காபி, சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துகிறதா ?
---
மு.வீராசாமி DOA
கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு )
மதுரை
சென்ற தலைமுறையினருக்கு காபி என்றதும் நினைவுக்கு வருவது ‘பேஷ்! பேஷ்! ரொம்ப நல்லா இருக்கு’ என்ற உசிலை மணியின் விளம்பரம்தான்.
காபி பிரியர்கள் சந்தித்துக் கொண்டால் பேச்சு சுவாரஸ்யமாக இருக்கும். எங்கு நல்ல பில்டர் காபி கிடைக்கும் என்பதை தெள்ளத் தெளிவாக சொல்வார்கள். அதுவும் வெவ்வேறு ஊர்களில்கூட தெரிந்து வைத்திருப்பார்கள்.
காபியை குடிக்கக்கூட வேண்டாம். சூடான பில்டர் காபியில், அந்த ஆவியோடு வரும் நறுமணத்தை நுகர்ந்தாலே போதும், புத்துணர்ச்சி பீறிட்டு வரும். அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்!
காபி சுவையாக இருந்தால்தான் அது காபி. அவசரத்துக்கு கலக்கித்தருவது எல்லாம் காபியாகவே இருக்காது. பில்டரில் டிகாசன் இறக்கி தயார் செய்யும்போதுதான் காபி, மணமாகவும் சுவையாகவும் இருக்கும். நாக்கில் சுவை அப்படியே தித்திப்புடன் இருந்து கொண்டே இருக்கும். கும்பகோணம் ‘டிகிரி காபி’ பற்றி சிலாகித்து சொல்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய எழுத்துக்களில் போகிறபோக்கில் காபி பற்றி சொல்லி சென்றிருக்கிறார். டிகிரி காபி பிரியர் அவர். ஜென் ‘ஸி’தலைமுறையினரைப் பற்றி குறிப்பிடும்போது, மால்களிலும் காபிடே போன்ற இடங்களிலும் பெரிய கோப்பைகளில் ‘லாட்டே’, ‘கப்புசினோ’காபிகளை நூறு ரூபாய்க்கு மேல் வாங்கிக் குடித்தாலும், அதன் சுவை என்னமோ, அங்கே நாம் அழைத்துச் செல்லும் நபரைப் பொறுத்தது, என்று எழுதியிருந்ததாக படித்த நினைவு.
காலையில் காபி குடித்தால்தான் சிலருக்கு காலைக்கடன் எளிதாக இருக்கும். தலைவலிக்கு சூடா ஒரு காபி சாப்பிட்டால் தலைவலி போயே போயிந்தே! என்பவர்கள் அதிகம்.
சரி விஷயத்துக்கு வருவோம். இந்து ஆங்கில நாளிதழில் ஆகஸ்ட் 23 ஞாயிறு அன்று – ‘அறிவியல் பேசும்' பகுதியில் காபி பற்றிய புத்தம்புது கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. ( New studies pursue ‘perfect’ blend for coffee and health – The Hindu நாள் – 23-08-2026 ) மதுரைக்கு சொந்தக்காரர் - போற்றுதலுக்குரிய பிரபல விஞ்ஞானி, முதுபெரும் தகைசால் பேராசிரியர், தற்போது ஹைதராபாத் LVPEIமருத்துவமனையின், கண் ஆராய்ச்சி பிரிவின் இயக்குநர் டி.பாலா என்று அன்புடன் அழைக்கப்படும் மதிப்புமிகு பத்மஶ்ரீ டாக்டர்.டி.பாலசுப்பிரமணியன் அவர்கள் தான் கட்டுரையை எழுதியவர்கள்.
எனக்குத் தெரிந்து, தொடர்ந்து நீண்ட நாட்களாக ஒரு நாளிதழில் ‘அறிவியல் பேசும்’ – ‘Speaking of Science’ என்ற பகுதிக்கு எழுதிவருவது அவர்களாகத்தான் இருக்கும். அதுவும் தொடர்ந்து 45 ஆண்டுகளாக. ஒவ்வொன்றும் புத்தம்புது ஆய்வுகட்டுரைகளின் அடிப்படையில். 45 ஆண்டுகளாக நானும் தொடர்ந்து படித்து வருகிறேன் என்பதை இப்போது நினைக்கும்போது வியப்பாகவே இருக்கிறது.
கட்டுரைக்குள் வருவோம். சில சமயம் காபி சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லது என்பார்கள். திடீரென நல்லது இல்லை என்று ஏதாவது ஒரு ஆய்வின் மேல் பழியைப்போடுவார்கள். அதிகமாக குடிக்காதே என்று எச்சரிக்கவும் செய்வார்கள்.
இந்த நிலையில்தான் ‘இந்து’ நாளிதழின் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது. காபி பிரியர்களுக்கு மிகுந்த மகிழ்வையும் தருகிறது.
‘காபின்’ ( Caffeine ) என்பது காபியில் உள்ள முக்கியக்கூறு என்பது தெரியும். இந்த ‘காபின்’ பற்றி ஆய்வு செய்த ‘அமெரிக்க இதய சங்கம்’, இந்த காபின் மூலக்கூறு, மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி அதிக ஆற்றலை உற்பத்தி செய்து பயன்படுத்த உடலை ஊக்குவிப்பதாக தெரிவித்துள்ளார்கள். நாம்கூட சொல்வோமே. ‘அப்பாடா, ஒரு காபி குடித்த பிறகுதான் சுறுசுறுப்பே வந்தது என்று'. பலருக்கு காபி உள்ளே போய்க்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிடில் ஒன்றும் ஓடாது.
அதுமட்டுமல்லாமல் மேலும் சில நன்மைகள் கிடைப்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது சர்க்கரைநோய், பக்கவாதம், இதய செயலிழப்பு, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்களின் ஆபத்துக்களைக் குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளார்கள்.
ஹார்வார்ட் மருத்துவப் பள்ளி, ஹார்ட்வார்ட் பொதுசுகாதாரப் பள்ளி, பிரிட்டன் மற்றும் கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வுகள், காபி அருந்துவதன் மூலம் புற்றுநோய், சர்க்கரைநோய், இதயநோய்கள் ஏற்படும் தாக்கம் குறைவதாக கண்டறிந்துள்ளார்கள்.
காபிக்கு எப்போதும் மரியாதையும் ‘மவுசும்’ கொஞ்சம் அதிகம்தான். விலையும் அதிகம்தானே. ஒரு சாதாரண குடும்பத்தில் காபி எல்லாம் குடித்தால் கட்டுப்படியாகுமா? இதை சமாளிக்க ‘சிக்கரி’ உதவுகிறது. விலை காபியுடன் ஒப்பிடும்போது சல்லிசுதான்.
.
அது என்ன சிக்கரி? ‘சிகோரிஸ் இண்டிபஸ்’ என்ற ஒருவகை மூலிகைச்செடியின் வேரை வறுத்து பொடியாக்கும்போது கிடைப்பதுதான் சிக்கரி. காபியுடன் சிக்கரி கலக்கும்போது மணமும் அடர்த்தியும் கூடுதலான சுவையும் கிடைக்கும்.
சிக்கரியில் ‘இனுலின்’ என்ற பாலிசாக்கரைடு இருக்கிறது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுவதாக கண்டறிந்துள்ளார்கள்.
சிக்கரி கலக்காமல் ‘தூய காபி’ ( Pure 100% coffee ) குடிப்பதை விரும்புவர்களும் இருக்கிறார்கள். சிக்கரி அவர்களுக்கு ஒத்துக்கொள்வதில்லை அல்லது அது தேவையில்லை என்று சொல்வார்கள்.
சிக்கரி கலப்பதால், காபிக்கு கூடுதல் நறுமணத்தையும் சுவையையும் தந்தாலும், இந்த சிக்கரியால் வேறு சில நன்மைகளும் கிடைப்பதாக, மைசூர் மத்திய உணவு தொழிற்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அண்மை ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.
கல்லீரலை அழற்சியில் இருந்து பாதுகாக்கவும், வயிற்றைப் பாதிப்பில் இருந்து பாதுகாக்க உதவுவதுடன், புற்றுநோய்க்கு எதிராக போராடவும் சிக்கரி உதவுகிறது.
சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துவதில் காபிக்கு கணிசமான பங்கு இருப்பதை தற்போதைய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. சிக்கரியும் சேரும்போது இன்னும் சிறப்புதான்.
ஏற்கனவே சர்க்கரைநோய் இருப்பவர்கள் காபி சாப்பிடலாமா என்றால், சாப்பிடலாம். ஆனால் இந்த நிலையில், காபி சாப்பிடுவதன் மூலம் அவர்களுடைய இரத்த சர்க்கரை அளவு குறையுமா? என்பது குறித்த தற்போதைய சாதகமான ஆய்வுகள் எதுவும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக