திங்கள், 1 ஏப்ரல், 2024

அரைச் சர்க்கரை

 

                       அரைச் சர்க்கரை

                        குறுந்தொடர்

         சர்க்கரை நோய் பற்றிய முக்கிய வரலாற்று செய்திகள்  

 

வாரம் 14

   நீரிழிவுநோயினை நன்கு புரிந்த நோயாளி நீண்ட காலம் வாழ்கிறார்.

                                        எல்லியட்.பி.ஜோஸ்லின்.

 

அமெரிக்காவைச் சார்ந்த எலியட்.பி.ஜோஸ்லின் சர்க்கரை நோயில் சிறப்பு பயிற்சி பெற்ற முதல் அமெரிக்க மருத்துவர் என்ற பெருமைக்குரியவ்ர். சர்க்கரைநோய் குறித்து இவர் பேசி வந்த கருத்துக்களில் இரண்டு முக்கியமானது.

ஒன்று. 1920 காலகட்டத்திலேயே நோயின் தீவிரத் தாக்கத்தை உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று வலியுறுத்தி வந்தது.

இன்னொன்று. நோயாளிக்கு நலக்கல்வி போதிப்பதே முதலாவது சிகிச்சையாக இருக்க வேண்டும் என்பது. ( Health Education )

 


 

வருமுன் காப்போம் என்று இன்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். நோய் வராமல் தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி வருகிறோம். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பே அவர் பேசியும், செய்தும் வந்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு அதுதானே முக்கியம். நோய் ஏற்படாமல் தடுப்பது அல்லது நோயின் தீவிரம் அடையாமல் தடுப்பதே அவருடைய முதன்மையான நோக்கமாக இருந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து வலியுறுத்தியும் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.

சர்க்கரை நோயாளிகளின் பதிவேட்டினை ( Diabetes Registry ) உலகிலேயே முதலாவதாக பராமரித்து வந்திருக்கிறார். 1916-ல் தன்னுடைய சிகிச்சையின் அனுபவ அடிப்படையில் நீரிழிவுநோய் குறித்த முதல் புத்தகத்தை வெளியிட்டார்.. இந்த புத்தகம் அவருடைய வாழ்நாளிலேயே 10 பதிப்பினைக் கண்டது. உலக அளவில் நீரிழிவு குறித்து பேசக்கூடிய தலைவராய் இருந்திருக்கிறார்.

அடுத்து அவர் வெளியிட்ட நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்குமான நீரிழிவுநோய் குறித்த விளக்கக் கையேடு 14 பதிப்புக்களைக் கண்டது.

கார்போஹைட்ரேட் உணவைக் குறைத்தல், உடற்பயிற்சி, சர்க்கரையினை அடிக்கடி சோதித்து அதற்கேற்றாற்போல் இன்சுலின் அளவினை மாற்றுவதன் மூலம் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கமுடியும். இதன் மூலம் பக்க விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்தார். ஆனால் இது பல காலம் பிற அகச்சுரப்பியல் நிபுணர்களால்  விவாதத்துக்கு உட்பட்டாலும் அவருடைய இந்த ஆய்வு அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்றும் இதைத்தானே மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார்கள்.

நீரிழிவுநோய் குறித்த நீரிழிவுநோயின் ‘பைபிள் என்றழைக்கப்படும்  அவருடைய Joslin’s Diabetes Mellitus  புத்தகம் தற்போது 14ஆவது பதிப்பினைக் கண்டுள்ளது. மருத்துவ மாணவர்களிடையே பிரசித்தம். 


 

நீரிழிவுநோய் ஒரு பொதுசுகாதார பிரச்சினை என்று முதலில் பேசியது இவரே. அவர் இன்சுலினைக் கண்டுபிடிக்கவில்லையேத் தவிர 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவுநோய் ஆய்வு சிகிச்சையில் ஈடுபட்டு உலக அளவில் அது குறித்து பேசக்கூடிய அதிகாரப்பூர்வ மருத்துவராக தன்னிகரற்று விளங்கினார் என்பதுதான் வரலாறு.

தொடரும்

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய  ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்

 

திங்கள், 25 மார்ச், 2024

அரைச் சர்க்கரை

 

                       அரைச் சர்க்கரை

                        குறுந்தொடர்

சர்க்கரை நோய் பற்றிய வியப்பூட்டும் தெரிந்து கொள்ள வேண்டிய

                     வரலாற்று செய்திகள்

வாரம் 13

          ஆறு சிறந்த மருத்துவர்கள்:

               சூரிய ஒளி, நீர், காற்று,

               ஓய்வு, உடற்பயிற்சி

               மற்றும் உணவு

·         கெளதம புத்தர்

 

சர்க்கரைநோய் அன்றைய காலகட்டத்தில் இருந்தே தொடர் பிரச்சினையாக இருந்து வருவதை பதிவுகள் மூலம் அறிந்து வருகிறோம். இதுவரை பார்த்த வரையில் அதற்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பால் சிகிச்சை, ஆவாரம்பூ சிகிச்சை, நாவல்பழ சிகிச்சை, போன்றவற்றை கொடுத்து சிகிச்சை செய்ய முயன்றிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தோம். இது தவிர பெப்சின், கொடின் போன்ற மருந்துகளையும்கூட பயன்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் இன்சுலின் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு மேலே செல்வோம்.

 

டாக்டர்.JP.போஸ்.

 

யார் இந்த போஸ். சர்க்கரைநோய் வரலாற்றில் அதிகம் அறியப்படாமலேயே இருந்துவிட்டவர். 

டாக்டர்.J.P. போஸ் கல்கத்தாவில் நீரிழிவு பணியைத் துவக்கிய அதே காலகட்டத்தில் தான் கனடாவில் அந்த மிக முக்கிய வரலாற்று நிகழ்வு நிகழ்ந்ததாக டாக்டர்.மோகன்  தெரிவிக்கிறார். சர்க்கரை நோயாளிகளுக்கான அந்த நலம் தரும் சொல் என்ன என்பது அடுத்த சில பாராக்களில் தெரிந்துவிடும். இந்தியாவில் சர்க்கரைநோய் கட்டுப்படுத்துவதில் போஸினுடைய பங்கு மகத்தானது என்று மருத்துவர் வி. மோகன் புகழாரம் சூட்டுகிறார்.

காஷ்மீர் டாக்டர்.A.மித்ராவைப் பற்றி பார்க்கும்போது டாக்டர். மித்ராவின் பெயரில் நீரிழிவுநோய்க்கான ஆராய்ச்சி உதவித்தொகை ஏற்படுத்தப்பட்டதையும் அவருடைய இறப்புக்குப் பின் அவருடைய மனைவி துவக்கினார் என்பதையும் பார்த்தோம்.

அந்த உதவித்தொகையினை முதலாவதாக பெற்றவர் டாக்டர் .J.P.போஸ்.


 

 

கனடாவில் நிகழ்ந்த அற்புதம்

 

இந்தியாவில் கல்கத்தா மருத்துவர் JP.போஸ் சர்க்கரைநோய் ஆய்வில் தீவிர கவனம் செலுத்திய அதே காலகட்டத்தில் கனடாவில் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வுகள் சர்க்கரைநோய் சிகிச்சையில் ஏற்பட்டன. 100 ஆண்டுகளுக்கு முன் 1921-ல் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு சர்க்கரை நோய் சிகிச்சையில் மகத்தான சாதனை நிகழ்ந்தது.  மருத்துவத்தில் மிகப்பெரிய புரட்சி அது. இளம் மருத்துவரான பிரெட்ரிக் பாண்டிங், மருத்துவ மாணவரான சார்லஸ் பெஸ்ட், டொரொண்டோ பல்கலைகழக உடற்கூறியல் பேராசிரியர் JJ.மாக்லியோட் மற்றும் வேதியியலாளர் ஜேம்ஸ் பெர்ட்ராம் கூலிப்புடன் இணைந்து இந்த சாதனையினை நிகழ்த்தினார். இதற்காக பாண்டிங், மாக்லியோட் இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்தது.


 

உலகமெங்கும் மருத்துவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  சர்க்கரைநோயாளிகள் பலரது மரணம் தவிர்க்கப்பட்டது.

இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் முதலில் பயன்படுத்த தொடங்கியது டாக்டர் போஸ்தான். இன்சுலின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, அதன் குணாதசியங்கள் என்ன, எப்படி பயன்படுத்துவது எப்படி பாதுகாப்பாக சேமித்து வைப்பது என்பதுடன் அவர் இன்சுலினை கொண்டு சிகிச்சை செய்த ஆய்வு விபரங்களையும் தெளிவாக முழுமையாக பதிவிட்டிருக்கிறார். (1923).

இன்சுலினின் ஆற்றல் பாதிக்காத அளவுக்கு குளிர் சேமிப்பின் அவசியம் குறித்து இந்தியா முழுவதும் மருத்துவர்கள் கருத்துக்களை அந்தக்காலக்கட்டத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வகை பிராண்ட் இன்சுலினின் ஒரு தொகுதி ( Batch )  மருந்துகள் மட்டும் ஆற்றல் குறைந்து காணப்படுவதாக இந்தியா முழுவதும் இருந்து பொது மருத்துவர்கள் கருத்து தெரிவித்த  காரணத்தால் மருந்து சப்ளை செய்த லண்டன் நிறுவனம் மருந்துகள் அனைத்தையும் திரும்ப பெற்று இரண்டரை மாதம் தீவிர தரக்கட்டுப்பாடு ஆய்வுக்குட்படுத்தி ஆற்றல் இருப்பதை உறுதி செய்த பின்னரே மீண்டும் இந்தியாவுக்கு மருந்துகளை அனுப்பி வைத்திருக்கிறது.

தொடக்கத்தில் இன்சுலின் பற்றிய ஆற்றல் மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த பிரச்சினைகள் எழுந்தாலும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் உயிர் காக்கும் மருந்தாக இந்திய மருத்துவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோது அதற்கு எதிராக எப்படி கருத்துக்கள் பரப்பப்பட்டதோ அதே போன்று இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டபோதும் அன்று அதற்கு எதிராக கடுமையான பிரச்சாரங்கள் செய்ய்பட்டதாக வரவாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன

இன்சுலின் பயன்பாட்டுக்கு வந்த பிறகு இன்சுலின் சிகிச்சை பெறும் அனைத்து சர்க்கரைநோயாளிகளுக்கும் அடிக்கடியோ அல்லது சிலருக்கு தினமுமோ இரத்தத்தில் சர்க்கரை அளவு பார்க்க வேண்டிய தேவை அதிகரித்துவிட்டது. நகரப்பகுதிகளில் இதற்கான வசதி கிடைக்கின்ற போது கிராமப்பகுதியில் இரத்த பரிசோதனை பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இதனால் இன்சுலின் கொண்டு சிகிச்சை செய்வதில் மருத்துவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது. இந்த குறையினை போக்க கிராமப்பகுதிகளில் ஆய்வு செய்வதற்கென்று எளியமுறை பரிசோதனை ஒன்றினையும் டாக்டர் போஸ் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அது பயனுள்ளதாக இருந்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

இவருடைய பணிக்கு மேலும் பெருமை சேர்க்கிறது அண்மையில் டாக்டர். வி.மோகன் எழுதிய புத்தகமான , ‘Banding, Bose And Beyond’ .

தொடரும்

 

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய  ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்

 

 

.

சனி, 23 மார்ச், 2024

உலக விழி ஒளி பரிசோதனை நாள்

 

உலக விழி ஒளி பரிசோதனை நாள்.

World Optometry Day

Optometrist, Ophthalmic Assistant, Refractionist, Ophthalmic Technician, Ophthalmic officer,  Orthoptist,-இவர்கள் அனைவருமே உங்களது பார்வை  மற்றும் அது தொடர்பான பரிசோதனை ( Vision and its associated problems and appropriate correction ) செய்து அதற்கேற்ற வழிமுறைகள் மூலம் உங்கள் பார்வை தொடர்பான பிரச்சினைகளை சரி செய்து உங்கள் கண்களுக்கு ஒளி ஏற்றுபவர்கள்.


 

நீங்கள் எப்படியும் ஒருமுறையேனும் கண்மருத்துவமனைக்கு சென்றிருப்பீர்கள். அவர்களை நினவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி சொல்லும் நாள் தான் இன்றைய  உலக விழி ஒளி பரிசோதனை நாள். ( World Optometry Day )

திங்கள், 18 மார்ச், 2024

அரைச் சர்க்கரை

 

                        அரைச் சர்க்கரை

                         குறுந்தொடர்

    சர்க்கரை நோய் பற்றிய வியப்பூட்டும் தெரிந்து கொள்ள வேண்டிய

                     பரபரப்பான வரலாற்று செய்திகள்

வாரம் 12

 

ஆவாரம் பூ ஆறேழு நாளா காத்திருந்த பாடல் ‘தண்ணீர் தண்ணீர்  திரைப்படம் வெளிவந்த காலத்தில் பிரபலம். பாடல் வெளியான காலத்தில் பாடலை ரசித்தவர்களில் பலருக்கு அன்று, ஆவாரம் பூ என்று ஒன்று இருப்பது பற்றியோ மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்பது பற்றியோ எல்லாம் தெரியாது.

வயல் ஓரங்களிலும் சாலை ஓரங்களிலும் கேட்பாரின்றி  பூத்துக் கிடந்த பூக்கள்தான் இன்று சந்தைக்கு வந்துவிட்டன. ஆவாரம்பூ சாப்பிடு-சர்க்கரை கண்ட்ரோல் ஆகுது என்ற வாய்வழிச் செய்தியும் சமூக வலைதள செய்தியும் வைரலாக வைரலாக அதற்கு கிராக்கிதான்.

தஞ்சையை சார்ந்த ஓய்வு பெற்ற அறுவைச் சிகிச்சை மருத்துவர் P.S.முத்துசாமியின் 1887 ஆம் ஆண்டு பதிவுதான் ஆவாரம்பூ கொண்டு சர்க்கரை நோய்க்கு செய்த சிகிச்சை முறை பற்றி தெரிவிக்கிறது.

இன்றைய நவீன சித்த மருத்துவ ஆய்வு சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் மருத்துவக்கூறுகள் ஆவாரம்பூவில் இருப்பதை உறுதி செய்திருப்பதாக இனிப்புதேசம் கட்டுரை தொடரில் மருத்துவர்.கு.சிவராமனும் தெரிவிக்கிறார்.


 

ஆவாரம் பூ இன்று நடைப் பயிற்சி செல்லும் இடங்களில் குறிப்பாக பூங்கா, மைதானங்களின் சாலை ஓரங்களில் உங்களுக்காக காத்திருப்பதை நீங்கள் நடைப்பயிற்சி செல்பவராக இருந்தால் பார்க்கலாம். ஆவாரம்பூவினை உலர வைத்து  தேநீர் போட்டு காலை இரவு சாப்பிட சர்க்கரை நோய்க்கு நல்லது என்கிறார்.

ஆவிரை, ஆவிரம் என்று சங்க இலக்கியங்களால் பேசப்படும் ஆவாரம் அந்த காலகட்டத்தில் மருத்துவ முன்னேற்றம் இல்லாத போது பயன்படுத்தியவை என்பதை நினைவில் கொள்ளவும்.

டாக்டர். ஹைச்.ஜெ.பிளான்க் சர்க்கரைநோயாளிக்கு நாவல்பழம் கொண்டு சிகிச்சை அளித்ததாகவும் ஒரு செய்தியைப் பார்க்க முடிகிறது. இதைப் பார்த்து சிகிச்சை அளித்த இன்னொரு மருத்துவர் தன் நோயாளிக்கு அது பயனளிக்கவில்லை என்றும் பதிவிட்டிருக்கிறார்.

சர்க்கரைநோய்க்கு முறையான சிகிச்சை - மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மருத்துவ முன்னேற்றம் அடையாத அன்றைய காலத்திலேயே சர்க்கரைநோய் ஒரு பிரச்சினையாக இருந்ததும் அதனைக் கட்டுப்படுத்த கடுமையாக மெனக்கெட்டிருக்கிறார்கள் - போராடிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.

பெரியாரால் திராவிட லெனின் என்று அழைக்கப்பட்டவர் டாக்டர்.T.M. நாயர். சென்னை மாகாண நீதிக் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். இவர் பெயரில் சென்னை தியாகராய நகர் வழியாகச் செல்லும் சாலை உள்ளது.

பிறந்தது கேரளாவில். சென்னை மருத்துவக் கல்லூரியிலும் எடின்பர்க்கிலும்  மருத்துவம் பயின்ற டாக்டர் நாயர் சென்னை மாகாணத்தின் கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். இந்தியாவில் நீரிழிவு நோய் பரவலாக இருப்பது பற்றியும் அதனால் மக்கள் துன்பப்படுவது குறித்தும், ஏற்படும் இழப்புக்கள் குறித்தும் ஆழ்ந்த கவலையை பதிவு செய்திருக்கிறார்.


 

நோய் சரியாக வேண்டுமானால் சைவத்தை விடுத்து இறைச்சியை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று தம் நோயாளிகளிடம் வலியுறுத்தி இருக்கிறார்.

நீரிழிவு நோய்த்தாக்கம் பற்றி மனிதர் தொடர்ந்து புலம்புகிறார். நோய் பற்றிய புரிதல் மக்களுக்கு வேண்டும் என்றும் உடனடியாக சர்க்கரை நோய் ஆராய்ச்சித் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று 1914 ஆம் ஆண்டிலேயே இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். வருங்காலங்களில் நீரிழிவினால் இறப்பு அதிகரிக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார். தொடர்ந்து பேசியும் வந்திருக்கிறார்.

சென்னையில் புகழ்பெற்ற மருத்துவராக நோயாளிகளுக்கு சிகிச்சையும் அளித்திருக்கிறார்.

பொதுசுகாதாரத்திலும் ஆர்வம் கொண்டவராய் நீரிழிவு குறித்த ஆழ்ந்த அறிவும் கொண்டவராய் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவருமான மருத்துவர் நாயர், நீரிழிவின் பக்க விளைவுகளினாலேயே மரணத்தை தழுவ வேண்டியதாயிற்று. அவர் இறந்தது 1919.ல். அவர் இறந்து 2 ஆண்டுகள் கழித்துதான் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 1921-ல். ஒரு வேளை அவர் உயிருடன் இருக்கும்போதே இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாமோ?

தொடரும்,

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய ‘Making excellence a                                      Habit’ &  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்.