புதன், 21 பிப்ரவரி, 2024

கிட்டப்பார்வை 01

 

        கிட்டப்பார்வையால் கிட்டக்கப் போய் பார்க்கும் பிள்ளை

 

கிட்டப்பார்வை பிரச்சினை குறித்து நிறைய பேசியாயிற்று. ஆனாலும் பிள்ளைகளின் பார்வைக்கு பெற்றோர் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை.

நேற்று வீட்டுக்கு குழாய் பிரச்சினையை சரிசெய்ய வந்தவர் பேச்சுவாக்கில் ஏழாவது படிக்கும் தன் மூத்தப் பிள்ளைக்கு இரண்டு மாதமாக கண்ணில் பிரச்சினை என்றார். பள்ளியில் கரும்பலகையில் ஆசிரியர் எழுதிப்போடுவது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கரும்பலகைக்கு கிட்டக்க கிட்டக்கப் போய் பார்த்து எழுத வேண்டி இருப்பதாகவும் பிள்ளை சொன்னதாக சொன்னார். ( கிட்டக்க-பக்கத்தில்; மதுரைப் பேச்சு)      

பிள்ளை சொல்லி இரண்டுமாதமாச்சு. பிள்ளையை டாக்டரிடம் அழைத்துச் சென்றீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார். எங்க சார், வீட்டு வேலையே சரியாகப் போய்விடுகிறது. நேரமே இல்லை என்றார். என்னத்தைச் சொல்ல!

தனக்கு இருக்கும் பிரச்சினையை பொதுவாக பிள்ளைகளால் சொல்லத் தெரியாது. அவர்களே நேரடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்து கொள்ளவும் முடியாது. பெற்றோர் கவனிக்காமல் வேறு யார் செய்வார்கள்?


 

பிள்ளைக்கு கண்பார்வை சரியாகத் தெரியாவிடில் பாடங்களை சரியாக படிக்க முடியாது. கற்பதில் பெரும்பகுதி பார்ப்பதன் மூலம்தான் நடைபெறுகிறது என்பது பலருக்குத் தெரியவில்லை. பார்வை தெளிவாக இல்லாவிட்டால் பிள்ளையால் தெளிவான பார்வை-காட்சியை உணர முடியாது. கல்வியில் பின் தங்க நேரிடும். அறிவுசார் குறைபாட்டிற்கும் வழிவகுத்துவிடலாம்.

மூளையின் சரியான வளர்ச்சியைப் பொறுத்து நலமான பார்வை அமையும். சில சமயங்களில் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு கண்ணின் வளர்ச்சியைப் பாதித்து பார்வையும் பாதிக்கலாம். மூளையில் ஏற்படும் குறைபாடு காரணமாக மூளைக்கு ஆக்சிஜன் செல்வது குறைந்து பார்வை புரணியைப் பாதித்து பார்வை நரம்பினையும் பாதிக்கலாம். இத்தகைய வளர்ச்சிக் குறைபாடுகள் நேரடியாக பார்வைகுறைபாட்டிற்கு வழிவகுக்கலாம்.

வீட்டுகுத் தேவையானதை எல்லாம் உடனே வாங்குகிறோம். கண்ட கண்ட பொருட்களை அமேசானில் தேவை இல்லாவிட்டாலும் வாங்கிக் குவிக்கிறோம். செல்போனில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனே கதறிக் கொண்டு அந்த பிரச்சினையை சரி செய்பவர் எங்கிருக்கிறார் என்று விசாரித்துத் தேடிக் கண்டுபிடித்து சரி செய்து கொள்கிறோம். ஆனால் பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துகிறோமா? பிள்ளை தனக்கு இருக்கும் பிரச்சினையை சொன்னதற்கு பாராட்டக்கூட வேண்டாம். அதற்குரிய தீர்வினை தரவேண்டியது பெற்றோர் கடமை அல்லவா. அவர்கள் பிறகு வேறு யாரிடம் போய் சொல்வார்கள்?

 

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர்( வி.ஓ)

நலவாழ்வு எழுத்தாளர்

மதுரை

திங்கள், 19 பிப்ரவரி, 2024

அரைச் சர்க்கரை

 

சர்க்கரைநோய் பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சொல்லும்                     குறுந்தொடர்

    

     டாக்டர்: உங்களுக்கு சர்க்கரை இருக்கா

     நோயாளி: சர்க்கரை இல்லை டாக்டர். ஆனால் சுகர் இருக்குன்னு                     சொல்லி இருக்காங்க.

         ( அடிக்கடி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்வு )

வாரம் 08

 

சர்க்கரைநோய்க்கு வயதென்ன?  அறிவியலில் வளர்ச்சி அடையவில்லை மருத்துவ முன்னேற்றமும் இல்லை. அந்தக் காலகட்டத்திலும் அப்போதைய அனுபவ அறிவில் இருக்கின்ற மூலிகைகளைக் கொண்டு சர்க்கரைநோய்க்கு  சிகிச்சை அளித்திருக்கிறார்கள். சர்க்கரைநோய் பற்றிய அவர்களுடைய அடிப்படை அனுமானங்கள் பலவற்றுடன் இன்றைய நவீன மருத்துவ உலகமும் ஒத்துப் போவது வியப்பானதுதான். சர்க்கரைநோயும் ஒரு தொடர்கதையாய் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

வரலாற்றுக் காலம் முடிந்து நவீன காலம் தொடங்கி இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் கிடைத்த வரலாற்று ஆவணச் செய்திகள் சர்க்கரை குறித்த சுவையான தகவல்களைத் தெரிவிக்கிறது. கடந்த 200 ஆண்டு கால சர்க்கரைநோய் செய்திகள் அனைத்துமே சுவையானவை.  சர்க்கரைநோய்க்கு மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படாத காலம்.

கி.பி. 1800 கால கட்டத்தில்  இந்தியா முழுவதும் இருந்து மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் தாங்கள் பார்த்த புது நோயாளியின் விபரம், அளித்த சிகிச்சை, அதன் அனுபவங்கள் மற்றும் மருத்துவச் செய்திகளை பரிமாறிக் கொள்ளும் களமாக இருந்திருக்கிறது இந்த இந்திய மருத்துவ இதழ்  ( Indian Medical Gazette ). போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியது.

கல்கத்தாவை மையமாகக் கொண்டு வெளிவந்த இந்த இதழ். மருத்துவர்களின் அன்றைய சமூக வலைதளம். தொலைபேசி இல்லை. இணையம் இல்லை. எங்கோ ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வினை பிறர் அறிய பல நாட்கள் ஆகும் சூழல். அப்படிப்பட்ட சூழலில் மருத்துவர்களின் விடிவெள்ளியாக இருந்து ஒருங்கிணைத்திருக்கிறது இந்த இதழ். 

  

அதில் உள்ள பதிவுகள் அனைத்துமே வரலாற்று ஆவணங்கள். அந்த காலகட்டத்தில் இருந்த நோய்ச் சூழல், மருத்துவ பிரச்சினைகள், அதை மருத்துவர்கள் கையாண்ட அணுகுமுறைகள் அனைத்தும் விரிவாக இருக்கின்றன. அதில் உள்ள மருத்துவர்களின் பங்களிப்புக்கள் அனைத்தும் அற்புதமானவை. அதை முழுமையாக படித்து தனியாக எழுதும் எண்ணமும் உள்ளது. தற்போதைக்கு சர்க்கரை...ஏறக்குறைய ஒவ்வொரு இதழிலும் சர்க்கரை பற்றிய செய்திகள் பரவலாக தொடர்கின்றன. முக்கியமான செய்திகள் மட்டும் இங்கே.

1867 – ல் டாக்டர். கமக்ஸ் நாத் அச்செர்ஜீ, இந்திய மருத்துவ இதழில் அவர் சிகிச்சை அளித்த இரண்டு சர்க்கரைநோயாளிகள் பற்றிய செய்திகளை பதிவிட்டிருக்கிறார். அவர் பார்த்த அந்த ஒருவர் உடல் பருமனாக இருந்திருக்கிறார். இனிப்பு அதிகம் சாப்பிடுபவராம். வசதிபடைத்தவராம். சர்க்கரைநோயாளியான அவருக்கு உடலில் கொப்பளங்கள்.

இன்னொருவருக்கு உடலில் கட்டி. இருவருக்குமே பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்த பிறகு அய்யம் ஏற்பட்ட பின்னரே சோதித்ததில் சர்க்கரை இருப்பது தெரியவந்தது என்று அவர் சொல்வதில் நமக்கு செய்தி இருக்கிறது.

இன்றும் இப்படித்தானே. வேறு ஏதாவது உடல்நலப் பிரச்சினைக்கு செல்லும்போதுதானே சர்க்கரை இருப்பது பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படுகிறது. இப்படிக் கண்டுபிடிக்கப்படுவதுதானே  அதிகம். அதே போல் உடல்பருமனுக்கும் சர்க்கரைக்கும் உள்ள தொடர்பு பற்றி இன்று நாம் அதிகம் பேசி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1871 –ல் பதிவான செய்தி. அந்த காலகட்டம் முழுவதும் கல்கத்தாவில் மத்திய மற்றும் உயர்தர குடும்பங்களில், குடும்பத்தில் ஒருவரேனும் சர்க்கரை நோயால் இறந்து போனதாக  தெரிவிக்கின்றது.

தொடரும் செய்திகள் அனைத்துமே சுவையானவை. அதில் ஒன்று சர்க்கரைநோய்க்கு ஆடைநீக்கிய பால் சிகிச்சை. வியப்பைத் தரும் அந்த செய்தி? வரும் வாரம் பார்க்கலாம்.

 

 

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய  ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்

 

 

.

 

திங்கள், 12 பிப்ரவரி, 2024

அரைச் சர்க்கரை

 

          சர்க்கரை நோய் பற்றிய வரலாற்று செய்திகள்

 

குறுந்தொடர்

வாரம் 07

 

     இனிப்பு இல்லா வாழ்வினை கசப்பாக நினைக்காதீர்கள்.

     சர்க்கரையைக் கட்டுப்படுத்தி நலமாக வாழ்வதே இனிமை.

                                                                                                           

மல்லிகை மணக்கும். சிறுநீர்? நமக்கு முன்னர் கழிப்பறையில் சிறுநீர் கழித்து சென்றவர் சரியாக நீர் ஊற்றாவிட்டாலே அடுத்து செல்பவரால் உள்ளே செல்ல முடியாது. மூக்கினைப் பொத்திக் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் தாமஸ் வில்லிஸ் செய்த செயலைப் பாருங்கள்.

17 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவராக போற்றப்பட்ட ஆக்ஸ்போர்டினைச் சார்ந்த இவர் சர்க்கரை நோயாளியின் சிறுநீர் இனிப்பாக இருக்கும் என்பதை தெரிவித்தார். எப்படி?

தன்னுடைய நோயாளியின் சிறுநீரை சுவைத்துப் பார்க்க துணிச்சல் வேண்டுமே? மனிதர் சுவைத்துப் பார்த்துதான் சொன்னார்.  சர்க்கரை, தேனைப் போன்று இனிப்பாக இருக்கிறது என்ற கமெண்ட்ஸ் வேறு. 

அவருக்கு எவ்வளவு ஆர்வம், ஈடுபாடு, ஆய்வுக் கண்ணோட்டம் இருந்திருந்தால் சுவைத்துப் பார்க்கத் துணிந்திருப்பார். அதுவரை எந்த மருத்துவரும் செய்யாத துணிகர செயல் அது.

1679 –ல் எழுதிய ‘மருந்துகள் பகுத்தறிவு என்ற நூலில் அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார். ஏற்கனவே நம் சுஸ்ருதா சர்க்கரை நோயில் சிறுநீர் இனிப்பாக இருக்கும் சென்று சொல்லி இருப்பதை பார்த்தோம். ஆனால் அந்த செய்தியை தாமஸ் அறிந்திருக்கவில்லை.  இவர் மீண்டும் இனிப்பு என்கிறார். 

 

ஆனால் அவரால் சர்க்கரை நோயாளிகளின் சிறுநீர் ஏன் இனிப்பாக இருக்கிறது என்பதை சொல்ல முடியவில்லை. அதற்குரிய காரணத்தை 100 ஆண்டுகளுக்குப் பிறகே சொன்னார்கள்.

சிறுநீரை சுவைத்துப் பார்த்து சொன்ன முதல் மருத்துவர் இவர்தான். Mellitus என்ற பதத்தை முதலில் உருவாக்கியவர் இவரே அதுவரை Diabetes   என்று மட்டுமே சொல்லி வந்ததை  Mellitus சேர்த்து   Diabetes   Mellitus என்று அழைத்தார். இனிப்பு என்ற பொருள்படும் இந்த Mellitus ஒரு லத்தீன் சொல்..

உணவு பழக்கத்தோடும் மனநிலையோடும் சர்க்கரை நோய்க்கு தொடர்ப்பு இருப்பதாக நினைத்தார். குறிப்பாக மனச்சோர்வினால் ஏற்படுவதாக கருதினார்.

மூளையின் செயல்பாடு மற்றும் நரம்பியல் குறித்தும் அவர் விரிவாக கூறி இருக்கிறார்.

நரம்பியல் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர். நொதித்தல், இரத்தம் ஏற்றுதல், காய்ச்சல், சிறுநீர், தசை இயக்கம், மூளையின் உடற்கூறியல், நரம்புகளின் விளக்கம் மற்றும் பயன்பாடு, வலிப்பு, ஸ்கர்வி, உட்பட பல தலைப்புக்களில் விரிவான கருத்துக்களைத் தெரிவித்த பல்துறை வித்தகரான தாமஸ் இறுதியில் நிம்மோனியாவால் காலமானார்.

தொடரும்.

( குறிப்பு- இது சர்க்கரை நோய் பற்றிய வரலாற்றுச் செய்திகளை மட்டுமே சொல்லும் ஒரு தொடர். )


திங்கள், 5 பிப்ரவரி, 2024

 

                          அரைச் சர்க்கரை

              சர்க்கரைநோய் பற்றிய வரலாற்றுச் செய்திகள்

குறுந்தொடர்

  .......சர்க்கரை என்பது

     வியாதியல்ல

     குறைபாடு என்று கூறுங்கள்........

கவிஞர்.வைரமுத்துவின் வரிகளில் இருந்து.

வாரம் 06

மக்கள்தொகையைப் போலவே சர்க்கரைநோயிலும் சீனாவுக்குத்தான் முதலிடம். இன்று போலவே அன்றும் சீனாவில் நீரிழிவு நோயாளிகள் அதிகம்தான் போலும். சர்க்கரைநோய் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் நிறைய கிடைத்துள்ளன. சர்க்கரைநோய் ஒரு தொடர் பிரச்சினைதான்.

அன்றைய சீன பாரம்பரிய மருத்துவம், நீரிழிவு போன்ற ஒரு நிலையை ‘சியோக்என்று அழைக்கிறது. அதிகரித்த பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் இனித்தல் போன்ற அறிகுறிகளை சொல்லி அதற்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள்.

சீனாவின் முக்கிய பேரரசர்களில் முக்கியமானவர் மஞ்சள் பேரரசர் ( Yellow Emperor )  என்று அழைக்கப்பட்ட ஹூவாங்டி. பண்டைய சீன மருத்துவத்தின் மிகச் சிறந்த புத்தகமாக போற்றப்படும் Classic of Internal Medicine என்ற இவருடைய  புத்தகத்தில் நீரிழிவு பற்றி குறிப்பிடுகிறார். உடல்பருமன், ஆரோக்கியமற்ற உணவு, மன அழுத்தம், உடலின் முக்கிய ஐந்து உறுப்புக்களின் செயல்திறன் குறைவு இவற்றுக்கும் நீரிழிவுக்கும் உள்ள தொடர்பினை கூறுகிறார். 


 

அன்றைய சீனாவில் சூய் வம்சத்தின் ஏகாதிபத்திய மருத்துவர் சாவோ யுவான்பாங் நீரிழிவுக்கு உடற்பயிற்சியை செய்யச் சொல்கிறார். தாயோனின் என்ற ஒரு வகை  பயிற்சியை செய்துவிட்டு சுமார் 120 படிகள் முதல் 1000 படிகள் வரை நடந்து அதன் பிறகு சாப்பிட வேண்டுமாம்.

தாயோயினின் பயிற்சி என்பது வேறு ஒன்றுமில்லை. நம்முடைய யோகாசனம் மாதிரிதான். மனதிற்கு புத்துணர்ச்சி தந்து உடலை நெகிழ்வடையச் செய்யும் ஒரு உடற்பயிற்சி. பண்டைய சீன பாரம்பரிய மருத்துவர்கள் நீரிழிவுக்கான ஒரு சிகிச்சைமுறையாக உணவுக்கட்டுப்பாட்டினையும் உடற்பயிற்சியினையும் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.


 

சீனாவில் கிடைத்துள்ள வரலாற்றுப் பதிவுகளில் சொல்லப்பட்டுள்ள நீரிழிவு சிகிச்சை முறைகள் தொடர்ச்சியாக பல மருத்துவர்களால் மேம்படுத்தப்பட்டு இன்றைய நவீன மருத்துவ உலகிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நவீன சீன மருத்துவ ஆய்வுகள் அவற்றில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் இருப்பதையும் உறுதி செய்திருக்கின்றன.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பல வகையான மூலிகை மருத்துவப் பொருட்கள் தனியாக தொடர் எழுதும் அளவுக்கு சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் சில வகை மூலிகைகள் சீனாவில் மட்டுமே கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்தி இருக்கிறார்கள். ஒரு குழுவினருக்கு இந்த வகை பண்டைய மருந்துகளையும் இன்னொரு குழுவினருக்கு நவீன மருந்தான நீரிழிவு சிகிச்சையின் நாயகன் Metformin - ஐயும் கொடுத்து ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆய்வின் முடிவில் இரண்டுக்கும் பெரிய வேறுபாடு எதுவுமில்லையாம். பண்டைய சீன மருத்துவம் நீரிழிவினை நன்றாகவே கட்டுப்படுத்துகிறதாம்.

பண்டைய சீன மருத்துவத்தின் சிறப்பு அம்சங்களைக் கருத்திற் கொண்டு ஒருங்கிணைந்த மருத்துவமாக நீரிழிவுக்கு சிகிச்சை செய்ய நீரிழிவு நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் சீனாவில் வெளியிடப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.   .

சர்க்கரைநோய் கண்டறியப்பட்டவுடன் பொதுவாக மருத்துவர்கள் சொல்வது, இப்போது நீங்கள் காய்கறி எடுத்துக் கொள்ளும் அளவுக்கு சோறும், சோறு எடுத்துக்கொள்ளும் அளவுக்கு காய்கறியும் சாப்பிடுங்கள் என்றுதான். சீனாவில் பொதுவாகவே இப்படித்தானாம். நாம் சாப்பிடும் அளவில் 30 விழுக்காடு அளவு – சிறிய கிண்ண அளவுதான் சோறு. காய்கறி அதிகம். எடுத்துக் கொள்கிறார்களாம். உணவு விசயத்தில் கூடுதல் கவனம்தான் அவர்களிடம். மேலும் அவர்கள் வயிறுமுட்ட சாப்பிடுவதில்லையாம். சீனா சென்று வந்துள்ள நண்பர் ஒருவரிடம் அங்குள்ள உணவு பழக்கம் பற்றி கேட்டபோது சொன்னவைதான் இவை.

சீனாவில் சைக்கிள் அதிகமாக பயன்படுத்துவதன் பின்னணியிலும் சர்க்கரை நோய் குறித்த நலச்செய்தி இருக்கத்தான் செய்கிறது.

நம் சுஸ்ருதாவுக்கு அடுத்து சர்க்கரை நோயாளிகளின் சிறுநீர் தேனைப் போன்று இனிப்பாக இருக்கிறது என்று பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருவர் சொன்னார். எப்படி சொன்னார்? Diabetes Mellitus – ல் Diabetes ஒரு கிரேக்க சொல். Mellitus ? பார்க்கலாம் அடுத்த வாரம்.

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய  ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்