செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

வாத்தியாருக்கு மரியாதை

 

வாத்தியாருக்கு மரியாதை

 

நூலகத்தில்தான் முதன்முதலில் 7 ஆம் வகுப்பு படிக்கும்போது சுஜாதாவின்  நகரத்தினைப் பார்த்தேன். எடுக்கலாமா வேண்டாமா என்று பல முறை சிந்தித்து அதைப் படித்தேன். அந்த வயதில் அதில் அவர் பயன்படுத்திய பிரைமரி ஹெல்த் செண்டர், ஆப்தால்மாஸ்கோப், மெனின்ஜைட்டிஸ் போன்ற பல சொற்பிரயோகங்கள் புரியவில்லை. பின்னாளில் மருத்துவக் கல்லூரியில் படித்தபோது நகரம் முழுமையாக தெரிந்தது.  

ஆப்தால்மாஸ்கோப் கண்ணை சோதிக்க பயன்படும் ஒரு கருவி. கண்ணுக்குள் இருக்கும் லென்சு, விழித்திரை, பார்வை நரம்புகள், மேக்குலா போன்றவை இயல்பாக இருக்கிறதா என்று பார்க்க உதவும் கருவி. வாத்தியார் இப்படி எழுதியிருப்பார்.  ‘மருத்துவமனையில் - சுற்றியிலும் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து ஆப்தால்மாஸ்கோப் மூலம் அந்த பெண்ணின்( பாப்பாத்தி)  கண்ணுக்குள்ளேயே பார்த்தார்கள்என்று.

அப்பாவும் அக்காவும் அரசு இராஜாஜி மருத்துவமனையிலும், மதுரை மருத்துவக்கல்லூரியிலும் வேலை பார்த்ததால் நினைவுநாள் தெரிந்து அங்கு அடிக்கடி சென்றிருந்ததால் கதைக்களம் அனைத்துமே அத்துப்படி. தூக்கத்தில் கேட்டாலும் ஒப்பிக்க முடியும். அதனால் அரசு இராஜாஜி மருத்துவமனை குறித்த சுஜாதாவின் வர்ணாஜால வர்ணனைகளுடன்  ஏற்கனவே எனக்குத் தெரிந்த வார்டுகளுடனும் ஓ.பி டிப்பார்ட்மெண்ட்களுடனும் கூடவே ஓட முடிந்தது. இந்த அளவுக்கு ஒருவரால் வர்ணிக்க முடிகிறது என்றால் அவர் எந்த அளவுக்கு உள் வாங்கி இருப்பார்? இதுவே பின்னாளில் என்னை சுஜாதாவின் தீவிர அடிமையாக்கியது.  

அவருடைய எழுத்தின் தாக்கத்தால் சுமாரான எழுத்தில் மருத்துவக் கட்டுரைகளை எழுதவும் வைத்தது. இதுவரை 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள். சுஜாதாவின் ‘ஆதலினால் காதல் செய்வீரைஒட்டி  ‘ஆதலினால் கண்களைக் காப்போம்என்ற தலைப்பிலும் தினமணியில் 10 ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். அனைத்துமே வாத்தியாரின் ஆசியினால்.

இன்று நான் அவருக்கு செலுத்தும் மரியாதை அவருடைய  ‘விருப்பமில்லாத் திருப்பங்கள் நாவலின் தலைப்பை ஒட்டி எழுதும் இன்னுமொரு மருத்துவக் கட்டுரை.

 


          கண்ணில் ஏற்படும் விருப்பமில்லாத் திருப்பங்கள்.

                     மு.வீராசாமி

 

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. நாம் ஒன்று நினைத்திருப்போம். நடப்பதென்னமோ வேறு ஒன்றாக இருக்கும். அடுத்த நொடி என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? முன் கூட்டியே தீர்மானிக்க நாம் என்ன முனிவர்களா?

காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பி குடும்பத்தாருடன் பேசி மகிழ்ந்து மறுநாள் நேரத்தில் வேலைக்கு செல்ல நினைத்து இரவு நேரத்தில் சாப்பிட்டு படுக்கச் சென்றவர்,

     ‘இடப்பக்கமே இறை நொந்தது என்றார்

     கிடக்கப்படுத்தார் கிடந்தொழிந்தாரே   என்று திருமூலர் சொல்வதுபோல் நடந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை? இப்படி நேரும் என்று யாராவது கனவிலாவது நினைத்திருப்பார்களா? முன்கூட்டியே கணித்திருப்பார்களா? வாழ்க்கையில் இதுபோன்ற விருப்பமில்லாத் திருப்பங்களை சந்திக்காதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா?.

கண்ணிலும் இது போன்ற விருப்பமில்லாத் திருப்பங்கள்  ஏற்படலாம். ஆனால் இத்திருப்பங்கள் நாமாக வரவழைத்துக் கொண்டவை. தவிர்க்க முடிந்தவை.

 

அட தூசிதானே –அலட்சியம் வேண்டாம்

 

அன்றும் ஒரு சாதாரண நாள் போலவே அந்த ஆசிரியர் பள்ளிக்கு சென்றார். ஆனால் அந்த நாள் தன் வாழ்க்கையை புரட்டிப்போட வைக்கும் அசாதாரண நாள்  என்பது தெரியாமல்.

வழக்கம்போல் பாடத்தினை நடத்திக் கொண்டே கரும்பலகையில் சாக்பீஸால் எழுதிக் கொண்டிருந்தார். எழுதும்போது சாக்பீஸ் துகள் பறந்து காற்றில் நளினமாடத்தானே செய்யும். அதில் ஒன்றிரண்டு கண்ணிலும் விழலாம். ஆசிரியரின் கண்ணிலும் விழுந்த காரணத்தால் அனிச்சைச் செயலால் கண்ணை நன்றாகத் தேய்த்தார்.

கண்ணைத் தேய்த்துக்கொண்டே பாடங்களை நடத்தினார். கண்ணைக் கழுவி இருக்கலாம். அதைச் செய்யத் தவறிட்டார். கண்ணைத் தேய்க்காமலாவது இருந்திருக்கலாம். அதையும் செய்துவிட்டார். அதோடாவது நிறுத்தினாரா?

வீட்டிற்கு போய் வீட்டில் இருந்த பழைய கண்சொட்டு மருந்தினை எடுத்துப் போட்டார். கண்சிவந்து நீர் வடிந்து வலி ஏற்பட்டதால் மருந்தினைப் பார்த்ததும் போட்டால் தேவலாம், தூசி தானே சரியாகிவிடும் என்று நினைத்து மீண்டும் தவறு செய்தார்.

அவர் போட்ட மருந்து அவருடைய பாட்டிக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தியது போக மீதம் இருந்த பழைய மருந்து. அதுவும் ஸ்டீராய்டு . மேலும் எந்த மருந்தினையும் பாட்டிலைத் திறந்த ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. அதுவோ திறந்து நான்கு மாதங்களுக்கு மேல் காலாவதியான மருந்து. அவருடைய பிரச்சினைக்கு தேவையில்லாதது.

“சாக்பீஸ் துகள் விழுந்தவுடன் கண்ணைத் தொடர்ந்து தேய்த்ததால் கருவிழி புண்ணாகி ( CORNEAL ULCER ) விட்டது. இந்த கருவிழிப் புண்ணுக்கு ஸ்டீராய்டு மருந்தினையும் போடக் கூடாது. இதெல்லாம் சேர்ந்து கருவிழியினை முழுவதுமாக நாசம் செய்துவிட்டது. இனி பார்வை வராது. உங்களுக்கு கருவிழி மாற்று அறுவைசிகிச்சை மூலமே பார்வை கொடுக்க முடியும். நான்குநாள் கழித்து ஊற வைத்தபின் மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர் சொன்னதுதான் இது.

இதில் என்ன வருத்தமான செய்தி என்னவென்றால் கண்ணில் தூசி விழுந்தவுடன் எதுவுமே செய்யாமல் பேசாமல் இருந்தால்கூட போதும். தூசி விழுந்தவுடனேயே தானாக உற்பத்தியாகும் அதிகப்படியான கண்ணீரால் அதுவாகவே வெளியேறிவிடக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது.

                           நீதி: தூசி விழிந்தால் கண்ணைக் கசக்காதே

 

கிளாக்கோமாவுக்கு வழிவகுத்த தலைவலி

 

வயலும் வாழ்வும்போல இருந்தவர் ராமசாமி. வீடை விட்டால் வயல். வயலை விட்டால் வீடு. கடும் உழைப்பாளி .ஆனால் கூடவே தலைவலி. சில ஆண்டுகளாகவே இவருக்கு இது ஒரு தலைவலிதான். கிராமத்து செவிலியிடம் பாராசிட்டமால் வாங்கி சாப்பிடுவது வழக்கம். இல்லையென்றால் பெட்டிக் கடையிலும்தான் கிடைக்கிறதே.

அடிக்கடி மாத்திரை வாங்க வந்ததால் மருத்துவமனைக்கு வந்து கண்களை சோதித்துக் கொள்ளுங்கள் என்று செவிலி சொன்னதை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

ஊரில் ஒரு முறை நடைபெற்ற கண்சிகிச்சை முகாமில் கண்ணில் பிரசர் இருக்கிறது, மேல் சிகிச்சைக்காக நகரத்தில் இருக்கும் கண்மருத்துவமனைக்கு வரும்படி சொன்னார்கள்.

உடம்பில்தானே பிரசர் வரும். கண்ணில் வரும் என்கிறார்களே. பொய். மருத்துவமனைக்கு வரச் செய்து ஆப்ரேசன் செய்து பணம் பறிக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு அலட்சியப்படுத்தினார்.

தூரப்பார்வையும் பக்கப்பார்வையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பக்கத்தில் இருப்பவர் யாரென்றே தெரியவில்லை. சைடில் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று தெரியாமல் அவர்கள் மீது தடுமாறினார். வேறு வழியில்லாமல் அரசு மருத்துவமனைக்கு சென்றபோதுதான் கண்ணில்  ‘கிளாக்கோமா என்று குண்டைத் தூக்கிப் போட்டார்கள். ஏற்கனவே கண்ணில், நீர்அழுத்த உயர்வால் (கிளாக்கோமா)  பார்வைநரம்புகள் பட்டுப் போய் பார்வை 70 விழுக்காடு பறிபோய்விட்டது என்றும் மீதம் இருக்கும் 30 விழுக்காடு பார்வையினை மட்டுமே தொடர் சிகிச்சையால்  காப்பாற்ற முடியும் என்று சொன்னதைக் கேட்டு ராமசாமிக்கு மீதம் இருந்த பார்வையும் இருண்டு, தலை சுற்றியது.

                  நீதி: தலைவலி என்றவுடன் பாராசிட்டமாலைத் தேடாதே

 

சர்க்கரைநோய் விழித்திரைபாதிப்பில் கசியும் ரத்தம்.

 

வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கக்கூடிய சிவகாமிக்கு கண்ணில் திடீரென சிகப்பு. இரத்தக்கசிவு. சர்க்கரையை கண்ட்ரோலில் வைக்கச் சொன்னால் யார் கேட்கிறார்கள்.

சும்மா பொழுதுக்கும் அதைச் சாப்பிடாதே இதைச் சாப்பிடாதேன்னு சொல்லிக்கிட்டு. அப்புறம் எதற்கு பிறக்கனும். எதைத்தான் சாப்பிடுவது என்ற தொடர் புலம்பல்கள். வாக்கிங் போ வாக்கிங் போ என்றாலும் கேட்பதில்லை. சர்க்கரை என்ன சர்க்கரை. இப்ப என்ன செய்யப்போகிறது என்று டாக்டர் என்னவெல்லாம் சாப்பிடக்கூடாது என்று சொன்னாரோ அதை எல்லாம் ஒரு வெட்டு வெட்ட வேண்டியது. எதை செய்யச் சொன்னாரோ அதை சுத்தமாக செய்வது கிடையாது.

பொதுவாக சர்க்கரைக்கு முறையாக மருத்துவம் செய்து வந்தால் எந்த தொந்தரவும் இல்லை. ஒருவர் நிம்மதியாக இருக்கலாம். ஆனால் கண்ட்ரோல் செய்யவில்லை என்றால்தான் பிரச்சினையே.

இந்த பக்க விளைவுகள் எல்லாம் ஒரே நாளில் ஏற்படப்போவதில்லை. 5-லிருந்து 10 ஆண்டுகள் தொடர் சிகிச்சை செய்து கொள்ளாமல் கண்ட்ரோல் செய்யாமல் இருக்கும்போதுதான். சிவகாமிக்கு சர்க்கரை இருப்பது தெரிய வந்த நாளில் இருந்து கண்டுகொள்ளவே இல்லை. ஏம்மா சர்க்கரைக்கு மாத்திரை எல்லாம் சாப்பிட்டுக்கொண்டுதானே இருக்கிறீர்கள் என்று கேட்டால் அப்போதைக்கு தலையை ஆட்ட வேண்டியது. அப்புறம் சர்க்கரை சும்மா இருக்குமா? தன் வேலையைக் காட்டத்தானே செய்யும். கடும்பாதிப்புக்குப் பின் அழுது புலம்பி என்ன செய்வது?

சர்க்கரைநோய் விழித்திரைப்பாதிப்பில் விழித்திரையில் இரத்தக் கசிவு என்றால் சிக்கல்தான். பாதிப்பினால் ஏற்பட்ட பார்வை இழப்பினை சரி செய்ய முடியாது. சர்க்கரையைக் கண்ட்ரோல் செய்து லேசர் சிகிச்சையினால் மீதம் இருக்கும் பார்வையை மட்டுமே காப்பாற்ற முடியும்.

               

                    நீதி: சர்க்கரையை மதித்தால் அது உன்னை மிதிக்காது

 

விருப்பமில்லாத் திருப்பங்களைத் தவிர்க்க ஆதலினால் கண்களைக் காப்பீர்.

திங்கள், 26 பிப்ரவரி, 2024

அரைச் சர்க்கரை

                      

சர்க்கரைநோய் பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சொல்லும் குறுந்தொடர்

வாரம் 09

அறிவிப்பு: தொடரின் ஒவ்வொரு வாரமும் தொடக்கத்திலேயே சர்க்கரைநோய் பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சொல்லும் தொடர் என்று தெளிவாக சொல்லப்படுகிறது. அந்தந்த காலங்களில் சர்க்கரைநோய் எப்படி இருந்தது. என்ன பேசினார்கள், என்ன சிகிச்சை செய்தார்கள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம். ஆர்வமுள்ளவர்களுக்கானத் தொடர். வரலாற்று ஆவணங்களில் சொல்லப்பட்டிருப்பதுதான். என் கருத்து அல்ல. சர்க்கரைநோய்க்கு மருத்துவம் சொல்லும் தொடரும் அல்ல.  தற்போது வந்திருப்பது 19 ஆம் நூற்றாண்டுக்குள். பார்த்துக் கொண்டிருப்பது இந்திய மருத்துவ இதழ்களின் ஆவணங்களில் இருந்து.

 

வாரம் 09

 

‘வந்தேண்டா பால்காரன் பாடல் ரஜினியின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று.     வைரமுத்துவின் தத்துவ வரிகளை நிதானமாக ஒவ்வொரு சொல்லாக கேட்டுப் பாருங்கள். பசு, தன் ரத்தத்தில் ஒருபகுதியை பிரித்து பாலாக தரும் என்பார். பால் சத்தானது என்பது நமக்குத் தெரியும். ஆரோக்கியம் தரும் என்பதும் தெரியும். வேறு என்ன தெரியும். வீணாக்கவும் தெரியும். 


 

ஆமாம். நம்மூர் தியேட்டர்களில் முன்னணி நடிகர்களின் புதுப்பட ரிலீஸ் அன்று ரசிகர்கள் சட்டையை கழற்றி இடுப்பில் கட்டிக் கொண்டு தம் விருப்பமான நடிகரின் வானளாவிய கட் அவுட்டுக்கு பாலபிசேகம் செய்து சத்தான பாலினை லிட்டர் கணக்கில் வீணாக்குவது நமக்கு ஒன்றும் புதிதல்லவே. ஆனால் வியப்பான செய்தி பாலைக் கொண்டு சர்க்கரைநோய்க்கு சிகிச்சை செய்யவும் முயன்றிருக்கிறார்கள் என்பதுதான்.

தொடர்ந்து சர்க்கரைநோய்க்கு பல்வேறு சிகிச்சை முறைகளை அன்றைய மருத்துவர்கள் கையாண்டு வந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் டாக்டர்.L.D.ஸ்பென்சர் என்பவரின் பதிவு (Skim Milk) கொழுப்பு நீக்கிய பால் மூலம் சர்க்கரை நோயாளியினை நலப்படுத்திய செய்தியை தெரிவிக்கிறது. சர்க்கரைநோய்க்கு பாலா?  


 

அவரிடம் சிகிச்சைக்கு வந்த ஒருவருக்கு கடுமையான சர்க்கரைநோய். ஆள் மெலிந்து நோஞ்சானாக வேலைக்கு தகுதி இல்லை என்று சொல்லும் அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் இந்த பால் சிகிச்சைக்குப் பின் நன்றாக தேறியதாக சொல்கிறார்.

ஆனால் அவரே இது குறித்து பின்னர்,  பால் சிகிச்சை மூலம் நலமானது தற்காலிகமானதா நிரந்தரமானதா என்று தெரியவில்லை என்றும் இருந்தாலும் தற்போது நோயாளி நன்றாக தேறிவிட்டதாகவும் சொல்கிறார்.

 

சரி அந்த பால் சிகிச்சைதான் என்ன?

 

பிரிட்டிஸ் மருத்துவரான டாக்டர். டான்கின் என்பவர்தான் சர்க்கரைநோய்க்கு பால் சிகிச்சையினை ( Dr.Donkins’s Skim milk treatment -1873) பரிந்துரைக்கிறார்.  அதன் மூலம் சர்க்கரை நோயாளிகளை குணப்படுத்தினாராம். முதல் நாள் இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு ஒரு தடவை கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப்.

இரண்டாவது நாளில் இருந்து இந்த அளவு மாறும். ஒவ்வொரு நாளும் ஒரு அளவு சொல்கிறார். இப்படி கொடுத்து 15 நாளில் குணப்படுத்துவதாக அவர் சொல்லி இருக்கிறார்.

டான்கின், இந்த பால் சிகிச்சை குறித்து புகழ்பெற்ற மருத்துவ சஞ்சிகையான லான்செட்டில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி இருக்கிறார். இருந்தாலும் மற்ற மருத்துவர்கள், ஆய்வாளர்கள் அன்று அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.

மேலும் அந்த காலகட்டத்தில் இது பலத்த சர்ச்சைக்கும் உள்ளாகி இருக்கிறது. எடின்பர்க் மருத்துவ இதழ் கூட இவருடைய பால் சிகிச்சை குறித்து மிகக்கடுமையான விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறது. சர்க்கரைநோய்க்குரிய சிகிச்சையாக இதை பயன்படுத்தக்கூடாது என்றும் எச்சரித்திருக்கிறது.  

சர்க்கரைநோய் வரலாறு வியப்பாகத்தான் போகிறது.

 

எச்சரிக்கை: நாம் பார்த்துக் கொண்டிருப்பது இன்சுலினோ, வேறு எந்த மருந்தோ கண்டுபிடிக்கப்படாத காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் அப்போதைக்கு சர்க்கரையைக் கட்டுப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

 

சுவையான செய்திகள் தொடரும்.

                                .

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய  ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்

புதன், 21 பிப்ரவரி, 2024

கிட்டப்பார்வை 01

 

        கிட்டப்பார்வையால் கிட்டக்கப் போய் பார்க்கும் பிள்ளை

 

கிட்டப்பார்வை பிரச்சினை குறித்து நிறைய பேசியாயிற்று. ஆனாலும் பிள்ளைகளின் பார்வைக்கு பெற்றோர் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை.

நேற்று வீட்டுக்கு குழாய் பிரச்சினையை சரிசெய்ய வந்தவர் பேச்சுவாக்கில் ஏழாவது படிக்கும் தன் மூத்தப் பிள்ளைக்கு இரண்டு மாதமாக கண்ணில் பிரச்சினை என்றார். பள்ளியில் கரும்பலகையில் ஆசிரியர் எழுதிப்போடுவது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கரும்பலகைக்கு கிட்டக்க கிட்டக்கப் போய் பார்த்து எழுத வேண்டி இருப்பதாகவும் பிள்ளை சொன்னதாக சொன்னார். ( கிட்டக்க-பக்கத்தில்; மதுரைப் பேச்சு)      

பிள்ளை சொல்லி இரண்டுமாதமாச்சு. பிள்ளையை டாக்டரிடம் அழைத்துச் சென்றீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார். எங்க சார், வீட்டு வேலையே சரியாகப் போய்விடுகிறது. நேரமே இல்லை என்றார். என்னத்தைச் சொல்ல!

தனக்கு இருக்கும் பிரச்சினையை பொதுவாக பிள்ளைகளால் சொல்லத் தெரியாது. அவர்களே நேரடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்து கொள்ளவும் முடியாது. பெற்றோர் கவனிக்காமல் வேறு யார் செய்வார்கள்?


 

பிள்ளைக்கு கண்பார்வை சரியாகத் தெரியாவிடில் பாடங்களை சரியாக படிக்க முடியாது. கற்பதில் பெரும்பகுதி பார்ப்பதன் மூலம்தான் நடைபெறுகிறது என்பது பலருக்குத் தெரியவில்லை. பார்வை தெளிவாக இல்லாவிட்டால் பிள்ளையால் தெளிவான பார்வை-காட்சியை உணர முடியாது. கல்வியில் பின் தங்க நேரிடும். அறிவுசார் குறைபாட்டிற்கும் வழிவகுத்துவிடலாம்.

மூளையின் சரியான வளர்ச்சியைப் பொறுத்து நலமான பார்வை அமையும். சில சமயங்களில் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு கண்ணின் வளர்ச்சியைப் பாதித்து பார்வையும் பாதிக்கலாம். மூளையில் ஏற்படும் குறைபாடு காரணமாக மூளைக்கு ஆக்சிஜன் செல்வது குறைந்து பார்வை புரணியைப் பாதித்து பார்வை நரம்பினையும் பாதிக்கலாம். இத்தகைய வளர்ச்சிக் குறைபாடுகள் நேரடியாக பார்வைகுறைபாட்டிற்கு வழிவகுக்கலாம்.

வீட்டுகுத் தேவையானதை எல்லாம் உடனே வாங்குகிறோம். கண்ட கண்ட பொருட்களை அமேசானில் தேவை இல்லாவிட்டாலும் வாங்கிக் குவிக்கிறோம். செல்போனில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனே கதறிக் கொண்டு அந்த பிரச்சினையை சரி செய்பவர் எங்கிருக்கிறார் என்று விசாரித்துத் தேடிக் கண்டுபிடித்து சரி செய்து கொள்கிறோம். ஆனால் பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துகிறோமா? பிள்ளை தனக்கு இருக்கும் பிரச்சினையை சொன்னதற்கு பாராட்டக்கூட வேண்டாம். அதற்குரிய தீர்வினை தரவேண்டியது பெற்றோர் கடமை அல்லவா. அவர்கள் பிறகு வேறு யாரிடம் போய் சொல்வார்கள்?

 

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர்( வி.ஓ)

நலவாழ்வு எழுத்தாளர்

மதுரை

திங்கள், 19 பிப்ரவரி, 2024

அரைச் சர்க்கரை

 

சர்க்கரைநோய் பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சொல்லும்                     குறுந்தொடர்

    

     டாக்டர்: உங்களுக்கு சர்க்கரை இருக்கா

     நோயாளி: சர்க்கரை இல்லை டாக்டர். ஆனால் சுகர் இருக்குன்னு                     சொல்லி இருக்காங்க.

         ( அடிக்கடி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்வு )

வாரம் 08

 

சர்க்கரைநோய்க்கு வயதென்ன?  அறிவியலில் வளர்ச்சி அடையவில்லை மருத்துவ முன்னேற்றமும் இல்லை. அந்தக் காலகட்டத்திலும் அப்போதைய அனுபவ அறிவில் இருக்கின்ற மூலிகைகளைக் கொண்டு சர்க்கரைநோய்க்கு  சிகிச்சை அளித்திருக்கிறார்கள். சர்க்கரைநோய் பற்றிய அவர்களுடைய அடிப்படை அனுமானங்கள் பலவற்றுடன் இன்றைய நவீன மருத்துவ உலகமும் ஒத்துப் போவது வியப்பானதுதான். சர்க்கரைநோயும் ஒரு தொடர்கதையாய் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

வரலாற்றுக் காலம் முடிந்து நவீன காலம் தொடங்கி இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் கிடைத்த வரலாற்று ஆவணச் செய்திகள் சர்க்கரை குறித்த சுவையான தகவல்களைத் தெரிவிக்கிறது. கடந்த 200 ஆண்டு கால சர்க்கரைநோய் செய்திகள் அனைத்துமே சுவையானவை.  சர்க்கரைநோய்க்கு மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படாத காலம்.

கி.பி. 1800 கால கட்டத்தில்  இந்தியா முழுவதும் இருந்து மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் தாங்கள் பார்த்த புது நோயாளியின் விபரம், அளித்த சிகிச்சை, அதன் அனுபவங்கள் மற்றும் மருத்துவச் செய்திகளை பரிமாறிக் கொள்ளும் களமாக இருந்திருக்கிறது இந்த இந்திய மருத்துவ இதழ்  ( Indian Medical Gazette ). போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியது.

கல்கத்தாவை மையமாகக் கொண்டு வெளிவந்த இந்த இதழ். மருத்துவர்களின் அன்றைய சமூக வலைதளம். தொலைபேசி இல்லை. இணையம் இல்லை. எங்கோ ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வினை பிறர் அறிய பல நாட்கள் ஆகும் சூழல். அப்படிப்பட்ட சூழலில் மருத்துவர்களின் விடிவெள்ளியாக இருந்து ஒருங்கிணைத்திருக்கிறது இந்த இதழ். 

  

அதில் உள்ள பதிவுகள் அனைத்துமே வரலாற்று ஆவணங்கள். அந்த காலகட்டத்தில் இருந்த நோய்ச் சூழல், மருத்துவ பிரச்சினைகள், அதை மருத்துவர்கள் கையாண்ட அணுகுமுறைகள் அனைத்தும் விரிவாக இருக்கின்றன. அதில் உள்ள மருத்துவர்களின் பங்களிப்புக்கள் அனைத்தும் அற்புதமானவை. அதை முழுமையாக படித்து தனியாக எழுதும் எண்ணமும் உள்ளது. தற்போதைக்கு சர்க்கரை...ஏறக்குறைய ஒவ்வொரு இதழிலும் சர்க்கரை பற்றிய செய்திகள் பரவலாக தொடர்கின்றன. முக்கியமான செய்திகள் மட்டும் இங்கே.

1867 – ல் டாக்டர். கமக்ஸ் நாத் அச்செர்ஜீ, இந்திய மருத்துவ இதழில் அவர் சிகிச்சை அளித்த இரண்டு சர்க்கரைநோயாளிகள் பற்றிய செய்திகளை பதிவிட்டிருக்கிறார். அவர் பார்த்த அந்த ஒருவர் உடல் பருமனாக இருந்திருக்கிறார். இனிப்பு அதிகம் சாப்பிடுபவராம். வசதிபடைத்தவராம். சர்க்கரைநோயாளியான அவருக்கு உடலில் கொப்பளங்கள்.

இன்னொருவருக்கு உடலில் கட்டி. இருவருக்குமே பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்த பிறகு அய்யம் ஏற்பட்ட பின்னரே சோதித்ததில் சர்க்கரை இருப்பது தெரியவந்தது என்று அவர் சொல்வதில் நமக்கு செய்தி இருக்கிறது.

இன்றும் இப்படித்தானே. வேறு ஏதாவது உடல்நலப் பிரச்சினைக்கு செல்லும்போதுதானே சர்க்கரை இருப்பது பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படுகிறது. இப்படிக் கண்டுபிடிக்கப்படுவதுதானே  அதிகம். அதே போல் உடல்பருமனுக்கும் சர்க்கரைக்கும் உள்ள தொடர்பு பற்றி இன்று நாம் அதிகம் பேசி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1871 –ல் பதிவான செய்தி. அந்த காலகட்டம் முழுவதும் கல்கத்தாவில் மத்திய மற்றும் உயர்தர குடும்பங்களில், குடும்பத்தில் ஒருவரேனும் சர்க்கரை நோயால் இறந்து போனதாக  தெரிவிக்கின்றது.

தொடரும் செய்திகள் அனைத்துமே சுவையானவை. அதில் ஒன்று சர்க்கரைநோய்க்கு ஆடைநீக்கிய பால் சிகிச்சை. வியப்பைத் தரும் அந்த செய்தி? வரும் வாரம் பார்க்கலாம்.

 

 

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய  ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்

 

 

.

 

திங்கள், 12 பிப்ரவரி, 2024

அரைச் சர்க்கரை

 

          சர்க்கரை நோய் பற்றிய வரலாற்று செய்திகள்

 

குறுந்தொடர்

வாரம் 07

 

     இனிப்பு இல்லா வாழ்வினை கசப்பாக நினைக்காதீர்கள்.

     சர்க்கரையைக் கட்டுப்படுத்தி நலமாக வாழ்வதே இனிமை.

                                                                                                           

மல்லிகை மணக்கும். சிறுநீர்? நமக்கு முன்னர் கழிப்பறையில் சிறுநீர் கழித்து சென்றவர் சரியாக நீர் ஊற்றாவிட்டாலே அடுத்து செல்பவரால் உள்ளே செல்ல முடியாது. மூக்கினைப் பொத்திக் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் தாமஸ் வில்லிஸ் செய்த செயலைப் பாருங்கள்.

17 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவராக போற்றப்பட்ட ஆக்ஸ்போர்டினைச் சார்ந்த இவர் சர்க்கரை நோயாளியின் சிறுநீர் இனிப்பாக இருக்கும் என்பதை தெரிவித்தார். எப்படி?

தன்னுடைய நோயாளியின் சிறுநீரை சுவைத்துப் பார்க்க துணிச்சல் வேண்டுமே? மனிதர் சுவைத்துப் பார்த்துதான் சொன்னார்.  சர்க்கரை, தேனைப் போன்று இனிப்பாக இருக்கிறது என்ற கமெண்ட்ஸ் வேறு. 

அவருக்கு எவ்வளவு ஆர்வம், ஈடுபாடு, ஆய்வுக் கண்ணோட்டம் இருந்திருந்தால் சுவைத்துப் பார்க்கத் துணிந்திருப்பார். அதுவரை எந்த மருத்துவரும் செய்யாத துணிகர செயல் அது.

1679 –ல் எழுதிய ‘மருந்துகள் பகுத்தறிவு என்ற நூலில் அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார். ஏற்கனவே நம் சுஸ்ருதா சர்க்கரை நோயில் சிறுநீர் இனிப்பாக இருக்கும் சென்று சொல்லி இருப்பதை பார்த்தோம். ஆனால் அந்த செய்தியை தாமஸ் அறிந்திருக்கவில்லை.  இவர் மீண்டும் இனிப்பு என்கிறார். 

 

ஆனால் அவரால் சர்க்கரை நோயாளிகளின் சிறுநீர் ஏன் இனிப்பாக இருக்கிறது என்பதை சொல்ல முடியவில்லை. அதற்குரிய காரணத்தை 100 ஆண்டுகளுக்குப் பிறகே சொன்னார்கள்.

சிறுநீரை சுவைத்துப் பார்த்து சொன்ன முதல் மருத்துவர் இவர்தான். Mellitus என்ற பதத்தை முதலில் உருவாக்கியவர் இவரே அதுவரை Diabetes   என்று மட்டுமே சொல்லி வந்ததை  Mellitus சேர்த்து   Diabetes   Mellitus என்று அழைத்தார். இனிப்பு என்ற பொருள்படும் இந்த Mellitus ஒரு லத்தீன் சொல்..

உணவு பழக்கத்தோடும் மனநிலையோடும் சர்க்கரை நோய்க்கு தொடர்ப்பு இருப்பதாக நினைத்தார். குறிப்பாக மனச்சோர்வினால் ஏற்படுவதாக கருதினார்.

மூளையின் செயல்பாடு மற்றும் நரம்பியல் குறித்தும் அவர் விரிவாக கூறி இருக்கிறார்.

நரம்பியல் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர். நொதித்தல், இரத்தம் ஏற்றுதல், காய்ச்சல், சிறுநீர், தசை இயக்கம், மூளையின் உடற்கூறியல், நரம்புகளின் விளக்கம் மற்றும் பயன்பாடு, வலிப்பு, ஸ்கர்வி, உட்பட பல தலைப்புக்களில் விரிவான கருத்துக்களைத் தெரிவித்த பல்துறை வித்தகரான தாமஸ் இறுதியில் நிம்மோனியாவால் காலமானார்.

தொடரும்.

( குறிப்பு- இது சர்க்கரை நோய் பற்றிய வரலாற்றுச் செய்திகளை மட்டுமே சொல்லும் ஒரு தொடர். )