திங்கள், 26 பிப்ரவரி, 2024

அரைச் சர்க்கரை

                      

சர்க்கரைநோய் பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சொல்லும் குறுந்தொடர்

வாரம் 09

அறிவிப்பு: தொடரின் ஒவ்வொரு வாரமும் தொடக்கத்திலேயே சர்க்கரைநோய் பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சொல்லும் தொடர் என்று தெளிவாக சொல்லப்படுகிறது. அந்தந்த காலங்களில் சர்க்கரைநோய் எப்படி இருந்தது. என்ன பேசினார்கள், என்ன சிகிச்சை செய்தார்கள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம். ஆர்வமுள்ளவர்களுக்கானத் தொடர். வரலாற்று ஆவணங்களில் சொல்லப்பட்டிருப்பதுதான். என் கருத்து அல்ல. சர்க்கரைநோய்க்கு மருத்துவம் சொல்லும் தொடரும் அல்ல.  தற்போது வந்திருப்பது 19 ஆம் நூற்றாண்டுக்குள். பார்த்துக் கொண்டிருப்பது இந்திய மருத்துவ இதழ்களின் ஆவணங்களில் இருந்து.

 

வாரம் 09

 

‘வந்தேண்டா பால்காரன் பாடல் ரஜினியின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று.     வைரமுத்துவின் தத்துவ வரிகளை நிதானமாக ஒவ்வொரு சொல்லாக கேட்டுப் பாருங்கள். பசு, தன் ரத்தத்தில் ஒருபகுதியை பிரித்து பாலாக தரும் என்பார். பால் சத்தானது என்பது நமக்குத் தெரியும். ஆரோக்கியம் தரும் என்பதும் தெரியும். வேறு என்ன தெரியும். வீணாக்கவும் தெரியும். 


 

ஆமாம். நம்மூர் தியேட்டர்களில் முன்னணி நடிகர்களின் புதுப்பட ரிலீஸ் அன்று ரசிகர்கள் சட்டையை கழற்றி இடுப்பில் கட்டிக் கொண்டு தம் விருப்பமான நடிகரின் வானளாவிய கட் அவுட்டுக்கு பாலபிசேகம் செய்து சத்தான பாலினை லிட்டர் கணக்கில் வீணாக்குவது நமக்கு ஒன்றும் புதிதல்லவே. ஆனால் வியப்பான செய்தி பாலைக் கொண்டு சர்க்கரைநோய்க்கு சிகிச்சை செய்யவும் முயன்றிருக்கிறார்கள் என்பதுதான்.

தொடர்ந்து சர்க்கரைநோய்க்கு பல்வேறு சிகிச்சை முறைகளை அன்றைய மருத்துவர்கள் கையாண்டு வந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் டாக்டர்.L.D.ஸ்பென்சர் என்பவரின் பதிவு (Skim Milk) கொழுப்பு நீக்கிய பால் மூலம் சர்க்கரை நோயாளியினை நலப்படுத்திய செய்தியை தெரிவிக்கிறது. சர்க்கரைநோய்க்கு பாலா?  


 

அவரிடம் சிகிச்சைக்கு வந்த ஒருவருக்கு கடுமையான சர்க்கரைநோய். ஆள் மெலிந்து நோஞ்சானாக வேலைக்கு தகுதி இல்லை என்று சொல்லும் அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் இந்த பால் சிகிச்சைக்குப் பின் நன்றாக தேறியதாக சொல்கிறார்.

ஆனால் அவரே இது குறித்து பின்னர்,  பால் சிகிச்சை மூலம் நலமானது தற்காலிகமானதா நிரந்தரமானதா என்று தெரியவில்லை என்றும் இருந்தாலும் தற்போது நோயாளி நன்றாக தேறிவிட்டதாகவும் சொல்கிறார்.

 

சரி அந்த பால் சிகிச்சைதான் என்ன?

 

பிரிட்டிஸ் மருத்துவரான டாக்டர். டான்கின் என்பவர்தான் சர்க்கரைநோய்க்கு பால் சிகிச்சையினை ( Dr.Donkins’s Skim milk treatment -1873) பரிந்துரைக்கிறார்.  அதன் மூலம் சர்க்கரை நோயாளிகளை குணப்படுத்தினாராம். முதல் நாள் இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு ஒரு தடவை கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப்.

இரண்டாவது நாளில் இருந்து இந்த அளவு மாறும். ஒவ்வொரு நாளும் ஒரு அளவு சொல்கிறார். இப்படி கொடுத்து 15 நாளில் குணப்படுத்துவதாக அவர் சொல்லி இருக்கிறார்.

டான்கின், இந்த பால் சிகிச்சை குறித்து புகழ்பெற்ற மருத்துவ சஞ்சிகையான லான்செட்டில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி இருக்கிறார். இருந்தாலும் மற்ற மருத்துவர்கள், ஆய்வாளர்கள் அன்று அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.

மேலும் அந்த காலகட்டத்தில் இது பலத்த சர்ச்சைக்கும் உள்ளாகி இருக்கிறது. எடின்பர்க் மருத்துவ இதழ் கூட இவருடைய பால் சிகிச்சை குறித்து மிகக்கடுமையான விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறது. சர்க்கரைநோய்க்குரிய சிகிச்சையாக இதை பயன்படுத்தக்கூடாது என்றும் எச்சரித்திருக்கிறது.  

சர்க்கரைநோய் வரலாறு வியப்பாகத்தான் போகிறது.

 

எச்சரிக்கை: நாம் பார்த்துக் கொண்டிருப்பது இன்சுலினோ, வேறு எந்த மருந்தோ கண்டுபிடிக்கப்படாத காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் அப்போதைக்கு சர்க்கரையைக் கட்டுப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

 

சுவையான செய்திகள் தொடரும்.

                                .

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய  ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்

4 கருத்துகள்:

  1. மிகவும் தொன்மை வாய்ந்த செய்திகளை அருமையாக தொகுத்து வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. தங்கள் பெயரினை தெரியப்படுத்தினால் மகிழ்வேன்

      நீக்கு