வெள்ளி, 3 அக்டோபர், 2025

மெல்ல இனி சாகுமோ எழுதும் கலை?

மெல்ல இனி சாகுமோ எழுதும் கலை?  







 தேர்வு அறை. கையில் பேனா வைத்திருந்த அந்த இளைஞன் ஙே’ என்று விழித்துக் கொண்டிருந்தான். விடை தெரியாததால் அல்ல. எழுதத் தெரியாததால். சொல்லப்போனால் எழுதுவது எப்படி என்பதே மறந்துபோய்விட்டது அவனுக்கு. 

அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் கீ போர்டும் தொடுதிரையும் தான். நேரங்காலமின்றி பொழுதுக்கும் செல்போனில் தானே அவர்கள் மூழ்கி இருக்கிறார்கள். இதனால் அவர்களால் தொடர்ச்சியாக எழுத முடிவதில்லை.

இதை நம்பித்தான் ஆக வேண்டும். அமெரிக்காலண்டன் போன்ற நாடுகளில்பிள்ளைகளுக்கு இந்தப் பிரச்சினை அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

இக்கால இளைஞர்கள் சிந்திப்பதும் வெகுவாக குறைந்துபோய்விட்டது. எதற்கெடுத்தாலும் செல்போனில் பார்க்கும் நிலைமை. ஒரு சிறு செய்தியைக்கூட நம் நினைவில் இருந்து நம்மால் சொல்ல முடியும்தான். ஆனால் அதெற்கெல்லாம் கிஞ்சித்தும் இடம் கொடுப்பதே இல்லை.  எடு போனை. கூகுளைப் பாரு என்று தானே சொல்கிறோம்.

 

சட்டைப்பையில் பேனா இருக்கிறதா?

 

என் சட்டைப்பையில் இருக்கும் பேனாக்களைப் பார்த்து பலரும் வியப்படைவதுண்டு. கர்நாடகத்து ஆசாமியாஎதுக்கு பேனா வைத்திருக்கிறான் என்பது போல. அவர்களுடைய வியப்பிற்கு காரணம் இருக்கிறது. இப்போதெல்லாம் பேனாவை யார் பயன்படுத்துகிறார்கள். ஏதாவது குறித்துக் கொள்ள வேண்டும் என்றால்கூட செல்போனில்தானே பதிவு செய்கிறார்கள்.

இரண்டாம் வகுப்பு படிக்கும்போது உடன் படித்த ஒரு மாணவன்  சிலேட்டின் ஓரங்களை கடித்து கடித்து சிலேட்டினை வட்டமாக்குவான். அது ஒருவகை அட்டை சிலேட்டு. வட்டமாக்கி வகுப்பின் சுவர் ஓரமாக உருட்டி விளையாடுவான். அப்போதெல்லாம் தரை தானே. பெஞ்ச் எல்லாம் இருக்காது.

குச்சி எனப்படும் பலப்ப குச்சி பிடித்துதான் எழுதுவோம். மூன்றாம் வகுப்பு வரை அப்படி. அதற்குப் பிறகு காகித பென்சில்.

ஆறாம் வகுப்பில் பதவி உயர்வு போல் பேனா கொடுத்து விடுவார்கள்.  பேனாவுடன் பள்ளிக்கு செல்லும் அழகும் கெத்தும் தனிதான். பொழுதுக்கும் நோட்டில் எழுதி எழுதி மகிழ்வோம். இந்த எழுத்துக்குத்தான் இப்போது பிரச்சினை .

 

எழுதுவது குறைந்தால்?



 

ஜென் ஸி என்று சொல்லப்படும் 2000 த்துக்குப் பிறகு பிறந்த கணினி-இணையத் தொழிற்நுட்பத்துறையில் தோய்ந்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைதான் இது. இதனால் நமக்கு என்ன?

யாருக்கும் எந்த பிரச்சினையுமில்லை. ஆனால் நம்மை பண்படுத்தி நாகரீகமான சமூகமாக மாற காரணமான 5000 -ம் ஆண்டு பழமைவாய்ந்த திறமையை இழந்து வருவது அவர்களுக்குத் தெரியவில்லை.

இக்கால இளைஞர்கள் எழுதிப் பார்த்தீர்களா?  எல்லாமே செல்லில்தானே. நோட்ஸ் கூட அதில்தானே கட கட என டைப் செய்கிறார்கள். 

கல்வி கற்பதில் டிஜிட்டல் சாதனங்கள் ஆக்கிரமித்துவிட்டதால், எழுதும் பழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறதாம். இதைச் சொல்வது நார்வே ஸ்டாஞ்சர் பல்கலைகழகம். 40 விழுக்காடு மாணவர்களுக்கு எழுதுவது  கடினமாக இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள். இதுதான் கவலைதரக்கூடிய செய்தி.

எழுதுவதில் ஏற்படும் சிதைவு அல்லது தொய்வு இளம்பிள்ளைகளின் நினைவாற்றல்கவனம்கற்பதில் உள்ள உத்திகள்  ஆகியவற்றில் கடும் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் அவர்களின் அறிவாற்றலில் நீண்ட காலத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதைவிட கொடுமை இன்னும் ஒருபடி மேலே போய் வாய்ஸ் மெசேஜ் எனும் குரல் பதிவாக செய்தியை அனுப்புவது. யார், வேலை மெனக்கெட்டு டைப் செய்து கொண்டிருப்பது.

தலையெழுத்து மாதிரி இருக்கு உன் கையெழுத்து என்று இனி யாரும் சொல்லத் தேவையில்லை பாருங்கள்.

 

எழுதுவதால் என்ன பலன்?

 

எழுத்து என்பது வாழ்வோடும் சமூகத்தோடும் தொடர்புடையது. மின்னணு சாதனங்களின் வரவுக்கு முன் கடிதம் மூலமாகத்தான் தொடர்புகொள்ள முடியும். இக்கால பிள்ளைகளுக்கு அஞ்சல் அட்டையும் அது 15 பைசா என்பதும் தெரிய வாய்ப்பில்லை. கடிதம் கைக்குப்போய் சேர்ந்தபிறகுதான் தகவலைத் தெரிந்துகொள்ள முடியும். 

ஆனால் இன்று அது மின்னல்வேக குறுஞ்செய்தியாக  சுருங்கிப்போய் கைவிரல்களைப் பாடாய்ப்படுத்துகிறது.  கடிதம் எழுதுவதற்கான தேவையும் இல்லாமல் போய்விட்டது. எழுத்துக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது.

தட்டச்சு செய்வதைக் காட்டிலும் எழுதுவதன் மூலம் மூளையின் பல்வேறு பகுதிகள் தூண்டப்படுவதுடன் நினைவில் திறம்பட சேமிக்கவும் உதவுகிறது.

தொடர்ந்து எழுதுவதன் மூலம் சொற்களை கருத்துக்களுடன் தொடர்பு படுத்த முடிகிறது. ஒருவரின் நினைவாற்றல் மேம்பட்டு எளிமையாக புரிந்து கொள்ள உதவுகிறது. 

கையால் எழுதுவதன் மூலம் கைகண் இவற்றின் ஒருங்கிணைப்பு நன்றாக செயல்பட முடிகிறது. 

சுமேரிய நாகரீகத்தின் கியூனிபார்ம் எழுத்து முறையே காலத்தால் முற்பட்டது. களிமண்ணில் எழுதப்பட்ட இந்த முறை தொடக்கத்தில் பொருளாதார பதிவுகளுக்கு பயன்படுத்தினாலும் நாளடைவில் இதர நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். 

எகிப்துசீனநாகரீகம்சிந்துவெளிவெளி நாகரீகம் என்று பழங்கால நாகரீகம் தொடங்கி தொடர்ந்து பல்வேறு கால காட்டங்களில் வாழ்ந்தவர்கள் செப்பேடுகல்வெட்டு என வரலாறுகளை பதிவு செய்து வைத்திருந்ததாலேயே நம்மால் வரலாற்றினை அறிய முடிகிறது. 

எழுதும் கலை என்பது பல ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்ட சொத்து. எழுதப்பட்ட தகவல்கள் - அது ஓலைச்சுவடியாகட்டும்கல்லெழுத்தாகட்டும்செப்பேடாகட்டும்அனைத்துமே பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள். இவற்றின் மூலமாகத்தானே நாம் பண்டைய வரலாற்றினை அறிந்து வருகிறோம். அவர்கள் எழுதி வைத்திருக்காவிட்டால் வரலாறு நமக்கு கிடைத்திருக்குமா?.

லாப்டாப்செல்போனைப் பயன்படுத்துபவர்களைக் காட்டிலும்   கையால் குறிப்பெடுக்கும் மாணவர்களால் மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க முடிகிறது. அறிந்தவற்றை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படவும் முடிவதாக  உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 

நம் நரம்புமண்டலத்தையும் நம்முடைய புலன்களையும் ஒருங்கிணைத்து எழுத்துக்களை கையால் எழுதும்போது பெறும் அனுபவ உணர்வினை தட்டச்சு செய்வதால் ஈடுகட்ட முடியாது எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். தட்டச்சு செய்பவர்களைப் பொறுத்த வரை அது வெறும் சொற்களே.

திரைநேரம் அதிகரிப்பதால் நம்முடைய எழுத்துக் கலையும்வரைவாற்றலும்கைவினைத்திறனும் பாதிக்கப்படுவதை நாம் உணரவேண்டிய நேரம் வந்துவிட்டது.

எழுத வேண்டிய தேவை குறைந்துபோன பிள்ளைகளை கொஞ்ச நேரம் தினமும் எழுதச் சொல்ல வேண்டும்.  நாமும் கொஞ்ச நேரம் பேனா பிடித்து எழுதுவோமே!

---

மு.வீராசாமி

மேனாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்

தேசிய கண்மருத்துவ சங்கம்

மதுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக