பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடத்தான் பட்டாசு.
கண்ணன் ஐந்தாம் வகுப்பு. தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம்தான். புத்தாடை, பட்டாசு என சிறுவர்களுக்கே உரிய கனவுகளோடு தீபாவளி நாளை எதிர்நோக்கி இருந்தான்.
பட்டாசு வாங்க வேண்டியதுதான் பாக்கி. முதல்நாள் இரவு போகலாம் என்று அப்பா சொல்லி இருந்ததுபோல் வாங்கியும் கொடுத்தார்.
காலையில் குளித்துவிட்டு புத்தாடை போட்டுக்கொண்டு வெடி வெடிக்கத் தயாரானான். வீதியில் வெடிச் சத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது. அது என்ன எதிர்வீட்டு மணி, நேற்றிலிருந்தே வெடிபோட்டு பீத்திக் கொள்வது. நாமும் வெடி வெடித்து அவனை வெறுப்பேத்துவோம் என்று களத்தில் இறங்கினான்.
முதலில் எப்போதும் அவன் அப்பா, தீபாவளியை ‘பூஞ்சட்டி’ - அதுதான் ‘புஸ்வானம்’ வைத்து தொடங்கச் சொல்வார். புஸ்வானத்துக்கு நெருப்பு வைத்துவிட்டு விலகி வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தான் . ஆனால் எரியாமல் என்னவோ மக்கர் செய்தது. அய்யோ மணி பார்க்கிறானா? என்று நோட்டம் விட்டான். நல்ல வேளை அவன் அங்கு இல்லை.
என்னடா! தொடக்கமே சரியில்லையே! என்று நினைத்து அருகில் போய் நெருப்பு இருக்கிறதா என்று பார்த்தான். சரியாகத் தெரியவில்லை. அமைதியாக இருந்தது. மெல்ல குனிந்தான். அவ்வளவு நேரம் மெளனமாக இருந்த புஸ்வானம், கண்ணன் குனிந்த நேரம் பார்த்து சடாரென புகைத்து மேலெழுந்து கலர்கலராய் ஒளியைக் கக்கியது. அதே நேரம் கண்ணனின் கண் ஒளி பறிபோனது.
பாவம். அய்யோ குய்யோ என்று கண்ணன் கத்தி என்ன பயன்? மருத்துவமனையில் சிகிச்சையால் கண்ணில் வலி குறைந்து காயம் சரியாக இருமாதத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால் பார்வை முற்றிலும் போனது போனதுதான்.
தீபாவளி என்றாலே பட்டாசுதான்!
புத்தாடை, பலகாரம் என இருந்தாலும் தீபாவளி என்றாலே பட்டாசுதானே உடனே நினைவுக்கு வரும். பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினால்தானே அது தீபாவளி.
என்னதான் கம்ப்யூட்டர், செல்போன் என்று டிஜிட்டல் சாதனங்கள் வந்தாலும் பட்டாசுக்குரிய மதிப்பு என்றும் குறையாது. தீபாவளியிடமிருந்து பிரிக்கவும் முடியாது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின்போது இது போன்று சிறுவர்கள் பட்டாசுவெடித்து கண்ணில் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பார்வை பாதிப்புக்கும் பார்வை இழப்புக்கும் உள்ளாகிறார்கள்.
இந்த தீபாவளி பாதுகாப்பான மகிழ்ச்சியான தீபாவளியாக குறிப்பாக கண்பார்வை பாதிக்காத தீபாவளியாக இருக்க என்ன செய்யலாம்?
பொதுவாக வெடிக்கு நெருப்பு வைத்து குறிப்பிட்ட சிறிது நேரத்திற்குள் வெடித்தால் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்ச நேரமாகியும் வெடிக்கவில்லை என்றால் விட்டு விட்டு அடுத்த வெடிக்குப் போய்விட வேண்டியதுதான்.
ஏன் வெடிக்கவில்லை? நெருப்பு இருக்கிறதா? என்று பக்கத்தில் போய் பார்த்தால் பிரச்சினைதான். சில சமயங்களில் மிகவும் தாமதமாக நெருப்பு பிடித்து, குனிந்து பார்க்கும்போது சரியாக முகத்தில் வெடித்து கண்ணைக் கடுமையாக பாதித்துவிடும் ஆபத்து உள்ளது. இது போன்ற பாதிப்புக்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் வெடி வெடிக்கவில்லை என்றால் வருத்தப்படாமல் போனால் போகிறது என்று நினைத்து அதன் மேல் மண்ணைப் போட்டுவிடவேண்டும். தள்ளிப்போய் அடுத்த வெடியை வெடிக்க போய்விட வேண்டும்.
புஸ்வானம் தானே! அதுதான் வெடிவகை இல்லையே! மத்தாப்பு வகைதானே என்ற நினைப்பும் அலட்சியமும் வேண்டாம். கவனம்
ஊதுபத்திகூட ஆபத்துதான்.
வெடிக்கு நெருப்பினை வைக்க ஒவ்வொருவரும் ஒரு பொருளை பயன்படுத்துவார்கள். சிலர் சாதாரண தீப்பெட்டியினையும் இன்னும் சிலர் மத்தாப்பு பெட்டியினையும் பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் கயிறு போன்ற நூல்திரியின் மூலம் வெடிகளுக்கு நெருப்பை வைப்பார்கள்.
இன்னும் சிலர் பெரிய தடிமனான ஊதுபத்தியின் மூலம் வெடிகளுக்கு நெருப்பு வைப்பார்கள். இது நீண்ட நேரம் நின்று எரியும். அதிக வெடிகளை வெடிக்கலாம் என்று சிறுவர்கள் இதைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த ஊதுபத்திதான் ஆபத்தானது.
சிறுவர்கள் இந்த நெருப்புள்ள இந்த ஊதுபத்தியுடன் வெடிகளை வெடித்துக் கொண்டு இங்கும் அங்கும் மகிழ்ச்சியாக ஓடுவார்கள். அப்படி ஓடும்போது இந்த ஊதுபத்தியினை நெட்டுவாக்கில் பிடித்துக்கொண்டு கவனமாக செல்ல வேண்டும். அக்கம் பக்கம் யாரும் வருகிறார்களா என்று பார்த்துச் செல்ல வேண்டும். ஆனால் பல நேரங்களில் வெடி வெடிக்கும் ஆர்வத்தில் அப்படி பிள்ளைகள் செய்வதில்லை.
நெட்டுவாக்கில் உயர்த்தி பிடிக்காமல் கிடைமட்டத்தில் குறுக்குவாட்டில் பிடித்துக் கொண்டு வேகவேகமாக ஓடுவார்கள். வெடிக்கு நெருப்பினை பற்ற வைத்துவிட்டு ஓடும்போது அந்த ஊதுபத்தியினை பிடித்திருக்கும் உயரத்தில் பிள்ளைகள் யாராவது குறுக்காக வந்தால் அந்த நெருப்புள்ள ஊதுபத்தி எதிரே வரும் சிறுவர்களின் கண்ணில் வேகமாக குத்திக் கண்ணைக் கடுமையாக தாக்கி துளைத்துச் செல்லக்கூடிய ஆபத்து இருக்கிறது. சிறு பிள்ளைகள் இதுபோன்று பார்வை இழந்து போயிருக்கிறார்கள்.
பாதுகாப்பான தீபாவளிக்கு:
Ö பட்டாசு வெடிக்கும் இடத்துக்கு அருகில் வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.
Ö சிறுவர்கள், பெரியவர்கள் மேற்பார்வையிலேயே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
Ö வெடிகளுக்கு நெருப்பு வைக்க நீண்ட எரிகுச்சிகளை பயன்படுத்த வேண்டும்.
Ö வெடிகளுக்கு நெருப்பு வைத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு தள்ளி வந்து விட வேண்டும்.
Ö வெடிகளை கையில் வைத்து வெடிக்கக்கூடாது.
Ö நெருப்பு வைத்தும் வெடிக்கவில்லை என்றால் ஏன் வெடிக்கவில்லை. நெருப்பு இருக்கிறதா இல்லையா என்று வெடிக்கு அருகில் போய் குனிந்து பார்க்க கூடாது.
Ö காயம் ஏற்பட்டால் உடனே சுத்தமான தண்ணீரால் கண்ணை நன்றாக கழுவி அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தாமதம் வேண்டாம்.
பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடத்தான் பட்டாசு வெடிவகைகள். இதை நினைவில் கொண்டாலே போதும் அது பாதுகாப்பான பண்டிகையாக அமைந்துவிடும்.
மு.வீராசாமி
கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு) &
முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்
தேசிய கண்மருத்துவ சங்கம்
மதுரை