வியாழன், 9 அக்டோபர், 2025

உலக பார்வை நாள் - World Sight Day - 2025

உலக பார்வை நாள்  - World Sight Day  - 2025

சூப்பர் பார்வைக்கு சூப்பர் 10



கண்களிடம் அன்பு செலுத்துவோம்

உலக பார்வை நாளின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள்தான் இது. வாழ்நாள் முழுவதும் பார்க்க உதவும் கண்களிடம் எப்படி அன்பு செலுத்துவது? அப்படி கேட்பவர்களுக்காக இதோ சூப்பர் 10:

 

01. செல்போன் பார்ப்பதில் நேரக்கட்டுப்பாடு. நீங்களே வைத்துக் கொள்ளலாம். செல்போனையோ கணிணியையோ தொடர்ந்து நீண்ட நேரம் பார்க்கும்போது 20:20:20 என்ற பார்முலாவை நினைவில் கொள்ள வேண்டும். 

அதாவது 20 நிமிடத்திற்கு ஒருமுறை செல்போன் / கணிணி திரையில் இருந்து கண்களை விலக்கி 20 அடி தொலைவில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை சுமார் 20 விநாடிகள் பார்க்க வேண்டும். அப்போது கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொள்ள வேண்டும். பின் மீண்டும் தொடர்ந்து பார்க்கலாம். 

02. கணினியும் செல்போனும் நம்மை வீட்டுக்குள்ளேயே முடக்கிப்போட்டு  விட்டன. முடிந்த அளவு வீட்டுக்கு வெளியேயும் கொஞ்ச நேரம் செலவழிப்பதை வழக்கமாக்கிக் கொள்வோம்.

03. சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து கண்களைப் பாதுகாக்க வெயிலில் செல்லும்போது தரமான குளிர் கண்ணாடியை பயன்படுத்துவது நல்லது. கண்புரை ஏற்படுவதைத் தடுக்கவும் இது உதவலாம்.

04. பார்வைகுறைபாட்டிற்கு கண்ணாடி, தேவை இருந்தால் போட்டுக் கொள்ள வேண்டும். வாங்கினால் போதாது, தொடர்ந்து பயன்படுத்துங்கள்,

 40-க்கு மேல் ஏற்படுவது வெள்ளெழுத்து பிரச்சினை. கண்ணாடி போட வெட்கம் வேண்டாம். இல்லையென்றால் வங்கி போன்ற இடங்களுக்கு செல்லும்போது வெட்கமில்லாமல், படிக்காதவர்கள் போல் ஏங்க இந்த படிவத்தில் பொடி எழுத்தில் என்ன எழுதி இருக்குன்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க’  என்று பக்கத்தில் இருப்பவரிடம்  கேட்கும் நிலை ஏற்படும்.

05 கண்ணுக்கும் முக ஒப்பனைக்கும் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களின் தரம் மட்டும் அதன் காலாவதி நாட்களைப் பார்க்க வேண்டும். கண் மைக்கு பயன்படுத்தும் குச்சி சுத்தமாக இல்லை என்றால் மாற்றுங்கள். 

06. தினமும் கொஞ்ச நேரம் உடற்பயிற்சி நல்லது. இரத்த அழுத்தம்சர்க்கரையை வரவிடாமல் தடுக்க உதவலாம். இதன் மூலம் கண்களும் காக்கப்படுகின்றன.

07 குழந்தைகளுக்கு தொடக்கத்தில் இருந்தே சத்தான உணவு, காய்கறி, கீரைகளை கொடுத்துவர வேண்டும். கண்ட கண்ட சக்கை உணவு வேண்டாம்.

08. புகை பகை என்பது தெரிந்தே ஏன் கண்களுக்கு கெடுதலை ஏற்படுத்த வேண்டும்

09 வேண்டாம் கைவைத்தியம். எதற்கெடுத்தாலும் நாமாக சொட்டு மருந்து போடுவது கண்ணுக்கு நல்லதல்ல. 

10. 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை கண்களை சோதித்துக் கொள்வது நல்லது.

---           

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர்( ஓய்வு)

மேனாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்

தேசிய கண்மருத்துவ சங்கம்

மதுரை

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக