திங்கள், 15 ஜனவரி, 2024

அரைச் சர்க்கரை

குறுந்தொடர்

 சர்க்கரை நோய் பற்றிய வியப்பூட்டும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று செய்திகள்

 03 

‘சர்க்கரைப் பொங்கலை எடுத்து எடுத்து சாப்பிடாதீங்கன்னா கேட்கிறீங்களா? சர்க்கரை கூடிருக்குன்னு ஏற்கனவே டாக்டர் உங்களை சத்தம் போட்டிருக்கிறார். வாயைக் கட்டுப்படுத்திறீங்களா. என்னைக்குத்தான் சொல்றதை கேட்கிறீங்க. சாப்பிட வேண்டியது. அப்புறம் கஷ்டப் படவேண்டியது’. கணவனுக்கோ மனைவிக்கோ சர்க்கரை நோய் இருந்தால் பொங்கல் திருநாளான இன்று வீடுகளில் இது சாதாரணம். 

இந்த தொடருக்காக மூத்த மருத்துவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சுவையான செய்தி ஒன்றினை பகிர்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன் அவருடைய சிறிய கிளினிக்கில் இரவு கடைசியாக வந்த நோயாளியின் 2 வயது குழந்தை ஒன்று சிறுநீர் கழித்ததாம். இரவு நேரமாகி விட்டதால் அப்படியே பூட்டிவீட்டு சென்றுவிட்டார்களாம்.

 மறுநாள் காலை கிளினிக்கைத் திறந்த பணியாளர், குழந்தையின் சிறுநீர் காய்ந்துபோய் எறும்பு மொய்த்திருப்பதைப் பார்த்திருக்கிறார். அது அவருக்கு அசாதாரணமாக தெரிந்திருக்கிறது. பிரச்சினை இருக்கலாம் என்று கருதி மருத்துவருக்கு உடனே தகவல் தந்தாராம். பெற்றோரிடம் தகவல் சொல்லி குழந்தையை உடனே வரவழைத்து சர்க்கரையை ஆய்வு செய்ததில் குழந்தையின் சர்க்கரை 400க்கு மேல். சர்க்கரை உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 வயதில் ஆரம்பித்த இன்சுலின் இன்றும் தொடர்கிறதாம்.

 

இதைப்போன்றுதான் அன்றும் நடந்திருக்கும் போலிருக்கிறது. நடந்தது இந்தியாவில். சுமார் 3700 ஆண்டுகளுக்கு முன்பு யாரோ ஒருவரின் சிறுநீர் கரும்பினைப் போன்று தித்திப்பாய் இருந்து எறும்புகளைக் கவர்ந்திருக்கிறது. 

அதைப் பார்த்த ஒருவர் வியந்து கவனித்திருக்கிறார். பார்த்தவர் சுஸ்ருதா. மிகச் சிறந்த பண்டைய இந்திய மருத்துவர். அதற்கு மதுமேகம் எனப் பெயரிட்டிருக்கிறார். மது என்றால் தேன். அதாவது தேன் சிறுநீராம். ( Honey urine ). நீரிழிவினைப் பற்றி இந்தியாவில் பதிவான முதல் வரலாற்று பதிவு இதுதான்.

 ‘சுஸ்ருத சம்ஹிதை’ என்ற மருத்துவ நூலினை எழுதி இருக்கும் சுஸ்ருதா, அன்றே ஆயுர்வேதம், அறுவை சிகிச்சை குறித்து விரிவாக பேசி இருக்கிறார். இந்திய அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படும் இவரைப் பற்றி ஏற்கனவே ‘நாற்பது வயதில் நயாகரா பார்வை’ தொடரிலும் பார்த்திருக்கிறோம்.

 ஆக அன்று சர்க்கரை நோயினை சோதிக்க எறும்புகள்தான் உதவி இருக்கின்றன. எறும்புகள் சிறுநீரால் கவரப்பட்டால் சர்க்கரை உறுதி. அன்றைய ஆய்வக சோதனை அதுதான். சிறுநீரினை சுவைத்தும் நோயின் தன்மை பற்றி சொல்வதற்கென்று ஆட்கள் இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

சுஸ்ருதாவும், இன்னொரு பண்டைய மருத்துவரான சரகரும் இரண்டு வகை சர்க்கரை குறித்து பேசி இருக்கிறார்கள். அவை இன்றைய சர்க்கரை வகை 1 ( Type 1 ) , சர்க்கரை வகை 2 ( Type 2 ) உடன் ஒத்துப் போவது ஆச்சரியமான செய்தி. 

குறைந்த வயதில் ஒல்லியாக இருப்பவர்களைப் பாதித்தால் அது வகை 1ஆம்.

 சற்றே வயதானவர்கள், வசதியானவர்கள், அதிகம் சாப்பிடுபவர்களாக, உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களாக உடற்பருமனாக இருப்பவர்களுக்கு ஏற்பட்டால் அது வகை 2.

 தொடரினைப் படித்துவிட்டு நண்பர் ஒருவர் சொன்னார். கடைசியில் என்ன சொல்லப்போறீங்கன்னுதான் தெரியுமே. நடைப்பயிற்சி செய்யுங்க, உடற்பயிற்சி செய்யுங்கன்னு சொல்லப் போறீங்க. வேற என்ன புதுசா சொல்றதுக்கு இருக்கு. 

இப்பொழுது இல்லை. அதையும் அப்போதே சொல்லிவிட்டார்கள் நண்பர்களே. சுஸ்ருதா தன்னுடைய சிகிச்சையில் மருந்துடன் உடற்பயிற்சியினையும் பரிந்துரைத்து இருப்பதுதான் வியப்புக்குரிய விசயம். நாம் எதையும் புதிதாய் சொல்லவில்லை. நம் முன்னார்கள் சொல்லிச் சென்றதைத்தான் மேம்படுத்திச் சொல்கிறோம். 

அதிகமாக போகும் சுவையற்ற சிறுநீரினை பற்றியும் கூட சுஸ்ருதாவும் சரகரும் பேசி இருக்கிறார்கள். நவீன மருத்துவம் சொல்லும் இந்த Diabetes Insipidus என்பதை அன்று அவர்கள் ‘உடக்மேஹா’ என்று சொல்லி இருக்கிறார்கள். 

காலங்கள் மாறுபடலாம். ஆனால் கருத்துக்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருப்பது ஆச்சரியம்தான். 

அதுசரி. சம்பந்தர் பாடிய சிவன் கோயிலுக்கும் கரும்புக்கும் ஏன் சர்க்கரைநோய்க்கும் கூட தொடர்பு இருக்கிறது தெரியுமா? 

அந்த இடமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 

பார்க்கலாம் அடுத்த வாரம். 

நன்றியுடன் உதவியவை: 1. டாக்டர்.வி.மோகன் எழுதிய ‘Making excellence a Habit’ & ‘Banding, Bose And Beyond’ புத்தகங்கள். 

2. Indian Medical Gazette. 

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக