ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

குழந்தையின் பார்வை - ஒரு பயணம் போவோமா!

 

             குழந்தையின் பார்வை - ஒரு பயணம் போவோமா!

 

குழந்தையின் பார்வை - ஒரு பயணம்

 

நீ சிரித்தால் சிரிப்பழகு.  சிரிக்க வேண்டாம். குழந்தையைப் பார்த்தாலே அழகுதானே. சிரித்தால் கேட்க வேண்டுமா! குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அதன் செய்கைகளால் மனம் இலகுவாகிவிடும். தன்னுடைய சிரிப்பால் தன்னைச் சுற்றியுள்ள உலகையே மகிழ்விக்கிறதாம் குழந்தை என்கிறார் பாரதிதாசன்.  

குழந்தை பிறந்த சில நாட்களிலேயே சில பெற்றோர் சொல்வார்கள். பிள்ளை என்னைப் பார்த்து சிரிக்குதுங்க. நல்லா பார்க்குதுங்க. கரெக்டா அடையாளம் கண்டுகொள்கிறது என்று. அப்படியெல்லாம் இல்லை. குழந்தைகள் பிறக்கும்போதே முழுமையான பார்வைத்திறனுடன் பிறப்பதில்லை. பிறந்தவுடன் பெரியவர்களைப் போன்றோ வளர்ச்சியடைந்த குழந்தையைப் போன்றோ குழந்தையால் பார்க்க முடியாவிட்டாலும் ஓராண்டிலேயே அதன் பார்வை பல மாற்றங்களைப் பெறுகிறது. அதே சமயம் ஒவ்வொரு குழந்தையும் ஒரே மாதிரி இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பிறந்தவுடன்  சில வாரங்களுக்கு கண்ணின் பாப்பா ( Pupil ) சுருங்கி  இருக்கும். பிறந்தவுடன்  வெளிப்புறத்தில் காணப்படும் பிரகாசமான ஒளியை எதிர்கொள்வதைத்தடுக்க இது உதவும்.

பிறந்த குழந்தையால் அடுத்து பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை ஓரளவு பார்க்க முடியும். அவர்களது கவனம் 8 முதல் 10 அங்குலங்கள் அல்லது பெற்றோரின் முகத்துக்கான தூரம் வரை இருக்கும். மையப் பார்வையைப் பொறுத்தவரையில் வளர்ச்சி நிலையில் இருக்கும். ஓரிருவாரங்களில் விழித்திரை வளர்ச்சி அடையும். அதன் பின் கண்ணின் பாப்பா சற்று விரிவடையும். இப்போது குழந்தைக்கு ஒளி, இருட்டு, வடிவங்கள் ஓரளவு தெரியும்.

ஒரு மாதத்தில் குழந்தை பெற்றோர் மீது கவனம் செலுத்த முயற்சிக்கலாம். மூன்று அடி வரை பிரகாசமான நிறமுள்ள பொருட்களால் கவரப்படலாம்.

 

மாறுகண் தோற்றமா?

 

முதல் இரண்டு மாதங்களில் குழந்தையின் கண்கள் இரண்டிலும் ஒருங்கிணைப்பு இல்லாத மாதிரி தோன்றலாம். அதாவது பார்ப்பதற்கு மாறுகண் ( Squint ) போன்று காட்சியளிக்கலாம். இது சாதாரண ஒன்றுதான். நாளாக நாளாக சரியாகிவிடும். இதைப் பார்த்து சில சமயங்களில் பெற்றோர் கண் ஒரு மாதிரியாக இருக்கிறதே என்று பயப்படுவார்கள்.  பயம் எல்லாம தேவையில்லை. இருந்தாலும் ஒருவேளை தொடர்ந்து அப்படி இருந்தால் அதாவது கண் மூக்குபக்கமாகவோ காதுபக்கமாகவோ திரும்பி மாறுகண் மாதிரி இருந்தால் மருத்துவரிடம் சென்று காண்பித்து அய்யத்தைப் போக்கிக் கொள்வது நல்லது.

இரண்டு மாதத்தில் குழந்தையின் கண்களில் நல்ல ஒருங்கிணைப்பு ஏற்படுவதால் நகரும் பொருட்களின் மீது குழந்தையின் கவனம் ஈர்க்கும். மூன்று மாதத்தில் நகரும் பொருட்களின் மீது பார்வையைத் தொடரவும் முடியும்.

 

அடையாளம் காண்பது எப்போது?

 

ஐந்தாவது மாதத்தில், ஒரு பொருள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை குழந்தையால் அடையாளம் காண முடியும். மேலும் முப்பரிமாணத்திலும் ( 3 D ) பார்க்க முடியும். இதனால் அருகிலும் தொலைவிலும் இருப்பதை தெளிவாக பார்ப்பதில் நல்ல முன்னேற்றம் தெரியும். வளர்ந்தவர்களைப் போல் இல்லாவிட்டாலும் நிறங்களும் ஓரளவு நன்றாக தெரியும்.

அறைக்குள் இருக்கும்போது பெற்றோரின் முகத்தை அடையாளங்கண்டு சிரிக்கலாம். ஒரு பொருளின் ஒரு பகுதியைப் பார்த்தாலும் நினைவில் வைத்திருக்கலாம். பொதுவாக எட்டாவது மாதத்தில் குழந்தை தவழத்தொடங்கும். இது அவர்களின் கை, கண் ஒருங்கிணைப்பால் மேலும் மேம்படுகிறது.

ஒன்பதாவது மாதத்தில் பொருட்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை குழந்தையால் நன்றாகத் தீர்மானிக்க முடியும். எழுந்து நிற்க முயற்சிப்பதும் இம்மாதத்தில்தான். 10 மாதக் குழந்தை கட்டைவிரலுக்கும் ஆட்காட்டிவிரலுக்கும் இடையில் ஒருபொருளைப் பற்றிக் கொள்ள முயற்சிக்கும்.

பன்னிரண்டாவது மாதத்தில் குழந்தைகள் பெரும்பாலும் தவழவும் நடக்கவும் முயற்சிப்பார்கள். இந்த மாதத்தில் குழந்தைகளின் ஆரம்ப நடைப்பழக்கத்தைவிட தவழ்வதற்கு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். சிறந்த கண் - கை ஒருங்கிணப்பை வளர்க்க  இது உதவும். குழந்தைகளால் இப்போது தூரங்களை துல்லியமாகத் தீர்மானிக்க முடியும். ஓரளவுக்கு தெளிவாக பொருட்களைத் தூக்கி எறியவும் முடியும்.

 

குழந்தைக்கு கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளங்காண்பது எப்படி?

 

பெரும்பாலும் குழந்தைகளுக்கு கண்ணில் பிரச்சினை ஏற்படுவதில்லை என்றாலும் சிலநேரங்களில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். குழந்தையின் கண்ணில் அசாதாரணமாக  கண்ணீர் வடியலாம். கண்சிவந்து இமை வீங்கியும்கூட காணப்படலாம். அப்படியிருந்தால் அது விழிவெண்படல அழற்சி - Conjunctivitis ). இதற்கு சொட்டு மருந்து போட வேண்டி இருக்கும்.

சில சமயங்களில் கண்ணில் நீர் மட்டும் தொடர்ந்து வடியலாம். அது ஒருவேளை நீர்ப்பை அடைப்பாகவும் இருக்கலாம். பொதுவாக கண்ணில் சொட்டு மருந்து போட்டுவிட்டு கண்ணும் மூக்கும் சந்திக்கும் இடத்தில் லேசாக மசாஜ் செய்யச் சொல்வார்கள். இப்படிச் செய்தால் நாளடைவில் சரியாகிவிடும் கருவிழி பெரிதாக இருந்தால் பிறவி கண்நீர் அழுத்த உயர்வாக ( Congenital Glaucoma  ) இருக்க வாய்ப்புண்டு. பெரிய கண். அழகாக இருக்கிறது என்று நினைக்காமல் மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும்.

நகரும் பொருட்களை கண்காணிப்பதில் குழந்தையிடம் தாமதம் இருப்பதாக தெரிந்தாலும் கவனிக்க வேண்டும். கண்ணின் நடுவில் பாப்பா இயல்பான நிறத்திற்கு மாறாக வெள்ளையாக இருந்தால் ( White reflex ) உடனே காண்பிக்க வேண்டும். அது கண் புற்றுநோயாக (Eye Cancer ) இருக்கலாம்.

பிறந்த குழந்தையின் அறையில் மங்கலான இரவு விளக்கு இருக்கலாம். 8- லிருந்து 10 அங்குலத்திற்குள் குழந்தையை கவரும்படி பொம்மையை வைக்கலாம். அறைக்குள் இருக்கும்போது பெற்றோர் குழந்தையுடன் பேசலாம். 


 

குழந்தை பிடித்து இழுத்து விளையாட பொம்மைகளை தொட்டிலின் குறுக்காக மாட்டி வைக்கலாம். தரையில் அதிக நேரம் விளையாடலாம். பிளாஸ்டிக், மரத்தொகுதி விளையாட்டுக்களை குழந்தையின் கையில் கொடுத்து விளையாடச் செய்யலாம். அப்படி விளையாடும்போது சத்தமாக பேசி குழந்தையுடன் விளையாடவும்.

குழந்தையின் காட்சி நினைவகத்தை ( Visual Memory ) மேம்படுத்த பொம்மைகளை வைத்தோ உங்கள் முகத்தினை வைத்தோ ஒளிந்து விளையாடலாம். குழந்தையின் சொல் உச்சரிப்பு திறன் வளர்வதற்கு குழந்தையுடன் பேசும்போது பொருட்களின் பெயரினை சொல்லி பேசலாம். தவழவும் ஊர்ந்து செல்லவும் உற்சாகப்படுத்தலாம்.

குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

மு.வீராசாமி

மதுரை

 

 

புதன், 1 ஜனவரி, 2025

வினோத்துக்கு சர்க்கரைப் பிடிக்கும். ஆனால் விழித்திரைக்குப் பிடிக்காதே.

 

    வினோத்துக்கு சர்க்கரைப் பிடிக்கும். ஆனால் விழித்திரைக்குப் பிடிக்காதே.

 

மருத்துவத்துறையைச் சார்ந்த நண்பர். அறிவார்ந்தவர்தான். அதுவும் மருந்தைக் கையாளுபவர்தான். சர்க்கரை மெல்ல எட்டிப்பார்க்கும்போதே அவரை எச்சரித்தேன். அவருக்கு இன்னொருவர் சொல்லத் தேவையில்லைதான். இருந்தாலும் நட்புகருதி என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

சிகிச்சையின் அவசியம், குறிப்பாக பார்வையிழந்துபோதலின் ஆபத்து குறித்தெல்லாம் சொல்லி இருந்தேன்.

இருந்தாலும் அவர் அலட்சியமாகவேத்தான் அப்போது கேட்டார்.

அண்மையில் அவரைப் பார்த்தபோது கண்கலங்கினார். ‘நீங்கள் சொன்னபோதே கேட்டிருக்க வேண்டும். இப்போது கண்ணில் இரத்தம் கசிந்து ஏகப்பட்ட பிரச்சினையாகிவிட்டது. பார்வை கடுமையாகப் பாதித்துவிட்டது. கண்ணில் ஊசிபோட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருக்கிறேன்’’’’.’கேட்பதற்கு பரிதாபமாக இருந்தது.

 

என்ன சவால்

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு இந்த ‘சர்க்கரைநோய் விழித்திரைப் பாதிப்பு என்ற ( Diabetic Retinopathy ) பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் தொடர் சிகிச்சை செய்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவே.

இன்றைய நாளில்  ‘சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பினால் ஏற்படும் பார்வை பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. கண்மருத்துவமனையின் விழித்திரைப்பிரிவிற்கு சென்று அங்குள்ள கூட்டத்தைப் பார்த்தால் தெரியும், எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று.

 

பெரும்பாலும் இந்நோய் தாக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர், நோய் தமக்கு இருப்பது தெரியாமல், முறையாக சிகிச்சை செய்துகொள்ளாமல் விழித்திரையில் பாதிப்புக்குள்ளானவர்கள்தாம். இன்னொரு பகுதியினரோ நோய் இருப்பது தெரிந்தும் முறையாக சிகிச்சை செய்துகொள்ளாமல் பக்க விளைவுகளால் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். 

 

சர்க்கரைநோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள்:

சர்க்கரைக்கு முறையாக சிகிச்சை செய்துகொள்ளாதபோது கால்கள், நரம்புமண்டலம், மூளை, சிறுநீரகம், இதயம் இவற்றுடன் கண்களும் பாதிப்புக்கு உள்ளாகலாம்.

 

சர்க்கரைநோயினால் கண்களில் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது:

ஒரு பொருளைத் தெளிவாக பார்க்க வேண்டும் என்றால், நம்கண்ணில் உள்ள கருவிழி ( Cornea ), லென்சு,  விழித்திரை, பார்வை நரம்பு அனைத்தும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சர்க்கரைநோய் விழித்திரை பாதிப்பில் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் இரத்தக்கசிவு ஏற்படுவதால் பார்வை வெகுவாக பாதிக்கப்படுகிறது.

சில சமயங்களில் விழித்திரையில் புதிய ரத்தக்குழாய்கள் தோன்றலாம். இந்த புதிய ரத்தக்குழாய்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு அதனால் விழித்திரை அதன் அடுக்கிலிருந்து பிரிவதன்மூலமும் ( Retinal Detachment ) பார்வையிழப்பு ஏற்படலாம்.

 

பாதிப்பை சரிசெய்ய முடியுமா?

 

விழித்திரைப் பாதிப்பை முற்றிலும் சரிசெய்ய முடியாது.

சிலருக்கு Anti vascular endothelial growth factor எனப்படும் இரத்தநாள உள் அடுக்கு வளர்ச்சி காரணியைத் தடுக்கும் மருந்துகள் கண்ணுக்குள் ஊசி மூலம் செலுத்த வேண்டி வரும். இந்த மருந்து கண்ணுக்குள் ஏற்படும் வீக்கத்தையும், புதிய இரத்தநுண்குழாய் வளர்ச்சியையும் தடுக்க உதவும்.

பாதிப்பைப் பொறுத்து லேசர் சிகிச்சையும் செய்ய வேண்டி வரும். இதன் மூலமும் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். விழித்திரை ரத்தக்குழாய்களில் ஏற்பட்ட கசிவு, லேசர் சிகிச்சையின் மூலம் சரி செய்யப்படும். சிலருக்கு பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து ‘விட்ரெக்டமிஎன்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். விழித்திரைப் பிரிந்திருந்தால் அதற்கும் அறுவை சிகிச்சைத் தேவைப்படும்.

 

சர்க்கரைநோய் உள்ள எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுமா?

 

சர்க்கரைநோய் உள்ளவர்கள் அனைவருக்குமே ‘சர்க்கரைநோய் விழித்திரை பாதிப்புஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் சர்க்கரைநோய்க்கு முறையாக சிகிச்சை செய்துகொண்டு, கண்களையும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்துகொண்டு வருவதன்மூலம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.  


  கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் வேண்டாம்

 

சர்க்கரைநோய் விழித்திரை பாதிப்பைப் பொருத்தவரையில் வருமுன் காப்பதே சிறந்தது. நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, முறையான சிகிச்சை மூன்றும் அவசியம். விழித்திரைப் பாதிப்பின் ஆரம்ப நிலையில் எந்தவித அறிகுறிகளும் வெளிப்படாது என்பதால் ஆறுமாதத்திற்கு ஒருமுறை கண்களை கட்டாயம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் விழித்திரைப் பாதிப்பை பொருத்தவரையில் தொடக்கநிலையிலேயே கண்டறியவேண்டியதும், அதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை செய்ய வேண்டியதும் மிக மிக அவசியம்.

சர்க்கரைநோயுடன் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம், புகை பிடிக்கும் பழக்கம் ஆகியவை இருந்தால் சர்க்கரைநோய் விழித்திரைப் பாதிப்பு தீவிரமடைய வாய்ப்புண்டு. எனவே இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதுடன், புகையினையும், மதுவினையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கான புத்தாண்டு செய்தி என்னவென்றால் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்தால் தேவையில்லாமல் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். இந்த ஆண்டு மட்டுமல்ல வரும் ஆண்டும் உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாகவே இருக்கும்! 

 

மு.வீராசாமி 

முதல்நாள் 2025

மதுரை

 

 

 

வெள்ளி, 13 டிசம்பர், 2024

நீங்கள் சாப்பிடும் உணவு அதிக AGE உள்ள உணவா?

 

நீங்கள் சாப்பிடும் உணவு அதிக AGE உள்ள உணவா?

 

அதிக கிளைகேசன் முடிவு பொருட்கள்  ( Advanced Glycation end products - AGE )  உள்ள உணவுகள் குறிப்பாக அதிக பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள் சர்க்கரைநோயினை ஏற்படுத்துவதாக அண்மைக்கால ஆய்வு தெரிவிக்கிறது. அது என்ன அதிக AGE  உள்ள உணவு?

நம்முடைய உணவு பெரும்பாலும் ஆவியில் வேகவைத்தல், அவித்தல் முறையில்  செய்யப்படுபவை ஆகும். இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை இந்த தலைமுறையினரிடம் சொல்லிப்பாருங்கள். ஏதோ கேட்கக்கூடாததை கேட்ட மாதிரி ஓட்டம் பிடிப்பார்கள்.

கலர் கலராய் கண்டதை தூவி கண்ட எண்ணெயில் தூக்கிப் போட்டு வறுத்து எடுக்கும் வாயில் நுழையாத பெயர் கொண்ட உணவுகளை சப்பு கொட்டி அல்லவா சாப்பிடுகிறார்கள். சுவைக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் நாவின் நரம்புகளைத் தூண்டச் செய்கின்றன. தொடர்ந்து சாப்பிட அழைக்கின்றன.

இப்படி அதிக வெப்பநிலையில் சமைக்கும்போதோ நீண்ட நேரம் வறுக்கும்போதோ சர்க்கரை மூலக்கூறுகள் கொழுப்பு அல்லது புரத மூலக்கூறுகளுடன் சேரும்போது உருவாகும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை கிளைகேசன் முடிவு பொருட்கள் ( Advanced Glycation End products AGEs ) என்கிறார்கள். அது நீரிழிவு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக அண்மை ஆய்வுகள் மூலம் தெரிய வருவதாக சென்னை நீரிழிவுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர்.வி.மோகன் தெரிவிக்கிறார்.  ( தி இந்து ஆங்கிலபதிப்பு ; 09-10-2024)


 

அதிக கிளைகேசன் பொருட்கள் உள்ள உணவுடன் ஒப்பிடும்போது குறைந்த கிளைகேசன் பொருட்கள் உள்ள உணவுகள் சர்க்கரை நோய் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகளை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கிளைகேசன் பொருட்கள் உள்ள உணவுகளான பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் இவற்றினை எடுத்துக்கொள்வதன் மூலம் அதிக எடை மற்றும் பருமனான நபர்கள் தங்கள் உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கலாம். இதன் மூலம் செல்கள், திசுக்கள் சேதமடைவதை தவிர்க்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதையும் தடுக்க முடியும்.

அண்மைக்காலங்களில் கிரீன் டீ உடலுக்கு நல்லது என்று  சொல்லி பலர் சாப்பிடுகிறார்கள். உண்மையிலேயே நல்லதுதான். கிரீன் டீ அதிக கிளைகேசன் பொருள் ( AGEs)  உருவாவதைத் தடுக்கிறது.

நீண்ட நேரம் சமைப்பதையும், அதிக வெப்பநிலையில் சமைப்பதையும் தவிர்த்து மிதமான வெப்பநிலையில் சமைப்பதன்மூலம் அதிக AGEs உருவாவதைத் தடுக்கமுடியும். வறுப்பதை குறைத்து மாறாக வேகவைத்து சாப்பிடலாம். உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்வோம். நன்றாக வறுத்து சாப்பிடுவதைக் காட்டிலும் வேகவைத்து தாளித்து சாப்பிடலாம்.

அதிக கொழுப்பு, சிகப்பு இறைச்சி, துரித உணவு உட்பட அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கோழி, மீன்களுக்கு மாறுவது ஆரோக்கியத்துக்கு திரும்புவதற்கு சமம் .

கோழி, மீன் சாப்பிடும்போது அதில் வினிகர், எலுமிச்சை சாறு சேர்ப்பதைப் பார்த்திருக்கிறோம். ஹோட்டல்களில் தட்டில் அதனுடன் எலுமிச்சை சேர்த்தே தான் தருவார்கள். பலரும் அப்படி சாப்பிடுகிறார்கள் என்று நாமும் அப்படி சாப்பிடுகிறோம். காரணம் எல்லாம் தெரியாது. எல்லோரும் சாப்பிடுகிறார்கள். நாமும் சாப்பிடுகிறோம்.  எலுமிச்சை வினிகர் சேர்ப்பதன் மூலம் அதிக கிளைகேசன் பொருள் உருவாகாமல் தடுக்கப்படுக்கிறது.

இனிப்பான உணவுகளையும், பேக்கரி உணவுகளையும், வறுத்த உணவுகளையும் தவிர்த்து குறைந்த கிளைகேசன் பொருள் உள்ள  பச்சைக் காய்கறிகள், பழங்கள், ஆவியில் வேகவைத்த உணவுகள் போன்ற ஆரோக்கியமான உணவு பழக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீரிழிவு ஏற்படும் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும்.

சாக்லேட்களையும், கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களையும் பர்கர் போன்ற துரித சக்கை உணவுகளையும் பின்னால் ஏற்படும் நீரிழிவு போன்ற பிரச்சினைகள் எதுவும் தெரியாமலேயே நம் பிள்ளைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி சாப்பிடுவதை அந்தஸ்து அல்லது அதுதான் இந்தக் கால வழக்கம். அதாவது நாகரீகம் என்று  இந்த தலைமுறையினர் நினைக்கிறார்கள். யார் அவர்களுக்கு சொல்லி புரியவைப்பது. குடும்ப சூழல், வேலை நிமித்தம், வீக்கெண்ட் ட்ரீட் என்று பல காரணங்களால் வீட்டில் சமைப்பது வெகுவாக குறைந்து கொண்டுதான் வருகிறது. போதாதற்கு குழம்பு, ரசம், காய், கூட்டு பொரியல் வகைகளை 20, 30 ரூபாய்க்கு பார்சல் போட்டு தருவதும் வசதியாக போய்விட்டது.

‘அப்பாதிரைப்படத்தில் சமுத்திரக்கனி சொல்வார். நல்ல உணவைச் சாப்பிட்டால் ஆஸ்பத்திரிக்கு போகத் தேவையில்லை என்று. ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால் நோயை விலை கொடுத்து வாங்காமல் இருக்கலாமே. உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது. சர்க்கரைநோய் வந்தபின் மெனக்கெடுவதைக் காட்டிலும் வருமுன் தடுப்பது எளிதுதான் என்பது புரிய வேண்டுமென்றால் மீண்டும் இந்தக் கட்டுரையினை தொடக்கத்தில் இருந்து படியுங்கள்.