திங்கள், 5 மே, 2025

மேகமலை

 

மேகமலை. ஏற்றமும் இறக்கமும்





 

 

பெரிய மனதோடு வரவேற்கும் சின்னமனூர்.  மனைவியுடன் பணி செய்யும் ஆசிரியரின் மகளின் திருமணத்திற்காக ஆசிரியர்கள் 20 பேராய் வேனில் பயணம். திருமணம் முடிந்து குச்சனூர் சென்று வந்த பின் நேரம் இருந்ததால் பக்கத்தில் இருக்கும் மேகமலைக்கு செல்லலாமே என்று திடீர் திட்டம். கையில்தான் வேன் இருக்கிறதே.

அதுவரை மெளனமாய் இருந்த வானம் மெதுவாய் கலவரமானது.  சாரலாய், மிதமாய், வலுவாயும் பயம் காட்டியது மழை. இந்த மழையில் மேலே செல்வதா என்று கொஞ்சம் சிந்தனை. இந்த மேகமலைக்காக, திருமணத்துக்கு கணவருடன் காரில் வந்த ஆசிரியர் ஒருவர், கணவர் அவசர வேலை காரணமாக செல்ல வேண்டி இருந்ததால் திருமணம் முடிந்தவுடன் அவரை அனுப்பிவிட்டு வேனில் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். மேகமலையை பார்க்காமல் எப்படி திரும்புவது? மேகமலை செல்ல முடிவானது.

முடிவானதும் வழக்கம்போல் அப்பகுதி நண்பர்களிடமும் வனத்துறை அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்து முன்னேற்பாடுகளை செய்துகொண்டேன். ஒரு பாதுகாப்புக்காக. பொதுவான என் வழக்கம் இது.

மேகமலை அருமையான இடம். மலை ஏறும்போதே கீழே 6 மணிக்குள் இறங்கிவிட வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி அனுப்பினார்கள். நாங்கள் மேலே ஏறும்போதே 3 மணி ஆகிவிட்டது. மழை வேறு.

இந்த பயணத்தை ஒருங்கிணைத்தது தலைமை ஆசிரியரும் ஆசிரியர் ஒருவரும் தான். மணமகளின் தாயார் ஆசிரியர் நல்ல நண்பர். உடன் உப்புக்குச் சப்பாணியாய் தான் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு செல்கிறேன். வேறு எந்த பொறுப்பும் எனக்கில்லை.

ஆனால் அத்துணைபேரையும் பத்திரமாய் அழைத்து சென்று திரும்ப கீழே இறங்கி வீடு திரும்ப வேண்டும் என்ற பயங்கலந்த நினைப்போடுதான் பயணித்துக் கொண்டிருந்தேன். பயணங்கள்  தந்த  அனுபவங்களினால் எப்போதுமே அதீத கூடுதல் கவனம். வனத்துறை சொன்ன நேரத்துக்கு பிரச்சினை செய்யாமல் கீழே இறங்க வேண்டும் என்ற பொறுப்பும்.

மேகமலை. கண்ணுக்கு எட்டிய வரை பச்சைப்பட்டு தான். குளிர்ச்சி மனதுக்கும் தான். மேகமலை ஒரே ஒரு இடம் மட்டும் என்பதால் கொஞ்சம் நிதானம். கொஞ்சம் மகிழ்ச்சி. கொஞ்சம் ரசனை. அவ்வளவுதான் மற்றபடி வளைத்து வளைத்து ரம்யமான புகைப்படங்கள்  எடுக்க ஏற்ற அற்புதமான இடம். புகைப்படங்களைப் பார்த்தாலே நளினம் நடனமாடுவது தெரியும். அமைதியான சூழல். இந்தப் பயணத்தில் என் பங்களிப்பு என்று எதுவும் தனியாக கிடையாது. ஆசிரியர்கள் அனைவரும் அன்று மாணவர்களாய் மகிழ்ந்தார்கள்.

பொதுவாக இதுபோன்ற பயணங்களில் திரும்பும்போது கலந்துகொண்டவர்களிடம் பயணம் குறித்து பேசச் சொல்வது வழக்கம். அன்றும் ஆசிரியர்களிடம் மேகமலை அனுபவங்களை சொல்லச் சொன்னேன். நேரமும் போக வேண்டுமே. மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்கள் ஆசிரியர்கள். இது போன்ற சுற்றுலா இதுவரை சென்றதில்லை என்றார் ஒரு ஆசிரியர். இன்னொரு ஆசிரியர் அருமை என்று சிலாகித்தார்.

இந்த சுற்றுலா சிறப்புற என்னுடைய மூத்த அனுபவமும் ஒரு காரணம் என்பது தலைமை ஆசிரியரின் கருத்து.  

முழுமையாக நிதானமாய் ரசித்ததாயும். சரியாக திட்டமிட்டு ஒருங்கிணைத்தாகவும் பயணம் சிறப்புற  தலைமை ஆசிரியருடன் எனக்கும் சேர்த்து நன்றி தெரிவிக்க மறக்கவில்லை. வேகப்படுத்தாமல் முழுமையாக ரசிக்க உதவியதாய் இன்னுமொரு ஆசிரியர். பாராட்டும்போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அது எல்லாம் நொடி நேரத்துக்குத்தான்.

அதுவரை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த என் தர்மபத்தினி,      ‘...க்கும். நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. பொதுவா அவரும் பொதுவா அப்படித்தான். விரட்டு விரட்டுன்னு விரட்டுவார். பார்த்தது போதும் வா. நேரமாச்சு நேரமாச்சு, கிளம்புங்க கிளம்புங்கன்னு விரட்டிக்கிட்டே தான் இருப்பார்.’ என்று பொறுக்கமாட்டாமல் மெதுவாக பொங்கினார்.

வேன் திரும்பிக் கொண்டிருந்தது. மேகமலையில் இருந்து முழுமையாக இன்னும் கீழே இறங்கவில்லை. ஆனால் என் தர்மபத்தினிதான் என்னை ஒரேயடியாக இறக்கிவிட்டுவிட்டாரே!.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக