலாற்று செய்திகள்
வாரம் 12
ஆவாரம் பூ ஆறேழு நாளா காத்திருந்த பாடல் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படம் வெளிவந்த காலத்தில் பிரபலம். பாடல் வெளியான காலத்தில் பாடலை ரசித்தவர்களில் பலருக்கு அன்று, ஆவாரம் பூ என்று ஒன்று இருப்பது பற்றியோ மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்பது பற்றியோ எல்லாம் தெரியாது.
வயல் ஓரங்களிலும் சாலை ஓரங்களிலும் கேட்பாரின்றி பூத்துக் கிடந்த பூக்கள்தான் இன்று சந்தைக்கு வந்துவிட்டன. ஆவாரம்பூ சாப்பிடு-சர்க்கரை கண்ட்ரோல் ஆகுது என்ற வாய்வழிச் செய்தியும் சமூக வலைதள செய்தியும் வைரலாக வைரலாக அதற்கு கிராக்கிதான்.
தஞ்சையை சார்ந்த ஓய்வு பெற்ற அறுவைச் சிகிச்சை மருத்துவர் P.S.முத்துசாமியின் 1887 ஆம் ஆண்டு பதிவுதான் ஆவாரம்பூ கொண்டு சர்க்கரை நோய்க்கு செய்த சிகிச்சை முறை பற்றி தெரிவிக்கிறது.
இன்றைய நவீன சித்த மருத்துவ ஆய்வு சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் மருத்துவக்கூறுகள் ஆவாரம்பூவில் இருப்பதை உறுதி செய்திருப்பதாக இனிப்புதேசம் கட்டுரை தொடரில் மருத்துவர்.கு.சிவராமனும் தெரிவிக்கிறார்.
ஆவாரம் பூ இன்று நடைப் பயிற்சி செல்லும் இடங்களில் குறிப்பாக பூங்கா, மைதானங்களின் சாலை ஓரங்களில் உங்களுக்காக காத்திருப்பதை நீங்கள் நடைப்பயிற்சி செல்பவராக இருந்தால் பார்க்கலாம். ஆவாரம்பூவினை உலர வைத்து தேநீர் போட்டு காலை இரவு சாப்பிட சர்க்கரை நோய்க்கு நல்லது என்கிறார்.
ஆவிரை, ஆவிரம் என்று சங்க இலக்கியங்களால் பேசப்படும் ஆவாரம் அந்த காலகட்டத்தில் மருத்துவ முன்னேற்றம் இல்லாத போது பயன்படுத்தியவை என்பதை நினைவில் கொள்ளவும்.
டாக்டர். ஹைச்.ஜெ.பிளான்க் சர்க்கரைநோயாளிக்கு நாவல்பழம் கொண்டு சிகிச்சை அளித்ததாகவும் ஒரு செய்தியைப் பார்க்க முடிகிறது. இதைப் பார்த்து சிகிச்சை அளித்த இன்னொரு மருத்துவர் தன் நோயாளிக்கு அது பயனளிக்கவில்லை என்றும் பதிவிட்டிருக்கிறார்.
சர்க்கரைநோய்க்கு முறையான சிகிச்சை - மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மருத்துவ முன்னேற்றம் அடையாத அன்றைய காலத்திலேயே சர்க்கரைநோய் ஒரு பிரச்சினையாக இருந்ததும் அதனைக் கட்டுப்படுத்த கடுமையாக மெனக்கெட்டிருக்கிறார்கள் - போராடிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.
பெரியாரால் திராவிட லெனின் என்று அழைக்கப்பட்டவர் டாக்டர்.T.M. நாயர். சென்னை மாகாண நீதிக் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். இவர் பெயரில் சென்னை தியாகராய நகர் வழியாகச் செல்லும் சாலை உள்ளது.
பிறந்தது கேரளாவில். சென்னை மருத்துவக் கல்லூரியிலும் எடின்பர்க்கிலும் மருத்துவம் பயின்ற டாக்டர் நாயர் சென்னை மாகாணத்தின் கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். இந்தியாவில் நீரிழிவு நோய் பரவலாக இருப்பது பற்றியும் அதனால் மக்கள் துன்பப்படுவது குறித்தும், ஏற்படும் இழப்புக்கள் குறித்தும் ஆழ்ந்த கவலையை பதிவு செய்திருக்கிறார்.
நோய் சரியாக வேண்டுமானால் சைவத்தை விடுத்து இறைச்சியை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று தம் நோயாளிகளிடம் வலியுறுத்தி இருக்கிறார்.
நீரிழிவு நோய்த்தாக்கம் பற்றி மனிதர் தொடர்ந்து புலம்புகிறார். நோய் பற்றிய புரிதல் மக்களுக்கு வேண்டும் என்றும் உடனடியாக சர்க்கரை நோய் ஆராய்ச்சித் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று 1914 ஆம் ஆண்டிலேயே இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். வருங்காலங்களில் நீரிழிவினால் இறப்பு அதிகரிக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார். தொடர்ந்து பேசியும் வந்திருக்கிறார்.
சென்னையில் புகழ்பெற்ற மருத்துவராக நோயாளிகளுக்கு சிகிச்சையும் அளித்திருக்கிறார்.
பொதுசுகாதாரத்திலும் ஆர்வம் கொண்டவராய் நீரிழிவு குறித்த ஆழ்ந்த அறிவும் கொண்டவராய் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவருமான மருத்துவர் நாயர், நீரிழிவின் பக்க விளைவுகளினாலேயே மரணத்தை தழுவ வேண்டியதாயிற்று. அவர் இறந்தது 1919.ல். அவர் இறந்து 2 ஆண்டுகள் கழித்துதான் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 1921-ல். ஒரு வேளை அவர் உயிருடன் இருக்கும்போதே இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாமோ?
தொடரும்,
நன்றியுடன் உதவியவை: 1. டாக்டர்.வி.மோகன் எழுதிய ‘Making excellence a Habit’ & ‘Banding, Bose And Beyond’ புத்தகங்கள்.
2. Indian Medical Gazette.
3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக