திங்கள், 29 ஜனவரி, 2024

அரைச் சர்க்கரை

 

குறுந்தொடர்

வாரம் 05

            சர்க்கரைநோய் உங்களை கவனிக்கு முன் நீங்கள் அதனை             கவனித்துவிடுங்கள். (எப்போதோ கேட்டது)

 

பலூடா ஐஸ்கிரீமும் பிரியாணியும். நினைக்கும்போதே சாப்பிடத்தூண்டும். கடைசியாக சாப்பிட்டதும் நினைவுக்கு வரலாம். இரண்டுமே அட்டகாசமானவை. ஆனால் நம்மூர் சரக்கல்ல. வந்தது பாரசீகத்தில் இருந்து. அதாவது இன்றைய ஈரான். எதற்கு இப்போது பாரசீகம்?



 

அந்த பாரசீகத்தில் 8 ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில்  மருத்துவர்களான ரேசஸ், அவிசென்னா போன்றோர் பிரபலம். சீனா, எகிப்து, கிரேக்கம், இந்தியா போன்ற நாடுகளில் வழக்கத்தில் இருந்த பாரம்பரிய மருத்துவமுறைகளை தெரிந்து கொண்டும் தங்கள் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும்  சிகிச்சை செய்திருக்கிறார்கள்.

இதில் அபு அலி அல்-ஹூசெய்ன் இபின் அல்லா இபின் சீனா- பெயர் நீள்கிறதா. சுருக்கமாக அவிசென்னா. இவர் பாரசீகத்தைச் சார்ந்த புகழ்பெற்ற மருத்துவர் மட்டுமல்ல மெய்யிலாளரும்கூட. பல்துறை வல்லுனராக இருந்ததுடன் போர்வீரராகவும் இருந்திருக்கிறார்.

அவருடைய காலத்தில் மருத்துவ பிரச்சினைகள் அதிகமாக இருந்திருக்கும்போலும். ஏனெனில் அவர் எழுதிய 450 நூல்களில் கிடைக்கப்பெற்றவைகளில் நாற்பதும் மருத்துவம் சார்ந்தவை எனும்போது அப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது. சர்க்கரைநோயும் அதில் விதிவிலக்கல்ல. அதைப்பற்றி நிறைய பேசி இருக்கிறார். பதிவு செய்திருக்கிறார். 


 

தொற்றுநோய்களை கண்டறிந்து வகைப்படுத்தி கட்டுப்படுத்தும் முறைகளையும் சொல்லி அன்றைய மருத்துவத்துறைக்கு பெரிய பங்களிப்பும் செய்திருக்கிறார்.

அவர் எழுதிய மருத்துவ நூல்களுள் ‘மருத்துவ நெறிமுறைகள்முக்கியமானதாக பேசப்படுகிறது. அரபு மொழியில் எழுதப்பட்ட இந்நூல் பிறமொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பிறகே பலரையும் இது சென்றடைந்துள்ளது. நீரிழிவுக்கு அவர் 84 வகையான மருந்துகளை பயன்படுத்தி இருக்கிறார். கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமாக சொல்லி இருக்கிறார்.

  

இந்தக் கட்டுரையினை எழுதிக் கொண்டிருக்கும்போது வானொலியில் ஆத்திசூடியில் திரு.ஜெயராமன் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. நெருப்பை நெருப்பால் அணைப்பது பற்றி பேசினார். பசி என்ற நெருப்பினை உணவு என்ற நெருப்பினால் தானே அணைக்கிறோம். வள்ளலாருடன் தொடர்புபடுத்தி பேசிக் கொண்டிருந்தார். ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் என்பது ஹோமியோபதியின் அடிப்படை. 

ஆனால் அவிசென்னாவின் மருத்துவம் இதற்கு மாறானது. எதிர்-எதிர் என்ற கொள்கையின்படி நீரிழிவுக்கு சிகிச்சையை பரிந்துரைத்தார்.  சிகிச்சையுடன் உணவையும் முறைப்படுத்தி இருக்கிறார். நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சையில் உணவு சிகிச்சையின் பங்கை அவிசென்னா வலியுறுத்தியுள்ளார்.

யாரிடமாவது நல்ல சத்தான உணவு சாப்பிடுங்கள் என்று சொன்னால் ஏதோ வேறு கிரகத்தில் இருந்து வந்தவரைப்போல மேலும் கீழ்தானே பார்க்கிறார்கள்.வறுத்த உணவு, அவசரகதி உணவு (fast food ) குப்பை உணவு ( Junk food ) தானே அவர்களின் விருப்பமான உணவுகளாக இருக்கிறது. வீடுகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் குறிப்பாக கீரைகளின் பயன்பாடு வெகுவாக குறைந்துபோய்விட்டது.

அவிசென்னாவின் மருத்துவம் ஒருவரின் சுபாவத்தை ( இயல்பு ) அடிப்படையாகக் கொண்டது. நீரிழிவினைக் கட்டுப்படுத்த நலமான வாழ்க்கைமுறை ( healthy lifestyle) , ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார். இன்றைய மருத்துவர்கள் சொல்வதும் அதைத்தானே.

அவிசென்னாவின் மருத்துவமுறைகள், பரிந்துரைகள் மத்திய ஆசியாவின் சில பகுதிகளில் இன்றும் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் யுனானி மருத்துவமுறைக்கு அடித்தளமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். நீரிழிவு சிகிச்சைக்கு அவர் பரிந்துரைத்த மருந்துகள் பற்றிய ஆய்வு இன்றும் ஆய்வாளர்களால் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டும் வருகிறது.

மூலிகை மருத்துவத்தின் செயல்பாடுகள் அவிசென்னாவால் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் நவீன மருத்துவம் அதை புறந்தள்ளிவிட்டதாகவே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சர்க்கரைநோயில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் அன்று எப்படி இருந்தது? அது என்ன தாயோயின் சிகிச்சை.? பார்க்கலாம் அடுத்தவாரம்

தொடரும்.,

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய  ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்

4. ஹோமியோபதி பற்றி ரத்தினச்சுருக்கமாக தமிழில் தந்துதவிய மதுரையின் மூத்த மருத்துவர். என் அண்ணன் டாக்டர்.எஸ்.கேசவலு

5. சென்ற வாரம் கோவில்வெண்ணிக்கு சென்று தரவுகளைத் திரட்டித் தந்தமைக்கு நன்றி சொல்ல மறந்த தம்பி திரு. எஸ்.காதர்பாபுக்கு .

 

(கட்டுரைத் தலைப்புடன் தொடர்பில் இருக்க சர்க்கரைநோயும்-நீரிழிவு நோயும் இரண்டுமே தேவை கருதி பயன்படுத்தப்படுகிறது.)

திங்கள், 22 ஜனவரி, 2024

அரைச் சர்க்கரை

 

                 

குறுந்தொடர்

 

04

 

கரிகால்சோழனுக்கு திருப்புமுனையை தந்து உயர்வினைத் தந்த வெண்ணிப்பறந்தலைப்போர் நினைவிருக்கலாம்சேரனையும் பண்டியனையும் வேளிர்களையும் தூள்தூளாக்கி வெற்றி வாகை சூடிய தளம். தஞ்சைக்கு அருகில் திருவெண்ணியூர் என்ற அதன் இன்றைய பெயர் கோவில்வெண்ணிஇங்குள்ள வெண்ணிக்கரும்பேஸ்வரர் கோயிலில் இறைவன் கரும்புக்கட்டுகளைச் சேர்த்து வைத்து கட்டினாற் போல லிங்க அமைப்பில் இருப்பதாக கோயில் குருக்கள் தெரிவிக்கிறார்.

 

இறைவனை வெண்ணிக் கரும்பே’ என்று சம்பந்தர் பாடுகிறார். இந்தக் கோயிலில் வழிபட்டால் சர்க்கரைநோய் தீரும் என்பது நம்பிக்கை.  ஒரு நாளில் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையா இது கோயிலோ பழமையானது. வழிவழியாகத்தானே இந்தக் கருத்து தொடர்ந்திருக்கும். கோயிலைப் பற்றிய கல்வெட்டுக்கள், பதிகங்கள் என்று சான்றுகள் இருக்கின்றன. சர்க்கரைநோய் அன்று ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம்அதிலும் ஒரு சிறப்பு என்னவென்றால் கரும்பினை மூலவரிடம் காண்பித்து கோயிலுக்கு சர்க்கரை நோயாளிகள்  வந்து போனால் தீரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. 


 

 

நடைப்பயிற்சி போ என்றால் யார் போகிறார்கள். நேரம் இல்லை. கால் வலிக்கிறது. நாளைக்கு போகலாம். இந்த நாளை என்பது எந்த ஆண்டில் என்பது அவர்களுக்கேத் தெரியாது. இப்படி போகாததற்குரிய காரணங்களைத் தேடித் தேடி சொல்வார்கள். அதனால்தான் இப்படி சொல்லி வைத்திருக்கிறரார்கள் போலும்.  நம்பிக்கையின் அடிப்படையிலாவது  வருவார்கள் அல்லவா.

 

உடற்பயிற்சி தானே மருத்துவர்கள் சொல்வதும். வந்துவிட்டு சும்மா செல்வார்களா. கோயிலையும் சுத்துவார்களே. நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்புலம் இருக்கத்தான் செய்கிறது.

 

உண்மையிலேயே மருத்துவக் கடவுளாகப் போற்றப்பட்டவர் ஒருவர் இருக்கிறார். பண்டைய எகிப்தில் அரசவையில் தலைமை அமைச்சராக இருந்தவர் இம்கோதெப். நீரிழிவு குறித்து பேசியும் இருக்கிறார். அவர் ஒரு சிறந்த கட்டிடக் கலைஞர் மட்டுமல்ல மாயாஜாலக்காரரும்கூட. அதிலும் சிறந்த மருத்துவர். நீரிழிவு குறித்து ஈபர்ஸ் பாபிரஸ் சொல்லும் பாலியூரியாவுடன் இவர் ஒத்துப் போகிறார். 

 

அலெக்ஸாண்டிரியாவில் படித்து ரோமில் மருத்துவம் செய்த கிரேக்க மருத்துவர் கப்படோசியாவின் அரேடியஸ் என்பவர். மனிதர் அந்த நாட்களிலேயே  8 மருத்துவ புத்தகத்தை எழுதி இருக்கிறார். காலம் கி.பி.2 ஆம் நூற்றாண்டு. ஹிப்போகிரேட்டிசுக்கு அடுத்து போற்றப்படக்கூடியவராக இருந்திருக்கிறார்.

 


 

 

நீரிழிவு - Diabetes என்ற சொல்லினை முதலில் பயன்படுத்தியவர் இவரே. அரேடியஸுக்கு முன் கிரேக்க மருத்துவர்கள் சிலர் நீரிழிவு பற்றி கருத்துக்கள் தெரிவித்திருந்தாலும் நீரிழிவுக்கு தெளிவாய் விளக்கம்கொடுத்தவர் இவர்தான்அவர் எழுதிய Acute and Chronic Diseases என்ற புத்தகத்தில்தான் இதை குறிப்பிடுகிறார். Diabetes என்கிற இந்த கிரேக்க சொல்லுக்கு தசையினையும் எலும்பினையும் உருக்கி சிறுநீரில் வெளியேற்றுதல் என்று பொருள் சொல்கிறார்கள்.

 

காற்று, வெப்பம், குளிர்ச்சி, ஈரப்பதம், வறட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது  அவருடைய மருத்துவமுறை. கூடுதல் தகவல். தொழுநோய், ஆஸ்துமா, கை கால் வலிப்பு, கீல்வாதம், நிமோனியா, புற்றுநோய் குறித்தும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

 

நீரிழிவைப் பற்றி அவர் சொல்வதை அப்படியே பாருங்கள். ஒருபுறம் அடிக்கடி சிறுநீரை வெளியேற்றிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு புறம் அதீத தாகத்தால் நீரினைக் குடித்துக் கொண்டே இருக்கும் நிலை. இரண்டையுமே நிறுத்த மாட்டார்கள். நாளடைவில் தளர்ந்து மெலிந்து போவார்கள். நோயினைக் கட்டுப்படுத்தாவிட்டில் மரணம் விரைவாக வரும் என்று சொல்லி இருக்கிறார்.

 

வசதி வாய்ப்பு அறிவியல் மருத்துவ வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்திலேயே எப்படி அவரால் இவ்வளவு தெளிவாக விளக்க முடிந்தது?   மருத்துவ உலகம் இன்றும் வியக்கத்தான் செய்கிறது.

 

இருக்கட்டும். பொதுவாக காபி, டீ அரைச் சர்க்கரையில் சாப்பிடுவதுதான் வழக்கம். அதுவும் வெளி இடங்களில். இல்லையென்றால் தூக்கலாக இருக்கவேண்டும் என்பதற்காக சீனியை அள்ளிப் போட்டுவிடுவார்கள்.

 

நேற்று இரவு சென்னையில் இருந்து பாண்டியனில் திரும்புமுன் எதிரில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் காபி அரை சர்க்கரை என்று கேட்டபோது சர்வர் கேட்டார். உங்களுக்கு சர்க்கரையா ?

 

தொடரும்.

 

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்

 

திங்கள், 15 ஜனவரி, 2024

அரைச் சர்க்கரை

குறுந்தொடர்

 சர்க்கரை நோய் பற்றிய வியப்பூட்டும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று செய்திகள்

 03 

‘சர்க்கரைப் பொங்கலை எடுத்து எடுத்து சாப்பிடாதீங்கன்னா கேட்கிறீங்களா? சர்க்கரை கூடிருக்குன்னு ஏற்கனவே டாக்டர் உங்களை சத்தம் போட்டிருக்கிறார். வாயைக் கட்டுப்படுத்திறீங்களா. என்னைக்குத்தான் சொல்றதை கேட்கிறீங்க. சாப்பிட வேண்டியது. அப்புறம் கஷ்டப் படவேண்டியது’. கணவனுக்கோ மனைவிக்கோ சர்க்கரை நோய் இருந்தால் பொங்கல் திருநாளான இன்று வீடுகளில் இது சாதாரணம். 

இந்த தொடருக்காக மூத்த மருத்துவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சுவையான செய்தி ஒன்றினை பகிர்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன் அவருடைய சிறிய கிளினிக்கில் இரவு கடைசியாக வந்த நோயாளியின் 2 வயது குழந்தை ஒன்று சிறுநீர் கழித்ததாம். இரவு நேரமாகி விட்டதால் அப்படியே பூட்டிவீட்டு சென்றுவிட்டார்களாம்.

 மறுநாள் காலை கிளினிக்கைத் திறந்த பணியாளர், குழந்தையின் சிறுநீர் காய்ந்துபோய் எறும்பு மொய்த்திருப்பதைப் பார்த்திருக்கிறார். அது அவருக்கு அசாதாரணமாக தெரிந்திருக்கிறது. பிரச்சினை இருக்கலாம் என்று கருதி மருத்துவருக்கு உடனே தகவல் தந்தாராம். பெற்றோரிடம் தகவல் சொல்லி குழந்தையை உடனே வரவழைத்து சர்க்கரையை ஆய்வு செய்ததில் குழந்தையின் சர்க்கரை 400க்கு மேல். சர்க்கரை உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 வயதில் ஆரம்பித்த இன்சுலின் இன்றும் தொடர்கிறதாம்.

 

இதைப்போன்றுதான் அன்றும் நடந்திருக்கும் போலிருக்கிறது. நடந்தது இந்தியாவில். சுமார் 3700 ஆண்டுகளுக்கு முன்பு யாரோ ஒருவரின் சிறுநீர் கரும்பினைப் போன்று தித்திப்பாய் இருந்து எறும்புகளைக் கவர்ந்திருக்கிறது. 

அதைப் பார்த்த ஒருவர் வியந்து கவனித்திருக்கிறார். பார்த்தவர் சுஸ்ருதா. மிகச் சிறந்த பண்டைய இந்திய மருத்துவர். அதற்கு மதுமேகம் எனப் பெயரிட்டிருக்கிறார். மது என்றால் தேன். அதாவது தேன் சிறுநீராம். ( Honey urine ). நீரிழிவினைப் பற்றி இந்தியாவில் பதிவான முதல் வரலாற்று பதிவு இதுதான்.

 ‘சுஸ்ருத சம்ஹிதை’ என்ற மருத்துவ நூலினை எழுதி இருக்கும் சுஸ்ருதா, அன்றே ஆயுர்வேதம், அறுவை சிகிச்சை குறித்து விரிவாக பேசி இருக்கிறார். இந்திய அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படும் இவரைப் பற்றி ஏற்கனவே ‘நாற்பது வயதில் நயாகரா பார்வை’ தொடரிலும் பார்த்திருக்கிறோம்.

 ஆக அன்று சர்க்கரை நோயினை சோதிக்க எறும்புகள்தான் உதவி இருக்கின்றன. எறும்புகள் சிறுநீரால் கவரப்பட்டால் சர்க்கரை உறுதி. அன்றைய ஆய்வக சோதனை அதுதான். சிறுநீரினை சுவைத்தும் நோயின் தன்மை பற்றி சொல்வதற்கென்று ஆட்கள் இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

சுஸ்ருதாவும், இன்னொரு பண்டைய மருத்துவரான சரகரும் இரண்டு வகை சர்க்கரை குறித்து பேசி இருக்கிறார்கள். அவை இன்றைய சர்க்கரை வகை 1 ( Type 1 ) , சர்க்கரை வகை 2 ( Type 2 ) உடன் ஒத்துப் போவது ஆச்சரியமான செய்தி. 

குறைந்த வயதில் ஒல்லியாக இருப்பவர்களைப் பாதித்தால் அது வகை 1ஆம்.

 சற்றே வயதானவர்கள், வசதியானவர்கள், அதிகம் சாப்பிடுபவர்களாக, உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களாக உடற்பருமனாக இருப்பவர்களுக்கு ஏற்பட்டால் அது வகை 2.

 தொடரினைப் படித்துவிட்டு நண்பர் ஒருவர் சொன்னார். கடைசியில் என்ன சொல்லப்போறீங்கன்னுதான் தெரியுமே. நடைப்பயிற்சி செய்யுங்க, உடற்பயிற்சி செய்யுங்கன்னு சொல்லப் போறீங்க. வேற என்ன புதுசா சொல்றதுக்கு இருக்கு. 

இப்பொழுது இல்லை. அதையும் அப்போதே சொல்லிவிட்டார்கள் நண்பர்களே. சுஸ்ருதா தன்னுடைய சிகிச்சையில் மருந்துடன் உடற்பயிற்சியினையும் பரிந்துரைத்து இருப்பதுதான் வியப்புக்குரிய விசயம். நாம் எதையும் புதிதாய் சொல்லவில்லை. நம் முன்னார்கள் சொல்லிச் சென்றதைத்தான் மேம்படுத்திச் சொல்கிறோம். 

அதிகமாக போகும் சுவையற்ற சிறுநீரினை பற்றியும் கூட சுஸ்ருதாவும் சரகரும் பேசி இருக்கிறார்கள். நவீன மருத்துவம் சொல்லும் இந்த Diabetes Insipidus என்பதை அன்று அவர்கள் ‘உடக்மேஹா’ என்று சொல்லி இருக்கிறார்கள். 

காலங்கள் மாறுபடலாம். ஆனால் கருத்துக்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருப்பது ஆச்சரியம்தான். 

அதுசரி. சம்பந்தர் பாடிய சிவன் கோயிலுக்கும் கரும்புக்கும் ஏன் சர்க்கரைநோய்க்கும் கூட தொடர்பு இருக்கிறது தெரியுமா? 

அந்த இடமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 

பார்க்கலாம் அடுத்த வாரம். 

நன்றியுடன் உதவியவை: 1. டாக்டர்.வி.மோகன் எழுதிய ‘Making excellence a Habit’ & ‘Banding, Bose And Beyond’ புத்தகங்கள். 

2. Indian Medical Gazette. 

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்.

திங்கள், 8 ஜனவரி, 2024

அரைச் சர்க்கரை

அரைச் சர்க்கரை 

02 

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் கமலிடம், ‘சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன? என்று ஆங்கிலத்தில் கேட்பார்’. அதற்கு கமல், பாலியூரியா, frequent urination அதாவது அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்று திக்கி திணறி சொல்வதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அந்த பாலியூரியா பற்றி அந்தக் காலத்திலேயே பேசி இருக்கிறார்கள் என்பதுதான் வியப்பான செய்தி.

 நைல் நதிப் பள்ளத்தாக்கில், 3500 ஆண்டுகளுக்கு முன்பு அந்த எகிப்தியருக்கு சிறுநீர் பிரச்சினை. அடிக்கடி போய்க் கொண்டிருந்தது. அதை என்னவென்று ஆய்ந்து கட்டுப்படுத்துவதற்குரிய முயற்சிகளை அன்றைய மருத்துவர்கள் மேற்கொண்டார்கள். இது போன்ற பிரச்சினை பலருக்கும் இருந்திருக்கிறது போலும். அதனாலேயே அதை அழகாய் தெளிவாய் ஆவணப்படுத்திச் சென்றிருக்கிறார்கள். என்ன பிரச்சினை, அதன் தன்மை, என்னவகை மருந்து கொடுத்தோம்? என்பன போன்ற விபரங்களுடன். பெரும்பாலும் தாவரங்கள், விலங்கு உறுப்புக்கள், கனிமங்களைக் கொண்டு சிகிச்சை செய்திருக்கிறார்கள். அவற்றில் சில இன்றும் அதே பயன்பாட்டில் இருப்பது வியப்புதான். 

அவர்களுடைய அன்றைய பேப்பர் பாபிரஸ். நைல்நதி ஓரம் விளைந்த பாபிரஸ் என்ற நாணல் வகை செடிகளை கூழாக்கித் தயாரிக்கப்பட்ட தடிமனான காகிதம். அவ்வளவுதான். அதில் நாணல் கொண்டு எழுதி இருக்கிறார்கள். 

அந்த தடிமனான காகிதத்தில் வரலாற்றுக் குறிப்புக்கள், கணிதக் குறிப்புக்கள், மருத்துவக் குறிப்புக்கள் அனைத்தையும் எழுதி பிரமிடுக்குள் பத்திரப்படுத்திச் சென்றிருக்கிறார்கள் அந்த நைல்நதி நாகரிக மக்கள். ஆவணப்படுத்திய மருத்துவத் தொகுப்பினை ஈபர்ஸ் பாப்பிரஸ் என்கிறார்கள். 

இதில் நோய்கள், காயங்களின் அடிப்படையில் மருத்துவ பரிந்துரைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதை எழுதியது மருத்துவராக இருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சுமார் 30 செ.மீட்டர் உயரமும் 20 மீட்டர் நீளமும் கொண்ட 110 பக்க ஆவணமாக சுருட்டி வைத்து பயன்படுத்துவது போல் அமைத்துள்ளார்கள். 

இன்றைய சிறப்பு மருத்துவர்கள் போல ( super specialist doctors ) அன்றைய எகிப்திலும் கண்ணுக்கு, பல்லுக்கு, தலைக்கு, குடலுக்கென்று ஒவ்வொரு உறுப்புக்கும் தனித் தனியாக மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? வியப்புக்குரிய செய்திதான்.

 ஒரு உறுப்புக்கு சிகிச்சை செய்பவர் வேறு ஒரு உறுப்புக்கு மருத்துவம் செய்யவில்லையாம். இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியாக மருத்துவர் இருந்ததால் அன்றைய காலகட்டத்தில் எகிப்து முழுவதும் மருத்துவர்கள் நிறைந்திருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். வளர்ச்சி அடையாத காலத்திலேயே வளர்ந்த நாகரீகம்.

 ஈபர்ஸ் பாப்பிரஸ் தொகுதியில் நோய் அறிதல் பற்றி ஒன்று பேசுகிறது. சிகிச்சை முறைகள், இதயத்தின் செயல்பாடுகள், அறுவை சிகிச்சை, காயங்களைக் குணப்படுத்துவது என்று ஒவ்வொன்றும் ஒன்றைப்பற்றி விரிவாக பேசுகிறது. 

ஈபர்ஸ் பாபிரஸ் பேசும் பாலியூரியா பிரச்சினையை நீரிழிவு பற்றிய முதல் குறிப்பாக வரலாற்று ஆய்வாளர்களும் மருத்துவர்களும் இன்றளவும் ஏற்றுக் கொள்கிறார்கள். 

பாதுகாக்கப்பட்ட மருத்துவ ஆவணம். 

அவர்களுடைய அறிவுத்திறனை வியப்பதா அல்லது பத்திரப் படுத்திவிட்டுச் சென்ற பாங்கினை நினைத்து திகைப்பதா? 

ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்ததாகத்தான் இருக்கிறது வரலாறு. 

வரலாறு பேசும்.

 நன்றியுடன் உதவியவை: 

1. டாக்டர்.வி.மோகன் எழுதிய ‘Making excellence a Habit’ & ‘Banding, Bose And Beyond’ புத்தகங்கள்.

 2. Indian Medical Gazette 

 3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம் 



 

திங்கள், 1 ஜனவரி, 2024

அரைச் சர்க்கரை

                                                அரைச் சர்க்கரை 

சர்க்கரை நோய் பற்றிய வியப்பூட்டும் தெரிந்து கொள்ள வேண்டிய 

                                            வரலாற்றுச் செய்திகள்


 ”நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

 நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்

 நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் 

ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ” 

நாச்சியார் திருமொழியில் திருமாலிருஞ்சோலை பெருமாளுக்கு 100 அண்டா வெண்ணெய், 100 அண்டா அக்கார அடிசில் படைப்பதாக ஆண்டாள் வேண்டிக் கொள்கிறாள். ஆனால் ஆண்டாளுடைய இந்த நேர்த்திக்கடனை 300 ஆண்டுகள் கழித்து மகான் ஸ்ரீஇராமானுஜர்தான் நிறைவேற்றிருக்கிறார். இந்த அக்கார அடிசிலை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் சுவை தெரியும். சாப்பிடச் சாப்பிட இன்னும் வேண்டும் என்று தோன்றும். எங்கள் பக்கம் மதுரை அழகர்கோயிலிலும் திருச்சிராப்பள்ளி திருவரங்கத்திலும் பிரசித்தம். அண்மையில் வெளியான அன்னபூரணி திரைப்படத்தில்கூட நயன்தாரா, அக்கார அடிசிலின் சிறப்பினை புகழ்ந்து பேசுவதைப் பார்க்கலாம். 

சர்க்கரைநோய் தொடர் தொடக்கமே தித்திப்பாய் இருக்கிறது. புத்தாண்டு பிறந்திருக்கிறது அல்லவா. ‘ஸ்வீட்டான’ தொடக்கமாக இருக்கட்டுமே. மேலும் இது மார்கழி மாதம். அதுதான் இனிப்புடன் பாசுரமும் சேர்த்து. இப்படியும் எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு பலருக்கு கசப்பான செய்தி. மருந்து கசப்பாக இருந்தால் தேனுடன் கலந்து கொடுப்பதில்லையா! 

நீரிழிவு ஏனோ இன்றைய நவீன காலத்தில் ஏற்பட்டது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆச்சரியமான விசயம் என்ன்வென்றால் பல நூற்றாண்டு பாரம்பரியமிக்கது இந்த நீரிழிவு. ஆம். ஆதி காலத்தில் இருந்தே இருக்கிறது. 

இத்தொடரின் நோக்கம் தொடக்க காலத்தில் இருந்து சர்க்கரைநோய் பற்றி என்ன பேசி வருகிறார்கள், என்ன செய்தார்கள் என்பதை பகிர்வதே. அனைத்துமே வரலாற்று ஆவணங்கள் சொல்பவை.

 இது ஒரு பரஸ்பர புரிதல்- மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் நோய். வீட்டின் நுழைவாயிலின் நிலை தாழ்வாக இருந்தால் குனிந்து நுழைந்தால்தான் தலை தப்பிக்கும். இல்லையேல் தலையை ‘டங்கென்று’ பதம் பார்க்கும். அப்படித்தான் நீரிழிவும். நீரிழிவு நோயினை மதித்து மருத்துவர் சொல்கிற வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் சர்க்கரையும் அடக்கமாக சமத்தாக இருக்கும். இல்லையென்றால் அது வதைக்கும். பாடாய்ப்படுத்தும். அதாவது பாதிப்புக்களை ஏற்படுத்தும் (Micro vascular complications). இது தெரிந்த செய்திதான். 

‘கையில காசு இருக்கா?’ என்று மருத்துவர் கேட்பதில்லை. எந்த பிரச்சினைக்கு சென்றாலும் மருத்துவர் முதலில் கேட்பது, ‘சுகர் இருக்கிறதா என்று தானே’. 

நீரிழிவு பற்றி வரலாற்று ஆவணங்களைப் புரட்டினால் வியப்புக்கு மேல் வியப்பாகத்தான் இருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே இதனுடன் போராட்டம்தான். அதைப் பற்றித்தான் இத்தொடர் பேசப்போகிறது. தமிழில் வெளியாகும் முதல் தொடர். இது குறித்து தமிழில் இதுவரையில் விரிவாய் யாரும் பேசியதாகத் தெரியவில்லை. அதாவது தமிழில்.. 

இத்தொடரினை எழுதத் தூண்டியது சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர்.V.மோகன் அண்மையில் எழுதிய ‘Making excellence a Habit’ புத்தகமும், அவருடைய இன்னொரு புத்தகமான ‘Banding, Bose And Beyond’ புத்தகமும் கூடவே பழைய ‘Indian Medical Gazette’ ஆவணங்களைப் பார்க்க உதவிய அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணைய தளமும்தான். டாக்டர்.வி.மோகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. திங்கள்தோறும் இனி குறுந்தொடரில்.